பரபரப்பான சூழலில் அண்ணா பல்கலைக்கு பறந்த ஆளுநர் ரவியின் கார்.. பாலியல் வன்கொடுமை தொடர்பாக ஆய்வு!
சென்னை: பரபரப்பான சூழலில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று ஆளுநர் ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக பல்கலைகழகத்தின் வேந்தர் என்ற முறையில் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆய்வு மேற்கொண்டுள்ளார். மாணவி பாலியல் வழக்கு தொடர்பாக உள் விசாரணை குழுவிடமும் ஆளுநர் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து வரும் மாணவி, இரவு நேரத்தில் மற்றொரு மாணவருடன் கல்லூரி வளாகத்தில் பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த நபர் ஒருவர், மாணவரைத் தாக்கிவிட்டு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் தொடர்பாக சென்னை கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் மாணவி தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.
இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைத்து சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதைத்தொடர்ந்து ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்தனர். இதனிடையே இந்த விவகாரத்தில் காவல் துறையினர் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில், மாணவியின் தனிப்பட்ட விவரங்கள் இடம்பெற்றிருந்தது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனை 15 நாள் காவலில் வைக்க சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக கைது செய்ய முயன்றபோது போலீசாரிடம் இருந்து தப்ப முயன்ற ஞானசேகரனுக்கு கை, கால்களில் முறிவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது. ஞானசேகரன் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் அரசு தரப்புக்கு சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளது சென்னை ஐகோர்ட். இந்தச் சூழலில், ஆளுநர் ஆர்.என்.ரவி அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆய்வு நடத்தியுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களிடம், பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து கேட்டறிந்துள்ளார். பல்கலைக்கழகத்தில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள், சிசிடிவி கேமராக்கள், அவை முறையாகச் செயல்படுகிறதா, பாதுகாப்பு பணியில் ஈடுபடுபவர்களின் நடவடிக்கைகள் குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்தார்.
மேலும், மாணவர்கள் புகார் அளிக்க வேண்டுமென்றால், யாரிடம் புகார் அளிக்கின்றனர் என்றும், எவ்வாறு புகாரை பேராசிரியர்கள் அணுகுகின்றனர்? என்பது குறித்தும் மாணவர்களிடையே கேட்டு அறிந்துள்ளார் ஆளுநர் ரவி. இந்த ஆய்வு சுமார் 2 மணி நேரம் நீடித்துள்ளது.
இந்த ஆய்வின்போது தமிழக உயர்கல்வித் துறை செயலாளர் கோபால், தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் ஆபிரகாம், அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் பிரகாஷ் ஆகியோர் உடனிருந்துள்ளனர். ஆளுநரின் வருகையையொட்டி பல்கலைக்கழக வளாகம் முழுவதும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
முன்னதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, "அண்ணா பல்கலைக்கழகம் ஆளுநரால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. அது ஒரு தன்னாட்சி நிறுவனம். அண்ணா பல்கலைக்கழகத்தில் 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்க வேண்டியது ஆளுநரின் கீழ் இயங்கும் நிர்வாகத்தின் கடமை. அங்கு பாதுகாப்பு காவலர்களை பணியில் அமர்த்தி இருக்கிறார்களா அல்லது பணிக்கு ஆள் நியமிக்கப்பட்டது போல கணக்கு காண்பித்து இருக்கிறார்களா என்பதெல்லாம் குறித்து பல்கலைக்கழகம் தெளிவுபடுத்த வேண்டும்." எனக் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications