குடும்ப அட்டைதாரர்களுக்கு குட்நியூஸ்.. பாமாயிலை விடுங்க, இதுவும் ரேஷனில் தரப்போறாங்களாம்.. சூப்பர்ல
சென்னை: தமிழக ரேஷன் கடைகளில், பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்கப்பட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கைகள் வலுவாகிவரும்நிலையில், தமிழக கூட்டுறவுத்துறை முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
ரேஷன் கடைகளில் கேழ்வரகு வினியோகிக்க தமிழக அரசு முடிவு செய்து, கடந்த வருடம்முதல், நீலகிரி, தர்மபுரி மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளில் 2 கிலோ கேழ்வரகு இலவசமாக வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது. இதையடுத்து, மாநிலம் முழுவதுமே, இந்த திட்டத்தை விரிவுப்படுத்த தமிழக அரசு முயற்சித்து வருகிறது.

எனவேதான், கூடுதலாக மாதம் ஒன்றுக்கு 15,000 மெட்ரிக் டன் கோதுமை ஒதுக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தது. அத்துடன், விவசாயிகளிடமிருந்து வருடம் முழுவதும், கேழ்வரகு கொள்முதல் செய்வதற்கு, இந்திய உணவு கழகத்திடம் அனுமதியையும் தமிழக உணவு துறை கேட்டிருந்ததாக தகவல் வெளியாகியிருந்தன.
விவசாயிகள்: கேழ்வரகு வழங்கும் விவசாயிகளுக்கு, மத்திய அரசின் சார்பில் 100 கிலோ எடை உடைய குவிண்டாலுக்கு, 3,846 ரூபாய் வழங்கப்படுவதால், ஈரோடு, சேலம் ஆகிய 2 மாவட்டங்களில் கொள்முதல் செய்யவும், ஆண்டு முழுதும் விவசாயிகளிடம் இருந்து, 17,000 டன் வாங்க அனுமதிக்குமாறும், மத்திய அரசிடம் தமிழக அரசு கேட்டிருந்தது.
தமிழகத்தின் நுகர்வை கருத்தில் கொண்டு, மத்திய அரசும் இதற்கு அனுமதி தந்திருந்தது.. தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு மாவட்டங்களில், கேழ்வரகு கொள்முதலும் துவங்க உள்ள நிலையில், இதற்காக, நேரடி கொள்முதல் நிலையங்களும் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன. இந்த வருட இறுதி வரை கொள்முதலை நீட்டிக்குமாறு தமிழக அரசு கோரிக்கையும் விடுத்திருந்த நிலையில், இதனையும் மத்திய அரசு ஏற்றுள்ளது.
ரேஷன் கடைகள்: கேழ்வரகு கொள்முதல் 1,000 டன்னை தாண்டி, 1,290 டன்னாக அதிகரித்த நிலையில், ரேஷன் கடைகள் வாயிலாக, சிறுதானிய வகையைச் சேர்ந்த கேழ்வரகு வழங்க தமிழக அரசு திட்டமிட்டும் வருகிறது.
இப்படிப்பட்ட சூழலில், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசு கூடுதல் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், செய்தியாளர்களிடம் பேசும்போது முக்கிய தகவல் ஒன்றை கூறியிருக்கிறார்.
குடோன்கள்: அதில், "தமிழகத்தில் மட்டும் 20.44 லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 380 உணவு தானிய சேமிப்புக் கிடங்குகள் உள்ளன. இதை மேம்படுத்தும் விதமாக 12 ஆப்ரேஷனல் குடோன்கள் ரூ.34 கோடி மதிப்பிலும், மற்ற கிடங்குகள் ரூ.32 கோடி மதிப்பிலும், பாதிப்படைந்த கிடங்குகள் ரூ.95 கோடி மதிப்பிலும் மேம்படுத்தப்பட்டு வருகிறது.
நியாயவிலைக் கடைகளில் சிறுதானியங்களையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ராகி எனப்படும் கேழ்வரகை வெளிமாநிலங்களில் இருந்து இந்திய உணவு கழகம் மூலம் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
விடுமுறை: அதேபோல, ரேஷன் கடைகளுக்கு முதல், இரண்டாம் வெள்ளிகளிலும் மூன்றாவது, நான்காவது ஞாயிற்றுக் கிழமைகளிலும் விடுமுறை என்று இருப்பதை மாற்றி, ஒரே கிழமையில் விடுமுறை அளிப்பது குறித்து பணியாளர்கள் சங்கங்களிடம் பேசி முடிவெடுக்கப்படும்.
பாமாயில் தட்டுப்பாடு இல்லாமல் வழங்கப்பட்டு வருகிறது. அரிசி, சர்க்கரைக்கு தட்டுப்பாடே கிடையாது. நியாயவிலைக் கடைகளில் அடையாளம் அறிய விரல் ரேகை மட்டுமல்லாது வருங்காலங்களில் ஆண்ட்ராய்டு ஆப் மூலம் அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.












Click it and Unblock the Notifications