எச். ராஜா, தமிழிசை அடுத்தடுத்து மீட்.. திடீரென டெல்லி கிளம்பி போன ஆளுநர் ரவி.. என்ன காரணம்? பின்னணி
சென்னை: பாஜக தலைவர் அண்ணாமலை லண்டன் சென்றுள்ள நிலையில், தமிழக பாஜகவில் மூத்த தலைவர்கள் அடுத்தடுத்து அடித்து ஆட தொடங்கி உள்ளனர். கட்சிக்குள் அதிரடியாக நிர்வாகிகள் வேகம் காட்டி வருகின்றனர். இப்படிப்பட்ட நிலையில்தான் ஆளுநர் ஆர். என் ரவி டெல்லி சென்றுள்ளார். டெல்லியில் அவர் முக்கியமான சந்திப்புகளை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில நாட்களாக ஆளுநரை எச். ராஜா, தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் சந்தித்த நிலையில்தான் ஆளுநர் ரவி தற்போது டெல்லி சென்றுள்ளார். பாஜகவில் அரசியல் பணிகளை கவனிப்பதற்காக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தலைமையில் ஒருங்கிணைப்புக் கமிட்டி சமீபத்தில் அமைக்கப்பட்டது. இதற்கான உத்தரவை தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்திருந்தார்.

அண்ணாமலை இல்லாத சூழலில், கட்சியை வழிநடத்த செயல் தலைவர் அல்லது தற்காலிகத் தலைவர் ஒருவரை நியமிப்பது குறித்து தேசியத் தலைமை ஆலோசித்திருந்தது. இதனை அறிந்து, அப்பதவியை கைப்பற்ற தமிழிசை, வானதி, குஷ்பு உள்ளிட்ட பெண் பிரபலங்களும், பொன் ராதாகிருஷ்ணன், நயினார், எஸ்.ஆர்.சேகர், கே.டி.ராகவன் உள்ளிட்ட சீனியர்களும் கடும் முயற்சி செய்தனர்.
எச். ராஜா உள்ளே வந்தது எப்படி?: தங்களுக்கு அந்த பதவி வேண்டும் அல்லது இவருக்கு அந்த பதவி கிடைக்கக் கூடாது என்கிற ரீதியில், இவர்கள் காய்களை நகர்த்தியிருந்தனர். இதற்காக டெல்லியில் தங்களின் லாபியை பயன்படுத்தினர். போட்டிகளும் பிரச்சனைகளும் இருந்ததால், இவர்களில் யாரை நியமித்தாலும் அதிருப்தி வெடிக்கும் என்பதை உணர்ந்ததால், செயல் தலைவர் கான்செப்ட்டை தற்காலிகமாக நிறுத்தி வைத்து விட்டு 'ஒருங்கிணைப்பு குழு' ஒன்றை அமைத்து, உறுப்பினர் சேர்க்கை பணிகளை முன்னெடுக்கச் சொல்லலாம் என முடிவு செய்து அதன்படி குழுவை அமைத்தனர். தலைவர் பதவி ரேசில் இருக்கும் யாரையும் கமிட்டியில் போடாமல் ஹெச்.ராஜா தலைமையில் கமிட்டியை உருவாக்கினர். இதன் மூலம் கான்ட்ரோவெர்சியை தவிர்க்கலாம் என்கிற யோசனையில் இந்த கமிட்டியை அமைத்தனர் என்று சுட்டிக்காட்டுகிறது தமிழக பாஜக.
இந்த நிலையில், தற்காலிகமாக இருந்தாலும், கமிட்டி கலைக்கப்படுவது வரை கன்வீனர் நாம் தான் யோசித்து, அண்ணாமலையைத் தாண்டி அரசியல் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டாராம் ஹெச்.ராஜா. அதன் ஒரு கட்டமாகத்தான், கவர்னர் ரவியை சந்தித்து பரபரப்பை ஏற்படுத்தியது, பிரதமரின் அப்பாயிண்ட்மென்ட் பெற்று அவரை சந்தித்து வாழ்த்துப் பெற்றது போன்ற நடவடிக்கைகள் என்கிறது ஹெச்.ராஜாவின் ஆதரவு வட்டம்.
இலக்கு என்ன?: இது குறித்து அவரது ஆதராவளர்களிடம் விசாரித்தபோது, "தேசிய அளவில், பத்து கோடி உறுப்பினர்கள் கொண்ட கட்சியாக பாஜகவை கொண்டு வர வேண்டும் என இலக்கு வைத்துள்ளோம். தமிழகத்தில் பாஜகவுக்கு 1 கோடி தொண்டர்கள் இருக்கிறார்கள் என்கிற நிலையை உருவாக்குங்கள். தமிழகத்தில் பாஜகவுக்கு தலைவர் இல்லைங்கிற தோற்றம் வாராத அளவுக்கு கட்சி பணிகளை கவனியுங்கள்னு ராஜாவை பிரதமர் வாழ்த்தினார் " என்று மோடியை ராஜா சந்தித்த விபரங்களை கூறுகிறார்கள்.
அண்ணாமலை இருந்தவரை எச். ராஜா பெரிதாக எதுவும் பேட்டிகள் கொடுக்கவில்லை. சர்ச்சையாக பேசவில்லை. இப்படிப்பட்ட நிலையில்தான், எச். ராஜா இப்போது பேசி உள்ளார். அதோடு சமீபத்தில் ஆளுநர் ஆர். என் ரவியை கூட எச். ராஜா சந்தித்தார். அண்ணாமலை இல்லாத நேரத்தில் இந்த சந்திப்பும் கூட கவனம் பெற்றது.
இன்னொரு சந்திப்பு: இப்படி தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை படிப்பதற்காக வெளிநாடு சென்றுள்ள நிலையில் கட்சியை தமிழ்நாட்டில் ஒருங்கிணைப்பதற்காக அமைக்கப்பட்ட குழுவின் தலைவராக செயல்பட்டு வரும் எச் ராஜா டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் சந்திப்பு நடத்தி உள்ளார். தமிழ்நாடு அரசியல் நிலவரங்கள், தமிழ்நாடு பாஜகவில் நிலவும் அரசியல் ரீதியான பிரச்சனைகள், கட்சியின் நிலைமை, அரசியல் ரீதியாக கட்சிக்குள் மோதல்கள் குறித்து அவர் பேசியதாக கூறப்படுகிறது.
அதோடு தமிழ்நாடு உள்துறை நிலவரம்.. அதாவது சட்ட ஒழுங்கு குறித்தும் எச். ராஜா புகார்களை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது எச். ராஜா மேற்கொண்டு உள்ள இந்த நடவடிக்கை பாஜக வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. அவர் எடுத்து வைக்கும் சில அடிகள் கட்சிக்கு உள்ளேயே விவாதங்களையும் ஏற்படுத்தி உள்ளது.
எச். ராஜா அடித்து ஆட.. தமிழிசை அதிரடி மூவ்: இப்படி எச். ராஜா அடித்து ஆட.. கிடைத்த கேப்பில் தமிழிசை சௌந்தரராஜனும் ஆளுநர் ஆர். என் ரவியை சந்தித்துள்ளார். தமிழ்நாடு பாஜக தொடர்பான சில முக்கிய மெசேஜ்களை டெல்லிக்கு அனுப்ப அவர் முடிவு செய்துள்ளார் என்கிறார்கள். இது தொடர்பாக அவர் பேசி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து ஆளுநர் ரவி தற்போது டெல்லி சென்றுள்ளார்.












Click it and Unblock the Notifications