பென்ஷன் பணம் வந்துருமா? அரசு ஊழியர்களுக்கு தீபாவளி சர்ப்ரைஸ் இருக்குமா? இன்று கருத்து கேட்கும் குழு
சென்னை: பழைய ஓய்வூதிய திட்டம் அரசு ஊழியர்களுக்கு எட்டாக்கனியாகவே இருந்து வருவதாக கூறப்பட்டு வருகிறது.. திமுக அரசு தன்னுடைய வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்று கூறி அரசு ஊழியர்கள் பலகட்ட போராட்டங்களையும் முன்னெடுத்து வருகிறார்கள்.. இந்நிலையில், ககன்தீப்சிங் பேடி தலைமையில் அமைக்கப்பட்ட குழுவானது, இன்று பல்வேறு சங்க பிரதிநிதிகளுடன் இன்று கருத்து கேட்க உள்ளதாக தகவல் வெளியாகியிருப்பது, எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.
தமிழகத்தில் மத்திய அரசின் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் நடைமுறையில் உள்ளது. திமுக தேர்தல் வாக்குறுதிப்படி, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த, மத்திய அரசு முடிவெடுத்துள்ள நிலையில், அதை ஏற்காமல், பழைய ஓய்வூதிய திட்டத்தை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிறந்த ஓய்வூதிய திட்டம்
இதையடுத்து, தமிழகத்தில் சிறந்த ஓய்வூதிய திட்டத்தை தேர்வு செய்வதற்காக, ஊரக வளர்ச்சி துறை செயலர் ககன்தீப் சிங் பேடி தலைமையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு குழு ஒன்று அமைக்கப்பட்டது.
அதாதவது கடந்த பிப்ரவரி 4ம் தேதி தமிழக அரசு ஒரு குழுவை அமைத்தது. ஊரக வளர்ச்சித்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப்சிங் பேடி இந்த குழுவின் தலைவர் ஆவார்.. மொத்தம் 3 உறுப்பினர்கள் இந்த குழுவில் உள்ளனர். இந்த குழு 9 மாதங்களுக்குள் தனது அறிக்கையை அரசிடம் கொடுக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது..
இன்று கருத்து கேட்பு
இந்த குழுவினர், 4 கட்டங்களாக, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களிடம் கருத்து கேட்க முடிவெடுத்துள்ளனர்.
முதற்கட்ட கருத்து கேட்பு, சென்னை தலைமை செயலகத்தில் கடந்த வாரம் நடைபெற்றது.. இதில், அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட சங்க பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர்.. ஒவ்வொரு சங்கத்தில் இருந்தும் இருவர் வீதம் அனுமதிக்கப்பட்டு, 3 நிமிடங்கள் கருத்துகள் கேட்கப்பட்டன..
இதை தொடர்ந்து 25ம் தேதி, செப்டம்பர் 1 மற்றும் 8ம் தேதிகளில், அடுத்தகட்ட கருத்து கேட்பு கூட்டம் நடக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இன்றையதினம், மீண்டும் கருத்து கேட்பு கூட்டம் நடக்க போவதாக கூறப்படுகிறது.. அனைத்து சங்கங்களின் கருத்துக்களையும் ககன்தீப்சிங் பேடி குழுவினர் இன்று கேட்டறிய உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
பணி வரம்புகள்
கடந்த 20 நாட்களுக்கு முன்பு, பாமக தலைவர் அன்புமணி ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.. அதில், "ஆகஸ்ட் 3ம் தேதியுடன் குழு அமைத்து 6 மாதங்கள் முடிந்துவிட்ட நிலையில், 3ம் தேதிக்குள் அறிக்கையை கொடுக்க வேண்டும். ஆனால், தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களுடன் ககன்தீப் சிங் பேடி தலைமையிலான குழு குறைந்தது ஒரு முறையாவது பேசியிருக்க வேண்டும். ஆனால், ககன்தீப்சிங் பேடி குழு இதுவரை எந்த வேலையும் செய்யவில்லை.
குழுவின் பணி வரம்புகள் அறிவிக்கப்பட்டு விட்டதாக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சொல்லியிருந்தார். ஆனால், அந்த பணி வரம்புகள் என்னவென்று யாருக்கும் தெரியவில்லை. இந்த விஷயத்தில் அரசு மிகவும் ரகசியமாக இருக்கிறது.
அரசு ஊழியர்கள்
ககன்தீப்சிங் பேடி குழு குறித்த நேரத்தில் அறிக்கையை கொடுத்தாலும், அரசு அதை ஏற்றுக்கொள்ளாது. மாறாக, குழுவின் பதவிக்காலத்தை இன்னும் சில மாதங்களுக்கு நீட்டித்து, அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் கிடைக்காமல் பார்த்துக்கொள்ளும். திமுக அரசு நினைத்திருந்தால், எப்போதோ பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தி இருக்கலாம். அதற்கு பணம் ஒரு தடையே இல்லை. ஆனால், பழைய ஓய்வூதிய திட்டத்தை கொடுக்க திமுக அரசுக்கு மனமில்லை. அதற்காகத்தான் ககன்தீப் சிங் குழுவையே அரசு அமைத்துள்ளது..
ராஜஸ்தான், மேற்கு வங்கம், ஜார்கண்ட், சத்தீஷ்கர், பஞ்சாப், கர்நாடகம், இமாச்சல பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம் அமலில் உள்ளது. அதேபோல், தமிழ்நாட்டிலும் பழைய ஓய்வூதிய திட்டத்தை தி.மு.க அரசு செயல்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், தேர்தலுக்குப் பிறகு பாமக ஆட்சிக்கு வந்தால், பழைய ஓய்வூதிய திட்டத்தை கண்டிப்பாக அமல்படுத்தும்.
எனவே, ககன்தீப் சிங் பேடி தலைமையில் குழுவானது, காலம் கடத்தாமல், செப்டம்பர் மாதத்திற்குள் இந்த குழுவினர் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். அரசும் அதே வேகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தும் அறிவிப்பை, தீபாவளி பரிசாக வெளியிட வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி ஏற்கனவே கூறியிருந்தார்..
இந்நிலையில் கடந்த வாரத்தை தொடர்ந்து இன்றைய தினமும், குழுவினர் கருத்துக்கேட்பு நடக்க போவது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications