பென்ஷன் வருமா? காத்திருக்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்! தமிழ்நாடு அரசுக்கு பறந்த முக்கிய கோரிக்கை
சென்னை: தமிழக அரசுக்கு, தமிழ்நாடு பழைய ஓய்வூதிய திட்ட மீட்பு இயக்கம் கண்டனம் முக்கிய கோரிக்கை ஒன்றை விடுத்திருக்கிறது.
பழைய ஓய்வூதிய திட்டமானது, தமிழக அரசு ஊழியர்களிடையே மிகவும் முக்கியமும், முக்கியத்துவமும் வாய்ந்ததாக பார்க்கப்பட்டு வருகிறது.. இதை செயல்படுத்த வேண்டும் என்று நீண்ட காலமாகவே கோரிக்கைகள் நிலவி வருகின்றன.
ஆனால், அதற்கு தற்சமயம் வாய்ப்பில்லை என்று நிதித்துறை அமைச்சராக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டசபையிலேயே கடந்த 2022-ம் ஆண்டு தெரிவித்திருந்தார்.

ஓய்வூதிய திட்டம்: காரணம், தனிநபர் ஒருவருக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தில் ஆண்டுக்கு ரூ 2 லட்சம் செலவாகிறது. அதே நேரம் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் தனி நபருக்கு ரூ 50 ஆயிரம்தான் செலவாகிறது. அதனால் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது சாத்தியமில்லாதது என்ற விளக்கத்தையும் கூறியிருந்தார். எனினும், தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பில் அரசுக்கு கோரிக்கைகள் வந்தவண்ணம் உள்ளது.
இந்நிலையில்தான், தற்போது நடந்துவரும் சட்டசபை கூட்டத்தில் இதற்கான அறிவிப்பு வெளியாகுமா என்று எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, "அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பான கொள்கை முடிவு பரிசீலனையில் உள்ளது. இதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய அமைத்த குழு மற்றும் பல்வேறு அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம் என்று கூறியிருக்கிறார்.
பழைய ஓய்வூதிய திட்டம்: பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு சாத்தியமே கிடையாது என்று அன்று பிடிஆர் சொன்ன நிலையில், தற்போது இந்த திட்டத்தை தமிழக அரசு பரிசீலித்து வருவதாக தங்கம் தென்னரசு கூறியிருப்பது, அரசு ஊழியர்களிடம் மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.
எனினும், ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த முடியாததற்கு அரசு நிதிநிலையை காரணம் காட்டுவது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு சமம், இது முற்றிலும் ஏமாற்று வேலை என்று தமிழ்நாடு பழைய ஓய்வூதிய திட்ட மீட்பு இயக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கியதாஸ் அளித்துள்ள பேட்டி ஒன்றில், வழக்கம் போல் பழைய ஓய்வூதிய திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது என்று நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். இது சிபிஎஸ்ல் உள்ள 6.5 லட்சம் அரசு ஊழியர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஓய்வூதியம்: ஐந்து ஆண்டுகளாக சிபிஎஸ் திட்டத்தில் 35,000 ஆசிரியர்கள், அலுவலர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். ஆனால் அவர்களுக்கு மாத ஓய்வூதியம், பணிக்கொடை என எதுவும் அரசு வழங்கவில்லை. பணியின்போது இறந்தவர்களின் குடும்பங்களுக்கு குடும்ப ஓய்வூதியம், இறப்பு பணிக்கொடை (டெத் கிராஜூட்டி) வழங்கப்படவில்லை.
இப்போது சிபிஎஸ் திட்டத்தில் உள்ள 6.5 லட்சம் ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசின் பங்களிப்பாக ரூ.7200 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்கிறது. இந்த நிதியிலிருந்து தற்போது சிபிஎஸ் திட்டத்தில் ஆண்டுதோறும் ஓய்வு பெறும் 5 ஆயிரம் பேருக்கு, பழைய ஓய்வூதிய திட்டம் அடிப்படையில் மாத ஓய்வூதியம், பணிக்கொடை உள்ளிட்ட பணப் பலன் வழங்க நான்கில் ஒரு பங்கு நிதியே அரசுக்கு செலவாகும்.
முழு பூசணிக்காய்: முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் ஏதோ தனியாக நிதி தேவை என முதல்வரும், அமைச்சரும் கூறிவருவது ஏமாற்றும் செயல். இது கண்டிக்கத்தக்கது.
எனவே, ராஜஸ்தான், பஞ்சாப், இமாச்சல பிரதேசம் உட்பட 6 மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்படுத்தப்பட்ட நிலையில், தமிழக அரசு சிபிஎஸ் பிடித்தம் தொகையை கார்ப்பரேட் நிறுவனங்களில் முதலீடு செய்வதில் மட்டும் கவனமாக உள்ளது. எனவே உடனடியாக பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications