அண்ணாசாலை அதிருது.. சென்னையில் "பாரத் பந்த்".. அரசு பஸ்கள் இன்று ஓடாதா? தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
சென்னை: மத்திய அரசுக்கு எதிராக தொழிற்சங்கத்தினர் நடத்தும் போராட்டத்திற்கு போக்குவரத்து தொழிற்சங்கங்களும் கலந்து கொள்ளும் என தெரிகிறது. இதையடுத்து, முக்கிய உத்தரவு ஒன்றினை தமிழக அரசு பிறப்பித்திருக்கிறது.
மத்திய அரசுக்கு எதிராக தொழிற்சங்கத்தினர் இன்று நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்த போராட்டம் ஆரம்பமாகி உள்ளது.. நாடு முழுவதும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், தனியார் மயமாக்கலை கைவிட வேண்டும், குறைந்தபட்ச ஊதியத்தை அதிகப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் இந்த போராட்டத்தை தொடங்கியுள்ளன.

அண்ணாசாலை: இந்த போராட்டத்திற்கு, அனைத்து தொழிற்சங்கங்களும் வேலைநிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன. அந்தவகையில், சென்னையில் அண்ணா சாலையில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு இன்று போராட்டம் நடைபெறுகிறது.
இந்த வேலை நிறுத்த போராட்டத்தில், தபால், தொலைதொடர்பு துறை, ரெயில்வே, மின்சார வாரியம், தொழிற்சாலைகள், போக்குவரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த தொழிலாளர்கள் பங்கேற்க உள்ளனர். இவர்களுடன் விவசாய சங்கத்தினரும் பங்கேற்க உள்ளனர்.
தொழிலாளர்கள்: அதேபோல, போக்குவரத்து தொழிற்சங்கங்கள் முழுமையாக பங்கேற்கும் என்றும், இதனால் பஸ் போக்குவரத்து பாதிக்கப்படும் என்றும் சிஐடியு தொழிற்சங்க செயலாளர் சவுந்தரராஜன் அறிவித்திருந்தார். அந்தவகையில், இன்றைய தின போராட்டத்தில் போக்குவரத்து கழக தொழிலாளர்களும் டிரைவர், கண்டக்டர்களும் கலந்து கொள்வார்கள் என தெரிகிறது. இதனால் பஸ் போக்குவரத்து சேவை பாதிக்கப்படும் சூழலும் ஏற்பட்டுள்ளது.
அதனால்தான், சீரான பஸ் போக்குவரத்து நடைபெறுவதற்கான தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் ஆல்பிஜான் வர்கீஸ், கிளை மேலாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறார்.
கோரிக்கை: அதில் உள்ளதாவது : "தமிழக அரசு போக்கு வரத்து கழகங்களில் செயல்படும் சில தொழிற் சங்கங்கள், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (16-ந் தேதி) அகில இந்திய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிகிறது.
எனவே போக்குவரத்து டிரைவர் கண்டக்டர்கள், தொழிலாளர்கள் அனை வரும் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்காமல் வழக்கம் போல் பணிக்கு வரவேண்டும். டிரைவர்,கண்டக்டர்களுக்கு 16-ந் தேதி வழங்கப்பட்ட விடுமுறை யாவும் ரத்து செய்யப்படுவதோடு, வார ஓய்வு, பணி ஓய்வில் உள்ளவர்களும் கட்டாயம் பணிக்கு வர வேண்டும்.
நடவடிக்கை: அவ்வாறு பணிக்கு வராதவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கையும், வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளுமாறு தூண்டிவிடும் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படும்" என தெரிவித்துள்ளார். இந்த சுற்றறிக்கை அனைத்து பணிமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.. நோட்டீஸ் போர்டிலும் ஒட்டப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications