"பல்கலைக்கழக வேந்தராக ஆளுநரே தொடர்கிறார்!" துணை வேந்தர்கள் மாநாடு குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம்
சென்னை: ஆளுநர் தலைமையில் துணை வேந்தர்கள் மாநாடு நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியானதற்குப் பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இது தொடர்பாக ஆளுநர் மாளிகை விளக்கமளித்துள்ளது. அதாவது துணை வேந்தரை நியமிக்கும் அதிகாரம் மட்டுமே தமிழக அரசுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் பல்கலைக்கழகங்களின் வேந்தரா ஆளுநரே தொடர்வதாகக் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாகவே மோதல் போக்கே நிலவி வருகிறது. இதன் காரணமாகவே தமிழக அரசு தயார் செய்து கொடுக்கும் ஆளுநர் உரைகளையும் கூட கவர்னர் ரவி படிப்பதில்லை. இதற்கிடைேய தமிழக அரசின் மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் தராமல் காலம் தாழ்த்துவதாக தமிழக அரசு குற்றஞ்சாட்டியது.

துணை வேந்தர்கள் மாநாடு
மேலும், இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்து இருந்தது. இந்த வழக்கில் சமீபத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. உச்ச நீதிமன்றம் தமிழக அரசுக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்தது. அதன்படி இனி துணை வேந்தர்களைத் தமிழக அரசே நியமிக்க முடியும். மேலும், மசோதாக்களை ஒப்புதல் அளிக்கவும் உச்ச நீதிமன்றம் கெடு விதித்து இருந்தது.
ஆளுநர் தலைமையில் துணை வேந்தர்கள் மாநாடு நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது. இருப்பினும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைச் சுட்டிக்காட்டி துணை வேந்தர்கள் மாநாட்டை நடத்த ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வந்தன.
ஆளுநர் மாளிகை விளக்கம்
இதற்கிடையே ஆளுநர் மாளிகை இது தொடர்பாக விளக்கமளித்துள்ளது. அதாவது பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழா, துணைவேந்தர்கள் மாநாடு நடத்த ஆளுநருக்கு அதிகாரம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக உதகையில் துணை வேந்தர்கள் மாநாட்டை நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ள ஆளுநர் மாளிகை, துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மட்டுமே தமிழக அரசுக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், உதகையில் வரும் 25, 26ம் தேதிகளில் உதகையில் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெறுகிறது என்றும் பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநரே தொடர்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேந்தராக ஆளுநரே தொடர்கிறார்
அதாவது துணை வேந்தரை நியமிக்கும் அதிகாரம் மட்டுமே தமிழக அரசுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் பல்கலைக்கழகங்களின் வேந்தரா ஆளுநரே தொடர்வதால் துணை வேந்தர்கள் மாநாடு நடத்தும் உரிமை ஆளுநருக்கு இருக்கிறது என்பதே விளக்கமாக இருக்கிறது. மேலும், இந்த துணை வேந்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள துணை குடியசு துணை தலைவர் ஜெகதீப் தன்கருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உச்ச நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக துணை குடியசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் கூறிய கருத்துகள் பேசுபொருள் ஆன நிலையில், ஆளுநர் ரவி அவருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழக அரசு
முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் மற்றும் பதிவாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்துக்கள் மற்றும் கதைகளை தவறியும் மாணவர்களிடையே பரப்பிவிடக் கூடாது என்று முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார். இந்தச் சூழலில் தான், அந்த மாநாடு நடந்து சில நாட்களில் மீண்டும் ஆளுநர் தரப்பில் துணை வேந்தர்கள் மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு நாளை விளக்கம் தரும் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications