"தேசிய கீதத்தை அவமதித்த ஆளுநர் ரவி.. பிரதமர் நிச்சயம் மன்னிக்க மாட்டார்!" டிஆர்பி ராஜா குற்றச்சாட்டு
சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையில் சில குறிப்பிட்ட வார்த்தைகளைத் தவிர்த்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே ஆளுநர் தேசிய கீதத்தைப் புறக்கணிக்கும் வகையில் செயல்பட்டதாக டிஆர்பி ராஜா சாடியுள்ளார்.
தமிழ்நாடு சட்டசபையின் நடப்புண்டு முதல் கூட்டத் தொடர் இன்று காலை 10 மணிக்குத் தொடங்கியது. ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் என்பதால் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது.
தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டசபையில் தனது உரையைத் தொடங்கினார். ஆளுநர் உரையைத் தொடங்கும் போதே, சட்டசபையில் கூச்சல் குழப்பம் நிலவியது. திமுக கூட்டணிக் கட்சிகள் வெளிநடப்பு செய்தார்

தவிர்த்த ஆளுநர்
என் இனிய தமிழ் சகோதர சகோதரிகளே அனைவருக்கும் வணக்கம் என்று ஆளுநர் ரவி தமிழில் தனது உரையைத் தொடங்கினார். ஆளுநர் உரையில் பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றிருந்தது. இருப்பினும், அவர் அரசு தயாரித்துக் கொடுத்த உரையை முழுமையாக வாசிக்கவில்லை என்றும் சில வார்த்தைகளையும் ஓரிரு வரிகளையும் தவிர்த்துவிட்டார் என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. குறிப்பாகத் திராவிட மாடல் என்ற வார்த்தையை ஆளுநர் தவிர்த்துள்ளார்.

வெளியேறிய ஆளுநர்
தமிழ்நாடு அரசு என்ற வார்த்தை தவிர்த்து இந்த அரசு என்ற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளார். அதேபோல பெரியார், அண்ணா, கருணாநிதி என்ற பத்தியை அவர் படிக்கவில்லை.. ஆளுநர் தாமாக முன்வந்து பேசிய வார்த்தைகளை அக்குறிப்பில் பதிவேற்றக்கூடாது என்றும் அவைக் குறிப்பில் அரசு தயாரித்துக் கொடுத்த உரை மட்டுமே இடம் பெறும் என்றும் முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், இது தொடர்பான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. தமிழக முதல்வர் இப்படிப் பேசிக் கொண்டிருக்கும் போதே ஆளுநர் ரவி சட்டசபையில் இருந்து வெளியேறினார்.

டிஆர்பி ராஜா
இதனிடையே இது குறித்து எம்எல்ஏ டிஆர்பி ராஜா தனது ட்விட்டரில் சில பரபர கருத்துகளைத் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டரில், "இன்று தேசிய கீதத்தைத் தமிழக ஆளுநர் புறக்கணித்துள்ளார். ஆளுநர் ஆர்.என். ரவி தமிழக சட்டசபையின் பாரம்பரியத்தை மதிக்கவில்லை.. தமிழக சட்டசபை அங்கீகரிக்கப்பட்ட மற்றும் ஆளுநர் உரையாக அச்சிடப்பட்டதை மட்டுமே ஆளுநர் படிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது" என்று மிகக் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி அவர் விமர்சித்திருந்தார்

பிரதமர் மோடி மன்னிக்க மாட்டார்
மேலும் மற்றொரு ட்வீட்டில், "தேசிய கீதத்தை மதிக்காத ஒரு ஆளுநர் தனது அரசியல் சாசனப் பதவியில் அமர எப்படித் தகுதி பெறுவார்! நாம் மிகவும் அன்பாகப் போற்றும் கீதத்திற்கு வணக்கம் செலுத்தும் முன் அவர் எழுந்து சென்றுள்ளார். இது தண்டிக்கப்படாமல் போகக் கூடாது! பிரதமர் நரேந்திர மோடி இதை மன்னிக்க முடியாததாகவே பார்ப்பார்கள்" என்று பதிவிட்டுள்ளார். அதில் அவர் பிரதமர் நரேந்திர மோடியையும் டேக் செய்துள்ளார்.

குற்றச்சாட்டு
ஆளுநர் ரவி இந்த வார்த்தைகளைத் தவிர்த்துப் பேசியதற்கு எதிர்க்கட்சிகளும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. ஆளுநர் தமிழ்நாடு மக்கள் தேர்ந்தெடுத்து அனுப்பிய தமிழக அரசின் உரையை முழுமையாக வாசிக்காததன் மூலம் தமிழக மக்களை அவமதித்து விட்டதாகக் குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும், ஆளுநர் இப்படிச் செய்தது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றும் அவர்கள் சாடியுள்ளனர்.












Click it and Unblock the Notifications