பத்திரப்பதிவு விபரங்கள், ஆதார் நம்பரை பட்டாவில் சேர்க்க முடிவு.. நிலம் வாங்குவோருக்கு குட் நியூஸ்?
சென்னை: தமிழகத்தில் வீடு அல்லது மனை வாங்கும் மக்கள், பத்திரப்பதிவு மட்டும் போதாது என்பதையும், அதனைத் தொடர்ந்து பட்டா மாறுதல் செய்யப்படுவது மிகவும் முக்கியம் என்பதையும் இப்போது அதிகமாக உணர தொடங்கியுள்ளனர். இதனால், பட்டா தொடர்பான பணிகளில் கவனம் செலுத்த வேண்டிய சூழல் இன்று உருவாகியுள்ளது. அந்தவகையில் முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை, பட்டா மாறுதல் உள்ளிட்ட வருவாய் துறை பணிகளை எளிமையாக்கும் நோக்கில் அதிகாரிகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.. பொதுமக்கள் விண்ணப்பித்ததுமே, குறைந்த காலத்தில் பட்டா மாறுதல் பெறும் வகையில் நடைமுறைகளை மாற்ற முயற்சிகளும் நடந்து வருகின்றன.

பட்டா விவரங்கள்
தற்போது வழங்கப்படும் பட்டாவில், மாவட்டம், தாலுகா, கிராமம், நில உரிமையாளரின் பெயர், தந்தை அல்லது கணவர் பெயர், சர்வே எண், உட்பிரிவு எண், நிலத்தின் பரப்பளவு மற்றும் வகைப்பாடு போன்ற அடிப்படை விவரங்களே இடம்பெறுகின்றன. ஆனால், இந்த பட்டா வடிவமைப்பு, பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டதாகும். பல வருஷங்கள் ஆகியும், இதே வடிவமைப்பே இன்றும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இப்போதைய சூழலில் நிலம் மற்றும் சொத்து தொடர்பான விவகாரங்கள் சிக்கலானதாக மாறியுள்ளதால், பட்டாவில் கூடுதல் தகவல்கள் இடம்பெற வேண்டிய தேவை உருவாகியுள்ளது.
பட்டா வடிவமைப்பு
ஏனென்றால் பட்டாவில் உள்ள விபரங்களை பத்திரத்துடன் ஒப்பிட்டு சரிபார்க்கும்போது, பல்வேறு குழப்பங்கள் ஏற்படுகின்றன. இதனால், பட்டாவின் வடிவமைப்பை மாற்றி, அதில் கூடுதல் விபரங்கள் சேர்க்கப்பட வேண்டும்.
அந்தவகையில், சொத்தின் நிலை, பயன்பாடு, உரிமை தொடர்பான தெளிவான விவரங்கள் பட்டாவில் சேர்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை மேலோங்கி வருகிறது.. குறிப்பாக பட்டாவில், தொடர்புடைய பத்திரத்தின் எண், சொத்தின் நான்கு எல்லைகள் குறித்த விபரம், உரிமையாளரின் ஆதார் எண் போன்ற விபரங்களை சேர்க்க என்ற கோரிக்கைகள் வலுத்து வந்தது..
பத்திரத்தின் எண்
இந்நிலையில், பத்திரத்தின் எண், சொத்தின் நான்கு எல்லைகள் உள்ளிட்ட விவரங்களை பட்டாவில் சேர்க்கும் பணிகளை வருவாய் துறை கையில் எடுத்துள்ளதாம்.. இதனால் எதிர்காலத்தில் ஏற்படும் சட்ட சிக்கல்களை தவிர்க்க முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
காரணம் விற்பனை பத்திர எண் என்பது நிலம், வீடு போன்ற சொத்து வாங்கி-விற்கும்போது சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்படும் பத்திரத்திற்கு வழங்கப்படும் தனித்த அடையாள எண்ணாகும்..
சொத்து உரிமையை நிரூபிக்க, பட்டா மாற்றம் செய்ய, வங்கி கடன், வீட்டுக்கடன் பெற வேண்டுமானால் இந்த எண் முக்கியம்.. வில்லங்கச்சான்று, நில அளவை, எல்லை, உரிமையாளர் விவரம் சரிபார்க்கவும், எதிர்காலத்தில் சொத்தை விற்கவும் இந்த எண் கண்டிப்பாக தேவைப்படும்.
அதேபோல சொத்தின் எல்லைகள் என்பது, கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என்று ஒரு நிலம் அல்லது வீட்டின் சுற்றுப்புற வரம்புகளைத் தெளிவாக குறிப்பிடுவதாகும்.. எல்லைத் தகராறு வராமல் தடுக்கவும், பட்டா, சர்வே, அளவீடு செய்யவும், விற்பனை, வாங்குதல், கடன் பெறவும், நீதிமன்றத்தில் ஆதாரமாக பயன்படுத்தவும் இந்த எல்லைகள் அவசியமாகும்..
சொத்தின் எல்லைகள்
இந்த எல்லைகள் தவறாக இருந்தால், அண்டை வீட்டாருடன், அல்லது நிலம் உடையவருடன் தகராறு வரலாம், பட்டா மாறுதல் தாமதமாகலாம். சொத்தை மாற்றுவதிலும் தாமதமாகலாம்.. சொத்தை அடகு வைக்க முடியாத நிலைமையும் ஏற்படலாம். அந்தவகையில்தான் விற்பனை பத்திர எண், சொத்தின் எல்லைகளை பட்டாவில் சேர்க்க வேண்டும் என்கிறார்கள்..
பட்டாவில் ஆதார் எண்ணை இணைப்பதன் மூலம், சொத்து உரிமையாளரின் அடையாளத்தை உறுதி செய்ய முடியும்,.. மோசடிகளை தடுக்கலாம், ஆதார் இணைப்பால் தவறான பெயர் மாற்றம், இரட்டை பட்டா போன்றவை குறையும்... பட்டா, சர்வே, நிலப் பதிவுகள் அனைத்தும் ஒரே நபருடன் சரியாக இணைக்க.நில உரிமையாளர் சரிபார்ப்பு விரைவாக முடியும் என்று நம்பப்படுகிறது.
பட்டாவில் ஆதார் நம்பர்
எனவேதான், விற்பனை பத்திர எண், சொத்தின் எல்லைகள், ஆதார் நம்பர் உள்ளிட்ட ஆகிய விபரங்களை பட்டாவில் சேர்க்கும் முயற்சி நடப்பதாக தெரிகிறது..
இதுகுறித்து வருவாய்த்துறை தரப்பில் சொல்லும்போது, ஏற்கனவே பட்டாவின் வடிவமைப்பை மாற்றவும், அதில் கூடுதல் விபரங்கள் சேர்க்கவும் அவசியம் உள்ளது. இந்நிலையில், மேற்கண்ட பணிகளையும் மேற்கொள்ள நில நிர்வாக ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்கள்.












Click it and Unblock the Notifications