ஆட்சியமைக்க மு.க ஸ்டாலினுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அழைப்பு - 7ஆம் தேதி முதல்வராக பதவியேற்பு
திமுக தலைவர் மு.க ஸ்டாலின் ஆட்சியமைக்க தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் முறைப்படி அழைப்பு விடுத்துள்ளார். 133 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் அளித்து ஆட்சியமைக்க ஸ்டாலின் உரிமை கோரியிருந்த நிலையில் முறைப்படி ஆளு
சென்னை: தமிழகத்தில் ஆட்சியமைக்க திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் முறைப்படி அழைப்பு விடுத்துள்ளார். 133 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் அளித்து ஆட்சியமைக்க மு.க ஸ்டாலின் உரிமை கோரியிருந்த நிலையில் முறைப்படி ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். 7 ஆம் தேதி காலை 9 மணியளவில் ஆளுநர் மாளிகையில் மு.க. ஸ்டாலின் முதல்வராக பதவியேற்கிறார்.
Recommended Video
திமுக கூட்டணி 159 இடங்களில் வென்றுள்ளது. 234 தொகுதிகளில் ஆட்சியமைக்க 118 இடங்கள் பெரும்பான்மைக்குத் தேவை. திமுக மட்டும் 125 இடங்களில் வென்றுள்ளது. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட மதிமுக 4, மனித நேய மக்கள் கட்சி 2 இடங்கள், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி 1 இடத்திலும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி 1 இடத்திலும் வென்றுள்ளது.

நேற்று மாலை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் திமுக எம்எல்ஏக்கள் 125 பேரும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 8 பேரும் நேற்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றனர். அனைவரும் இணைந்து மு.க ஸ்டாலினை சட்டசபைக்குழு தலைவராக ஏகமனதாக தேர்வு செய்தனர்.
இந்த நிலையில் இன்று காலையில் ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை மு.க.ஸ்டாலின் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அப்போது 133 எம்எல்ஏக்களின் கையெழுத்து அடங்கிய கடிதத்தையும், அமைச்சரவை பட்டியலையும் மு.க ஸ்டாலின் ஆளுநரிடம் கொடுத்தார்.
இந்த நிலையில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் முதல்வராக பதவியேற்க ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் முறைப்படி அழைப்பு விடுத்துள்ளார். ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழாவிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
மே7 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் கிண்டி ஆளுநர் மாளிகையில் எளிமையான முறையில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. இந்த பதவியேற்பு விழாவில் எம்எல்ஏக்கள் உள்ளிட்ட 300 பேர்கள் மட்டுமே பங்கேற்க உள்ளனர். இதற்கான அழைப்பிதழை தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அனுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications