சத்தமின்றி கிளம்புகிறது கத்திரி வெயில்.. ஒரு தாக்கமுமின்றி இன்றுடன் முடியுது அக்னி நட்சத்திரம்! ஜாலி
சென்னை: கடந்த 4ம் தேதி அக்னி நட்சத்திரம் என்று சொல்லக்கூடிய கத்திரி வெயில் தொடங்கியது. ஏற்கனவே, வெயில் பாடாய்படுத்திக் கொண்டிருந்த நிலையில், கத்திரியும் தொடங்கிவிட்டதால், பொதுமக்கள் கலக்கத்திற்கு ஆளானார்கள்.. அக்னி நட்சத்திர காலத்தில் வெயில் மேலும் அதிகரிக்கும் என்றும் அஞ்சப்பட்டது. எனினும், எந்தவிதமான தாக்கமுமின்றி 25 நாட்கள் அக்னி நட்சத்திரம் நடைபெற்றது.
இந்த வருடம் கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே தமிழகத்தில் வெயில் சுட்டெரிக்கத் தொடங்கிவிட்டது. கடந்த பிப்ரவரி மாதம் முதலே வெயில் கொளுத்த துவங்கிவிட்டது.. கடந்த சில ஆண்டுகளாகவே மார்ச் மாதம் முதலே கோடை காலம் தொடங்கிவிடுவதால், இந்த வருடமும் வெயில் சுட்டெரிக்க போகிறது என்ற கலக்கம் ஏற்பட்டது.. அதிலும் இடங்களில் வெயிலின் அளவு 100 டிகிரியை தாண்டியதை கண்டு, கதிகலங்கி போனார்கள் பொதுமக்கள்.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே இருந்து வந்தது.. இதற்கு பிறகு கடந்த 4ம் தேதி கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் ஆரம்பமானது.
பயத்தில் உறைந்துபோன மக்கள்
மே 4 ம் தேதியான தொடங்கும் அக்னி நட்சத்திரம் மே 28 ம் தேதி முடிவடையும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.. ஏற்கனவே வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில் அக்னி நட்சத்திரமும் தொடங்கிவிட்டதால், வெயிலின் தாக்கம் கடுமையாகவே இருக்கும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
குறிப்பாக காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் என்பதால் மக்கள் வெளியே செல்வதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டது.. வெப்பத்தின் தாக்கம் வழக்கத்தைவிட குறைந்தே இருக்கும் என்ற ஆறுதல் அறிவிப்பும் வெளியாகியிருந்தது.. அதற்கேற்றபடி, மே மாதம் முதல் வாரத்தில் வெப்பம் இயல்பைவிட அதிகரித்து காணப்பட்டாலும், படிப்படியாக வெயிலின் தாக்கம் குறைய துவங்கியது.. ஒரு புறம் வெயில், மறுபுறம் மழை என்று வித்தியாசமான வானிலை சூழலும் நிலவியது.
ஆறுதல் தந்த தென்மேற்கு பருவமழை
இதனிடையே, தென் மேற்கு பருவமழையும் முன்கூட்டியே தொடங்கிவிட்டதால், தமிழ்நாட்டில் சில இடங்களில் மழையும் பெய்ய தொடங்கியது.. ஜூன் முதல் வாரத்தில் கேரளாவில் தொடங்க வேண்டிய தென்மேற்கு பருவமழையும் ஒரு வாரத்திற்கு முன்னதாக தொடங்கியதால், வெயிலின் அளவு குறைந்தது. இதனால் வெயிலின் கொடுமையிலிருந்து மக்கள் மெல்ல மெல்ல மீண்டு வர துவங்கினார்கள்.. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களின் பல பகுதிகளில் நல்ல மழை பெய்தது..
அந்தவகையில், கடந்த 10 நாட்களாகவே வெப்பமும், அனலும் குறைந்து, குளிர்ச்சியான சூழல் தமிழகத்தின் பல பகுதிகளில் நிலவுவதை காண முடிகிறது.. இந்த கோடை காலத்திலும், கோவை, நீலகிரியில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு, பேய் மழை கொட்டியதும் யாருமே எதிர்பார்க்காத ஒன்று..
இன்றுடன் விடை பெறுகிறது
இப்போது வடமேற்கு வங்கக்கடலில், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருப்பதால், வருகிற 31ம் தேதி வரையிலும் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் கடந்த 4-ந் தேதி தொடங்கிய கத்திரி வெயில் இன்றுடன் விடைபெறுகிறது. இந்த முறை வெயிலின் தாக்கம் குறைந்தே காணப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியிருந்த நிலையில், அதன்படியே எந்தவிதமான கொடுமையையும் இன்னலையும் ஏற்படுத்தாமல், எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் அக்னி நட்சத்திரம் அமைதியாக விடைபெறுகிறது. இது தமிழக மக்களை நிம்மதிக்குள்ளாக்கி வருகிறது.












Click it and Unblock the Notifications