அரசு ஊழியர்களுக்கு வந்த அறிவிப்பு.. ஓய்வுபெறும் 3 மாதம் முன்பே ஓய்வூதிய பலன்களுக்கு விண்ணப்பிக்கலாம்
சென்னை: அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதிய பலன் விரைந்து கிடைக்க, அவர்கள் ஓய்வு பெறுவற்கு, 3 மாதங்களுக்கு முன்பே, ஓய்வூதிய கருத்துருவை கணக்கு துறைக்கு அனுப்ப வேண்டும் என்று இந்திய தணிக்கை மற்றும் கணக்கு துறையின் மாநில கணக்காயர் வெள்ளியங்கிரி தெரிவித்துள்ளார்.
இந்திய கணக்கு மற்றும் தணிக்கை துறை சார்பில் வார விழா கொண்டாட்டம் சென்னை தி.நகரில் உள்ள சர் பிட்டி தியாகராய அரங்கத்தில் நடைபெற்றது.. இதில் சிறப்பு விருந்தினராக நிதித்துறை செயலாளர் ஜி.கே.அருண் சுந்தர் தயாளன் கலந்துகொண்டார்.
மேலும், தெற்கு ரயில்வேயின் தலைமை தணிக்கை அதிகாரி அனிம் செரியன், தமிழ்நாடு தணிக்கை துறையின் முதன்மை கணக்காளர் ஜெனரல் ஆனந்த் ஆகியோரும் கலந்து கொண்டனர்.. இந்த விழாவில், கணக்கு மற்றும் தணிக்கை துறையில் அடுத்த கட்டு நகர்வு குறித்தும், சந்தேகங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

தமிழக நிதித்துறை: பிறகு தமிழக நிதித்துறை செயலாளர் அருண் சுந்தர் பேசும்போது, "நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு கணக்குத்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. ஐஎப்எஸ்ஆர் செயலி கொண்டு வந்த பிறகு அனைத்து பணிகளும் இணையதளத்தின் வாயிலாக துரிதமாக நடக்கின்றன. ஆங்காங்கே சில பிரச்னைகள் இருந்தாலும் அதனை உடனடியாக தீர்ப்பதாகவும், அனைத்து அதிகாரிகளும் ஒன்றிணைந்து செயல்பட்டால் எந்த பிரச்னையும் வராது" என்றார்.
இதையடுத்து கணக்கு மற்றும் தணிக்கை துறையின் பொது கணக்காளர் வெள்ளியங்கிரி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது, கணக்கு மற்றும் தணிக்கை துறையின் வார விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, சென்னையில் உள்ள மத்திய மற்றும் மாநில அதிகாரிகளை அழைத்து கணக்கு துறையில் உள்ள ஓய்வூதிய பண பலன்கள் குறித்தும், அதனை மாநில அரசிடமிருந்து எப்படி சேகரித்து நாம் செயல்படுத்துவது என்பது குறித்த வழிமுறைகளும் விளக்கப்பட்டன.
அரசு ஊழியர்கள்: மாநில அரசு அதிகாரிகளின் கணக்குகள் தொடர்பான சந்தேகத்தை தீர்த்து வைப்பது இந்த கூட்டத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது. அரசு ஊழியர்களின் ஓய்வூதிய விபரங்கள் சரிபார்க்கப்பட்டு, ஓய்வூதியம் வழங்க, அரசுக்கு பரிந்துரை செய்யப்படுகிறது. 1 ரூபாய் என்றாலும், அதை தணிக்கை மற்றும் கணக்கு துறை, பொறுப்பான முறையில் கையாள்கிறது.
அதேபோல், தமிழ்நாடு அரசு துறையிலிருந்து மட்டும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஓய்வு பெறுகிறார்கள்..காவல், கல்வி, வருவாய் துறைகளில் இருந்து தான் அதிக பேர் ஓய்வு பெறுகிறார்கள்.. ஆனால், உரிய ஆவணங்கள் இணைக்கப்படாமல் வரும் கருத்துரு மீது சந்தேகம் எழுப்பினால், பதில் அளிப்பதில் தாமதம் கூடாது... அப்படி தாமதம் ஏற்பட்டால், ஓய்வூதிய கருத்துரு மீது நடவடிக்கை எடுப்பதிலும் காலதாமதம் ஏற்படும்.
ஓய்வூதிய பலன்: எனவே, ஒருவர் ஓய்வுபெற்ற உடனே, ஓய்வூதிய பலன் கிடைக்க, ஓய்வு பெறுவதற்கு 3 மாதங்களுக்கு முன்பேயே, அவரது ஓய்வூதிய கருத்துருவை கணக்கு துறைக்கு அனுப்ப வேண்டும். அதை விரைவாக பரிசீலித்து, ஆவணங்கள் விடுபட்டால், அதை கேட்டு பெற்று, உடனே ஓய்வூதியம் கிடைக்க வழிவகை செய்யப்படும். இதனால் அடுத்த மாதமே ஓய்வூதியம் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றார்.












Click it and Unblock the Notifications