அரசு டாஸ்மாக் ரெயிடு வழக்கில் அடுத்தடுத்த திருப்பம்.. இன்று மீண்டும் சென்னை ஹைகோர்ட்டில் விசாரணை
சென்னை: டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையால் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்திருப்பது ஆதாரபூர்வமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அமலாக்கத்துறையின் இந்த வாதம் நிறைவடையாததை அடுத்த விசாரணையை 17ம் தேதி அதாவது இன்றைய தினம் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.
கடந்த ஏப்ரல் 6ம் தேதி முதல் 8 தேதி வரை சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்த சோதனை சட்டவிரோதமானது என்று அறிவிக்க கோரி டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் சென்னை ஹைகோர்ட்டை நாடினார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று அதாவது ஏப்ரல் 16ம் தேதி விசாரணைக்கு வந்தது. இதில், டாஸ்மாக் சார்பில் மூத்த வழக்கறிஞர் விக்ரம் சவுத்ரி மற்றும் தமிழ்நாடு அரசு சார்பில் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.
அமலாக்கத்துறை
அப்போது, ''அமலாக்கத் துறை எப்போதும் வெளிப்படையாக இருந்ததில்லை. வெளிப்படையாக இருப்பதாக ஒரு பிம்பத்தை உருவாக்கி அதன் பின்னால் ஒளிந்து கொண்டுள்ளது. எந்த நம்பிக்கையின் அடிப்படையில் குற்றம் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை கருதுகிறது? எதற்காக சோதனை செய்கிறோம் என்று அமலாக்கத்துறை தெரிவிக்க வேண்டும். அமலாக்கத்துறை நடவடிக்கையால் நேரடியாக டாஸ்மாக்கின் நற்பெயருக்கும், மறைமுகமாக தமிழ்நாடு அரசின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 2007ம் ஆண்டு முதல் 2021 வரை ஆண்டு முறைகேடு நடந்ததாக கூறப்படும் நிலையில் தற்போது ஞானம் வந்தது போல விசாரணை நடத்துவது ஏன்? இன்றைக்கு டாஸ்மாக் குறிவைக்கப்படுகிறது. நாளை ஒவ்வொரு துறையும் குறிவைக்கப்படும். விசாரணை என்ற பெயரில் பெண் அதிகாரிகளை அடைத்து வைத்துவிட்டு நள்ளிரவில் வீட்டுக்கு அனுப்பியது சரியான நடத்தையா? என தமிழ்நாடு அரசு தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.
மாநில அரசு பதில்
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், "அனைத்து துறைகளிலும் ஊழலை ஒழிப்பது தானே அரசின் நோக்கம்" என கேள்வி எழுப்பினர். இதற்கு தலைமை வழக்கறிஞர், "அதில் மாற்றுக்கருத்து இல்லை. அதனை மாநில அரசு கவனித்துக்கொள்ளும். அமலாக்கத்துறை கிடையாது" என்று பதிலளித்தார்.
இதைத்தொடர்ந்து அமலாக்கத் துறை சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி. ராஜூ வாதத்தை தொடங்கினார். அப்போது, ''மாநில காவல்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்குகளின் அடிப்படையிலேயே அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்தது. முறைகேடு நடந்திருப்பதாக கருதினால் அமலாக்கத்துறை விசாரணை நடத்தலாம். டாஸ்மாக் ஊழியர்கள் லஞ்சம் வாங்கியதாக முதல் தகவலறிக்கையில் உள்ளது. சிலர் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக தகவல் கிடைத்ததால் சோதனை நடத்தப்பட்டது.
பணப்பரிமாற்றம்
டாஸ்மாக் ஊழியர் ஒருவர் லஞ்சம் வாங்கினால் அதன் சங்கிலி என்ன என்பது குறித்து தெரிந்து கொள்ள வேண்டாமா? இதற்கும், உயரதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கிறதா? என தெரிந்து கொள்ள வேண்டமா? இதற்காக தான் தலைமை அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது. டாஸ்மாக் முறைகேடு மூலம் 1000 கோடி ரூபாய்க்கு மேல் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்தது சோதனையில் தெரிய வந்துள்ளது.
டெண்டர், மதுபான கொள்முதல் என அனைத்திலும் முறைகேடு நடந்துள்ளது. கூடுதல் விலைக்கு மதுபானம் விற்கப்பட்டதை சூபர்வைஸர்களே ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.. இந்த முறைகேட்டை மறைக்க அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது. அனைத்து ஆவணங்களும் தலைமை அலுவலகத்தில் தான் பாதுகாத்து வைக்கப்படும் என்பதால் அங்கு சோதனை நடத்தப்பட்டது.
செந்தில் பாலாஜி
அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான ஆவணங்களும் தலைமை அலுவலகத்தில் உள்ளது. குறிப்பிட்ட முறையில் தான் விசாரணை நடத்த வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட முடியாது. எந்த முறைகேட்டிலும் ஈடுபடவில்லை என்றாலும் முறைகேடு நடந்ததற்கான ஆவணங்களை மறைப்பதும் குற்றம் தான். சம்பந்தப்பட்ட நபர் ஊழல் தடுப்பு வழக்கில் குற்றம் சாட்டபட்டவராக இல்லை என்றாலும் சாட்சியாக அவரை சேர்க்கலாம் என்று அமலாக்கத்துறை சட்டம் கூறுகிறது" என அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் தன்னுடைய வாதத்தை முன்வைத்தார்.
இன்று மீண்டும் விசாரணை
எனினும் அமலாக்கத்துறையின் வாதம் நிறைவடையாததை அடுத்து விசாரணையை இன்று அதாவது 17ம் தேதி தள்ளிவைக்கப்பட்டது. டாஸ்மாக் மற்றும் தமிழ்நாடு அரசு சார்பில் வாதங்கள் முடிந்து விட்டதால் வரும் 22ம் தேதி எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனிடையே இந்த வழக்கில் தங்களையும் இணைத்துக் கொள்ளுமாறு பாஜக பிரமுகர் ஏ.மோகன் தாஸ் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்களை ஏற்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.












Click it and Unblock the Notifications