அதிமுக மாஜி அமைச்சர்கள் மீது ஊழல் வழக்கு.. பைலை கிடப்பில் போட்ட ஆளுநர் ரவி..சீக்ரெட்டை உடைத்த திமுக

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியை இலாக்கா இல்லாத அமைச்சராக மாற்றுவது தொடர்பாக நேற்று அமைச்சர் பொன் முடி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இந்த அறிக்கையில் ஆளுநர் ஆர். என் ரவி தொடர்பான வேறு ஒரு முக்கியமான தகவல் இடம்பெற்று உள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல்வர் ஸ்டாலின் எடுத்த பல்வேறு நடவடிக்கைகளில் முக்கியமான ஒரு நடவடிக்கை.. ஐபிஎஸ் கந்தசாமியை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றியது. இவரின் தலைமையில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டுகளை விரிவாக்க முடிவு செய்தது.

அதன்படியே முதல்வர் ஸ்டாலினை இரண்டு முறை சந்தித்து முன்னாள் மாஜி அமைச்சர்கள் பற்றிய லஞ்ச ஒழிப்புத்துறை ஊழல் புகார் பட்டியலை கந்தசாமி அளித்தார். இது ஏற்கனவே திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது உருவாக்கிய பட்டியல்தான்.

Governor Ravi did not let DMK government to file cases against AIADMK ex Ministers says CM Stalin

இந்த பட்டியலைத்தான் சரி பார்த்து.. புகார்களை திரட்டி.. பின்னர் யார் வீட்டில் எப்போது ரெய்டு நடத்தலாம் என்று ப்ளூ பிரிண்ட் போட்டு அதை முதல்வரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை வழங்கி உள்ளது. இதன் அடிப்படையில் அதிமுகவை சேர்ந்த பல மாஜி அமைச்சர்கள் வீடுகளில் ரெய்டு நடந்தது.

வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர் என்று பல 7க்கும் மேற்பட்ட மாஜி அமைச்சர்கள் வீடுகளில் ரெய்டு நடந்தது. இந்த லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டுக்கு பின் இவர்கள் மீது வழக்கு எதுவும் பதியப்படவில்லை. இவர்கள் மீது வழக்கு பதியப்படாமல் போக ஆளுநர் ஆர். என் ரவிதான் காரணம் என்று திமுக தரப்பு தற்போது கூறியுள்ளது.

என்ன நடந்தது? : அமைச்சர் செந்தில் பாலாஜியை இலாக்கா இல்லாத அமைச்சராக மாற்ற முதல்வர் ஸ்டாலின் முடிவு எடுத்துள்ளார். இது தொடர்பாக நேற்று முதல்வர் ஸ்டாலின் எழுதிய பரிந்துரையை ஆளுநர் ஆர். என் ரவி ஏற்கவில்லை. ஆனால் இலாகா மாற்றம் தொடர்பாக தமிழக அரசு அளித்த பரிந்துரையை ஏற்க ஆளுநர் ஆர்.என்.ரவி மறுப்பு தெரிவித்தததாக தகவல் வெளியாகியுள்ளது. செந்தில் பாலாஜிக்கு உடல் நலம் சரியில்லை எனக் கூறப்பட்ட காரணம் தவறான தகவல் எனக்கூறி இலாகா மாற்றத்தை ஏற்க ஆளுநர் மறுப்பு தெரிவித்ததாக பரவலாக செய்திகள் பரவி வருகின்றன.

அறிக்கை: இது தொடர்பாக உயர் கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்தான் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குத் தொடர கோரப்பட்ட அனுமதியை அளிக்காமல் ஆளுநர் ஆர். என் ஏன் கோப்புகளை கிடப்பில் போட்டு வைத்திருக்கிறார் என்று அமைச்சர் பொன் முடி கேள்வி எழுப்பி உள்ளார்.

இதன் மூலம் அதிமுக மாஜி அமைச்சர்கள் மீது வழக்கு பதியப்படாமல் போக ஆளுநர் ஆர். என் ரவிதான் காரணம் என்று திமுக தரப்பு தற்போது கூறியுள்ளது.

அறிக்கை சொல்வது என்ன?: இது தொடர்பாக உயர் கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அமைச்சர் செந்தில்பாலாஜி அவர்களை நீக்க வேண்டும் என ஆளுநர் அவர்கள் 31.5.2023 அன்று ஒரு கடிதம் எழுதியிருந்தார். இந்தக் கடிதம் கிடைக்கப் பெற்ற அடுத்த நாளே மாண்புமிகு முதலமைச்சர் 1.6.2023 அன்று மாண்புமிகு ஆளுநர் அவர்களுக்கு இது குறித்த தெளிவான சட்ட ரீதியான காரணங்களை விளக்கிக் கூறி பதில் கடிதம் அனுப்பி வைத்திருந்தார்.

அந்த கடிதத்தில், ஆளுநரின் கடிதம் அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்பதை சுட்டிக்காட்டியும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாண்புமிகு முதலமைச்சருக்குத்தான் அமைச்சரை நீக்கவோ, நியமிக்கவோ பரிந்துரை செய்யும் அதிகாரம் இருக்கிறது என்பதையும்- இது குறித்து பரிந்துரைகளை அளிக்கும் ஆளுநருக்கு அரசியல் சாசனத்தின்படி எவ்வித அதிகாரமும் இல்லை என்பதையும் தெளிவாக - அரசியல் சட்டப்பிரிவு 164(1) -ஐ மேற்கோள் காட்டி எழுதியிருக்கிறார்.

மேலும் அக்கடிதத்தில் ஒரு மாநில அமைச்சரவையில் யார் அமைச்சராக இருக்க வேண்டும், இருக்க கூடாது என்பதை முடிவு செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை என்பதை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆளுநருக்கு அடிப்படை அரசியல் பாடமே எடுத்திருக்கிறார். இன்னும் சொல்வதென்றால் - தற்போதைய ஒன்றிய உள்துறை அமைச்சர் மாண்புமிகு அமித்ஷா அவர்கள் குஜராத் உள்துறை அமைச்சராக இருந்த போது, வழக்குகள் விசாரணையில் இருந்த உ நிலையில் எப்படி பதவியில் தொடர்ந்தார்கள் என்பதைக் கூட உதாரணமாக சுட்டிக்காட்டியிருந்தார்.

அக்கடிதத்திலேயே- அமைச்சர் செந்தில்பாலாஜி விஷயத்தில் கடிதம் எழுதும் "ஆளுநர் அவர்கள் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குத் தொடர கோரப்பட்ட அனுமதியை அளிக்காமல் ஏன் கோப்புகளை கிடப்பில் போட்டு வைத்திருக்கிறார்" என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு எல்லாம் எந்த பதிலையும் கூற ஆளுநருக்கு திராணி இல்லை போலும், அதை ஏனோ மறந்துவிட்டு - மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அனுப்பிய 1.6.2023 நாளிட்ட பதில் கடிதத்தினை வசதியாக மறைத்து விட்டு, தான் முதலமைச்சருக்கு எழுதிய கடிதத்தை மட்டும் லீக் செய்திருப்பது அற்பத்தனமான அரசியல் என்றே கருத வேண்டியதிருக்கிறது.

அமைச்சர் திரு செந்தில்பாலாஜி அவர்களின் உடல்நிலையை கருத்தில் கொண்டு- அரசு பணிகள் தொடர்ந்து தொய்வின்றி நடைபெற வேண்டும் என்ற நோக்கத்தோடு அமைச்சர் செந்தில்பாலாஜி கவனித்து வந்த பொறுப்புகளை மாண்புமிகு அமைச்சர்கள் திரு தங்கம் தென்னரசு மற்றும் மாண்புமிகு திரு முத்துச்சாமி அவர்களுக்கு மாற்றி வழங்கப் பரிந்துரைத்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இன்று மதியம் கடிதம் எழுதியிருந்தார்கள்.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி அமைச்சர்களின் பொறுப்புகளை மாற்றி அமைக்கும் அதிகாரம் முதலமைச்சருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ள நிலையில், தேவையற்ற வகையில் அமலாக்கத்துறை மாண்புமிகு அமைச்சர் செந்தில்பாலாஜி குறித்து விசாரித்து வருவதை சுட்டிக்காட்டி- சரியான காரணத்தை மேற்கோள் காட்டி கடிதம் அனுப்புமாறு ஆளுநர் கேட்டிருக்கிறார்.

Governor Ravi did not let DMK government to file cases against AIADMK ex Ministers says CM Stalin

இது மாநில அரசின் நிர்வாகத்தில் ஆளுநர் தலையிடுவதாகவும்- அரசியல் சட்டத்திற்கு புறம்பானதாகவும் நாங்கள் பார்க்கிறோம்.

எப்படி அமைச்சர்களை நியமிப்பதிலும், நீக்குவதிலும் மாண்புமிகு முதலமைச்சரின் பரிந்துரைப்படி ஆளுநர் செயல்பட வேண்டுமோ - அதே போல்தான் இலாகா மாற்றுவதிலும் செயல்பட வேண்டும். ஒரு அமைச்சரின் இலாகாவை ஏன் மாண்புமிகு முதலமைச்சர் மாற்றுகிறார் என்று காரணம் கேட்க ஆளுநருக்கு அதிகாரமும் இல்லை. அரசியல் சட்டப்படி உரிமையும் இல்லை. மேலும் அமைச்சர் ஒருவர் விசாரணையை சந்திப்பது அவரது அமைச்சர் பொறுப்புக்கான தகுதியை எந்த வகையிலும் பாதிக்காது என்ற நிலையில், அதனை மாண்புமிகு ஆளுநர் அவர்கள் சுட்டிக்காட்டி இருப்பது தேவையற்றது.

இவற்றை கருத்தில் கொண்டு, ஆளுநரின் கடிதத்திற்கு உடனடியாக இன்று பதில் அனுப்பி வைக்கப்படுகிறது. அதில் அவரின் முந்தைய கடிதத்திற்கு பதில் அளிக்கப்பட்ட விவரத்தையும், இன்றைய கடிதத்திற்கு தெளிவான சட்ட விவரங்களையும் எடுத்துக் கூறி தான் ஏற்கனவே அளித்த பரிந்துரையை ஏற்று அதற்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.

அரசியல் சட்டப்படி பதவிப் பிரமாணம் செய்து கொண்டு - அரசியல் சட்டத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டிய ஆளுநர் இப்படி அரசியல் சட்டத்திற்கு விசுவாசமாக இல்லாமல் இருக்கிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் மாண்புக்கு இழுக்கு ஏற்படுத்தும் நடவடிக்கையே தொடர்ந்து மாண்புமிகு ஆளுநர் அவர்கள் மேற்கொள்வது வேதனைக்குரியது. கண்டனத்திற்குரியது, என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+