சிதம்பரம் நடராஜன் கோயில்.. அரசுக்கு கையகப்படுத்தும் எண்ணமில்லை.. அமைச்சர் சேகர்பாபு ஓபன் டாக்!
சென்னை: சிதம்பரம் நடராஜர் கோவிலை பொறுத்தவரை அரசுக்கு கையகப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இல்லை என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். கோவில்களில் நடக்கும் முறைகேடுகள் தொடர்பாக மக்களே புகார் அளிக்கும் வகையில், இலவச எண்ணை அறிமுகப்படுத்திய அமைச்சர் சேகர்பாபு, இலவச எண்ணில் மக்கள் புகார் அளிக்க தொடங்கும் போது கோயில்களில் முறைகேடுகள் குறையும் நம்புவதாக தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடர்ந்து மக்கள் மத்தியில் பேசப்பட்டுக் கொண்டே இருக்கிறார். தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் உள்ள முக்கிய கோவில்களை புனரமைப்பது, கும்பாபிஷேகம் நடத்துவது என மக்களின் நன்மதிப்பை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் கோவில்களில் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், கோயில்களில் நடக்கும் முறைகேடுகள் கண்டறியும் வகையில் முக்கிய நடவடிக்கை அமைச்சர் சேகர்பாபு எடுத்துள்ளார்.

கோயில்களில் முறைகேடு
அதன்படி, கோவில்களில் நடக்கும் முறைகேடுகள் தொடர்பாக மக்களே புகார் அளிக்கும் வகையில், கோயில் தொடர்பான ஆலோசனைகள், குறைகளை தெரிவிக்க இலவச கஸ்டமர் கேர் எண் அறிவிக்கப்பட்டு உள்ளது. 1800 425 1757 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு கோவில்களில் நடக்கும் முறைகேடுகள் பற்றி ம் மக்கள் புகார்களை கொடுக்க முடியும். தமிழகத்தில் உள்ள 44 ஆயிரம் கோயில்களை கண்காணிக்கும் வகையில் 24 மணி நேரமும் இந்த சேவை செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சேகர்பாபு பேட்டி
தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கை காரணமாக கோவில்களில் முறைகேடு நடப்பது குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் சேகர்பாபு கூறுகையில், சிதம்பரம் நடராஜர் கோவிலை பொறுத்தவரை எடுத்து வைக்கின்ற ஒவ்வொரு அடியும் மிக அழுத்தமாகவும், ஆதாரப்பூர்வானமான நடவடிக்கைகளை சேகரித்து கொண்டிருக்கிறோம்.

நிச்சயம் நடவடிக்கை
புகார்கள் விசாரணைக்கு வந்த போதே நீதிமன்றம் செல்வோம் என்று தீட்சிதர்கள் தரப்பிலே கூறினார்கள். அப்போது நீதிமன்றம் செல்வார்கள் என்று எதிர்பார்த்தோம், ஆனால் இதுவரைக்கும் நீதிமன்றம் செல்லவில்லை. அடுத்தக்கட்ட ஆய்வுக்கான நகர்வுகளை துறையின் செயலாளர், ஆய்வாளர் செய்துக் கொண்டிருக்கிறார்கள். திருக்கோவிலில் அத்துமீறல்கள் இருப்பது தகுந்த ஆதாரங்களோடு ஏற்படுத்தப்பட்ட பிறகு உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

கையகப்படுத்தும் எண்ணமில்லை
சிதம்பரம் நடராஜர் கோவிலை பொறுத்தவரை அரசுக்கு கையகப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இல்லை. குறைகளை களைந்து, நிர்வாகத்தை சீராக்கி, பக்தர்களின் காணிக்கையால் நடத்தப்படுகின்ற திருக்கோவிலில் பக்தர்களின் தரிசனத்திற்கு உண்டான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதுதான் இந்து சமய அறநிலையத்துறையின் நோக்கம். தவறு இருக்கும்பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் தமிழக அரசு தரப்பில் அத்துமீறல் இருந்தால் தாராளமாக நீதிமன்றம் செல்லலாம். இதுவரை எந்த அத்துமீறலும் அரசு தரப்பில் செய்யப்படவில்லை என்று தெரிவித்தார்.

சிலைகள் மீட்பு
தொடர்ந்து சிலை கடத்தல் தொடர்பான கேள்விக்கு, தமிழகத்தில் உள்ள கோயில்களில் இருந்து காணாமல் போன பின், மீண்டும் மீட்கப்பட்டுள்ள சிலைகளுக்கு ஒரு குறியீடு தயார் செய்யப்பட்டுள்ளது. அவை மீண்டும் கடத்தப்பட்டால், சிலைகள் எளிதாக மீட்கும் வகையில் அதிநவீன குறியீடுகள் தயார் செய்யப்பட்டுள்ளது. திமுக ஆட்சி அமைந்த பிறகு இதுவரை 281 சிலைகள் மீட்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications