“தமிழ்நாடு அமைதி பூங்காவாக இருப்பதை ஆளுநர் விரும்பவில்லை”

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2002 இல் மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது மட்டும் '1267 மதக் கலவரங்கள் நடைபெற்றதாக' ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் நாட்டில் நடைபெற்ற கலவரங்கள் பற்றி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. 2016 முதல் 2020 வரையான காலகட்டத்தில் மட்டும் இந்தியாவில் 3,399 வகுப்புவாத அல்லது மதக் கலவரங்கள் நடைபெற்றுள்ளதாக ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் பதில் அளித்தார்.

இந்நிலையில், 'தமிழ்நாடு அமைதி பூங்கா இல்லை' என ஆளுநர் ரவி கொடுத்த பேட்டிக்கு பதிலடியாகவே மேற்கண்ட புள்ளிவிவரம் பார்க்கப்படுகிறது. பாஜக ஆளும் மாநிலங்களில் இன்றைக்கும் கலவரங்கள் சாதாரணமாகிவிட்டன. இந்த சூழலில் , ஆளுநரின் குற்றச்சாட்டு குறித்து நாம் சிலரிடம் பேசினோம்.

 Governor does not want Tamil Nadu to be a peace park

பத்திரிகையாளர் கோவி லெனின்:

"சமீபத்தில் ராம நவமி பண்டிகை வந்தது. அப்போது வடமாநிலங்களில் என்ன நடந்தது? சங் பரிவார் ஆட்கள் ஊர்வலம் போனார்கள். அதனால் கலவரம் வெடித்தது. பீகார், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் வகுப்புவாதக் கலவரங்கள் ஏற்பட்டு நாட்டையே பதற்றத்திற்கு உள்ளாக்கியது.

ராம நவமி என்றால் ராமரைத்தானே கொண்டாட வேண்டும்? இந்த சங்பரிவார் ஆட்கள் என்ன செய்தார்கள்? மசூதியைப் போய் அடித்தார்கள். இது என்ன விதமான மனநிலை? ஏன் பிற மத வழிப்பாட்டுத் தளங்களை அடித்து உடைக்க வேண்டும்?

இதேதான் விநாயகர் ஊர்வலம் என்ற பேரில் தமிழ்நாட்டில் நடத்தப்பட்டது. காலங்காலமாக தமிழ் மக்கள் விநாயகரை வழிப்பட்டுத்தான் வருகிறார்கள். இந்த மதவாத சக்திகள் தமிழ்நாட்டில் தலைதூக்கிய பிறகுதான், விநாயகர் ஊர்வலம் கலவரமாக மாற்றப்படுகிறது.

குறிப்பாக திருவல்லிக்கேணி போன்ற இஸ்லாமிய மக்கள் வாழும் பகுதிகளில் வன்முறையைத் தூண்டினார்கள். ஊர்வலத்தைக் கலவரமாக மாற்ற வலதுசாரி சக்திகள் முயன்றன. ஆனால், அதைத் தமிழ்நாட்டில் வன்முறையாக மாறாமல் தடுக்கப்பட்டது. விநாயகர் ஊர்வலம் என்பது இன்று நிபந்தனைகளுடன் நடைபெறுகிறது.

கோவை குண்டு வெடிப்புக்குப் பிறகு தமிழ்நாட்டில் பெரிய அளவில் மதவாத சக்திகள் வளர முடியவில்லை. அதை நம் மாநில அரசுகள் சரியாகக் கையாண்டு தடுத்துள்ளன. ஆக, எந்தக் காலகட்டத்திலும் இந்த சங்பரிவார் அல்லது வலதுசாரி ஆட்களின் கனவு நிறைவேறவில்லை.

 Governor does not want Tamil Nadu to be a peace park

இதுவரை தமிழ்நாட்டில் இந்துத்துவா சக்திகள் தங்களின் சதி வேலையை அரங்கேற்ற முடியவில்லை.

ஆனால் ஆளுநர் ரவி என்ன சொல்கிறார்? கள்ளக்குறிச்சி சம்பவத்தைச் சொல்கிறார். ஒரு மாணவியின் உயிரிழப்பில் சந்தேகம் எழுகிறது. அதை வைத்து அப்பள்ளி மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அந்தத் தாக்குதலில் ஒரு உயிரிழப்பும் ஏற்படவில்லை. காவல்துறை அந்தச் சம்பவத்தை மிகச் சரியாகக் கட்டுப்படுத்தியது.

இந்தப் பள்ளியில் ஏற்பட்ட போராட்டம் கலவரமாகத் தமிழ்நாட்டின் பிற பகுதிகளுக்குப் பரவியதா? உயிர்ப் பலி ஏற்பட்டதா? 'எங்களிடம் கேமிரா பதிவு காட்சிகள் உள்ளன. சூறையாடிய பொருட்களைக் கொண்டுவந்து வைத்துவிடுங்கள்' என காவல்துறை அறிவித்ததும் எடுத்த பொருட்களைப் பலர் மீண்டும் வந்து ஒப்படைத்தார்கள்.

அடுத்து சிதம்பரம் தீட்சிதர் விவகாரத்தை ஆளுநர் குறிப்பிடுகிறார். 'அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழே வராத ஒரு கோயில் நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கிறார்கள்' என்கிறார்.

அந்தக் கோயில் அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் வருகிறதா? இல்லையா என்பது பிரச்சினை இல்லை. குழந்தை திருமண தடுப்புச் சட்டம் என்பது பொதுவானதா இல்லையா? அது அனைவருக்கும் பொருந்துமா இல்லையா? ஏதோ தீட்சிதர்கள் நியமானவர்களைப் போலவும் காவல்துறை ஏதோ தவறானது போலவும் ஆளுநர் பேசுகிறார்.

அங்கே காவல்துறை தானாகப் போகவில்லை. புகார் வருகிறது, அதை விசாரிக்கச் செல்கிறது. புகார் வராவிட்டால் காவல்துறை ஏன் அங்கே செல்லப் போகிறது?

இன்னும் தெளிவாகச் சொல்லப் போனால், 2009 இல் நீதிமன்ற உத்தரவுப்படி தீட்சிதர்களிடம் இருந்து கோயில் நிர்வாகம் அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அதற்கு முன்னால் வரை ஆண்டுக்கு வெறும் 3 ஆயிரம் ரூபாய்தான் உண்டியல் வசூல் எனக் கணக்குக் காட்டிக் கொண்டிருந்தார்கள். அரசுக் கட்டுப்பாட்டுக்கு வந்தபிறகு வசூல் எவ்வளவு தெரியுமா? 21 லட்சம் ரூபாய்.

தீட்சிதர்களின் முறைகேடு ஏற்கெனவே நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆளுநரின் கண்களுக்கு இது தெரியவில்லை'' என்றார்.

அரசியல் விமர்சகர் ஆழி செந்தில்நாதன்:

 Governor does not want Tamil Nadu to be a peace park Governor does not want Tamil Nadu to be a peace park

அரசியல் விமர்சகர் ஆழி செந்தில்நாதன் கூறும்போது , "பாஜக ஆளுகின்ற மாநிலங்களான உத்தரப் பிரதேசம், குஜராத், கர்நாடகா உட்பட அனைத்து இடங்களிலும் மதவாத கும்பல்களால் சாதாரணமான நடமாட முடிகிறது. அவர்களால் சிறுபான்மை மக்களுக்கு எதிராக எந்த வேலைகளையும் செய்ய முடிகிறது.

அதேபோல கிரிமினல்கள் பலர் மிகச் சாதாரணமாக பாஜகவில் பொறுப்புகளைப் பெற்று மேல்மட்ட அளவுக்கு வருகிறார்கள். சமீபத்தில் உத்தரப் பிரதேசத்தில் அதிக் அகமது சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

அதாவது காவல்துறையின் காவலில் இருக்கும் போதே ஒருவரைச் சுட்டுக் கொல்ல முடிகிறது. இதுவரை யோகியின் ஆட்சியில் மட்டும் நூற்றுக்கணக்கான என்கவுண்டர்கள் அரங்கேறியுள்ளன. பட்டப் பகலில் கொலைகள் நடக்கின்றன.

சிறுபான்மை மக்கள் மட்டும் கொல்லப்படவில்லை. பாஜகவுக்கு எதிரான கருத்து கொண்டவர்களும் கொல்லப்படுகிறார்கள். மதவாத சக்திகள் சட்டம் ஒழுங்கை கெடுப்பதைத் திட்டமிட்டே செய்கிறார்கள். கவுரி லங்கேஷை கொன்றவர்கள் யார்? அதற்குப் பின்னணியில் யார் செயல்பட்டார்கள்? கர்நாடகா அப்போது அமைதி பூங்காவாக இருந்ததா? என்ற கேள்விகளுக்கு ஆளுநரிடம் பதில் இருக்கிறதா?

தமிழ்நாட்டில் இதைப்போன்ற சிறு சம்பவத்தைக் கூட நீங்கள் பார்க்க முடியாது. அரசு இரும்புக்கரம் கொண்டு உடனே அதைத் தடுக்கிறது. ஆனால், இவர்கள் தமிழ்நாடு அமைதி பூங்காவாக இருக்கக் கூடாது என்று நினைக்கிறார்கள். திமுக அரசு எந்த ஒரு சம்பவத்தையும் ஆரம்பத்திலேயே கண்டறிந்து அதைப் பரவாமல் தடுத்துள்ளது.

மு.க.ஸ்டாலின் அரசு சட்டப்படி சரியாகத்தான் நடந்து கொள்கிறது. அந்த அரசாங்கத்தின் பிரதிநிதியான ஆளுநர் அதைப் பாராட்டுவதற்குப் பதிலாக, இல்லாததை எல்லாம் பேசுகிறார். அதன் மூலம் அரசுக்கு நெருக்கடியை உருவாக்க முயல்கிறார். இதை ஒரு ஆளுநர் செய்யக் கூடாது" என்றார்.

சட்டமன்ற உறுப்பினர் செல்வப் பெருந்தகை:

 Governor does not want Tamil Nadu to be a peace park

காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வப் பெருந்தகை கூறும்போது, "ஆளுநர் ஆர்.என். ரவி தமிழ்நாட்டிற்கு வந்தது முதலே விஷக் கருத்துகளை விதைத்து வருகிறார். ஒரு ஆளுநரின் பணி என்பது என்ன என்பதை மறந்துவிட்டு, அரசியலமைப்பு சட்டத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் அதைச் சிதைக்கும் வேலையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

ரவி ஆர் எஸ் எஸ் செயல்பாட்டாளர் இல்லை. அவர் ஒரு ஆளுநர். அரசியலமைப்பு சட்டத்தின்படி உறுதிமொழி ஏற்றுப் பதவியேற்றவர். அவர் அளித்த பேட்டியை நான் கூர்ந்து படித்தேன். அவர் சட்டம் ஒழுங்கைப் பற்றிப் பேசுகிறார். திராவிட மாடலை பற்றிப் பேசுகிறார். நான் கேட்கிறேன், சட்டம் ஒழுங்கைப் பற்றிப் பேச இவருக்கு என்ன தகுதி?

இவர் நாகாலாந்தில் ஆளுநராக இருந்தவர். அங்கே என்ன நடந்தது? மணிப்பூரில் கூட பாஜக ஆட்சிதான் நடைபெற்று வருகிறது. அங்கு எல்லாம் ஊரடங்கு உத்தரவுடன்தான் இன்றும் ஆட்சி நடைபெறுகிறது.

பாஜக ஆளும் உத்தரப் பிரதேசத்தில் காவல்துறை அதிகாரிகள் முன்பாக, ஒரு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டுக் கொல்லப்படுகிறார். அந்த அளவுக்கு அம்மாநிலத்தில் தாதாயிசம், குண்டாயிசம் தலைவிரித்து ஆடுகிறது.

இவை பற்றி எல்லாம் வாய் திறக்காதவர்தான் இந்த ஆளுநர் ஆர்.என். ரவி. கள்ளக்குறிச்சி பள்ளிக்கூட விவகாரம் பற்றிப் பேசுகிறார். விஏஓ படுகொலை பற்றிப் பேசுகிறார். எந்த உயிர் போனாலும் அது கண்டிக்கத்தக்கது தான். அதில் நமக்கு மாற்றுக் கருத்தில்லை. தமிழ்நாட்டில் நடப்பதைச் சொல்லும் ஆளுநர், பாஜக ஆளும் மாநிலங்களில் நடக்கும் பெரிய படுகொலைகள் பற்றி ஏன் பேசவில்லை? " என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+