‛வாரிசு அரசியல்’.. ஆளுநர் அரசியலே பேசக்கூடாதே! பாயிண்டை பிடித்து தமிழிசையை சாடிய திமுக ராஜீவ் காந்தி
சென்னை: திமுகவின் துணை பொதுச்செயலாளராக கனிமொழி எம்பி நியமிக்கப்பட்ட நிலையில் ‛‛திமுக வாரிசு அரசியல் செய்வதாக தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம் செய்த நிலையில் அரசியலமைப்பு சட்டத்தை சுட்டிக்காட்டி ஆளுநர் அரசியல் பேசக்கூடாது'' என திமுகவின் ராஜீவ் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
திமுகவில் 15வது உள்கட்சி தேர்தல் துவங்கி நடந்து வந்தது. பேரூராட்சி, ஒன்றியம், நகரம், பேரூர், பகுதி, மாவட்டம், மாநகரம் வரை தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. மாவட்ட செயலாளர்கள், செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கட்சி ரீதியாக உள்ள 72 மாவட்டங்களில் 71 மாவட்டங்களுக்கு தேர்தல் முடிக்கப்பட்டு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். தென்காசி வடக்கு மாவட்டத்துக்கு மட்டும் தேர்தல் பெண்டிங்கில் உள்ளது.

திமுக பொதுக்குழு கூட்டம்
திமுக தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், 4 தணிக்கை குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெற்றது. இதில் திமுக தலைவர் பதவிக்கு முக ஸ்டாலின்,பொதுச்செயலாளர் பதவிக்கு அமைச்சர் துரைமுருகன், பொருளாளர் பதவிக்கு எம்பி டிஆர் பாலு ஆகியோர் மனுத்தாக்கல் செய்தனர். இந்நிலையில் இன்று திமுக பொதுக்குழு கூட்டம் நடந்தது.

முக ஸ்டாலின் தலைவர்
இந்த கூட்டத்தில் திமுக தலைவராக முக ஸ்டாலின், பொதுச்செயலாளராக துரைமுருகன், பொருளாளர் பதவிக்கு டிஆர் பாலு ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது. திமுக தலைவராக 2வது முறையாக முதல்வர் முக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார்.

கனிமொழி எம்பிக்கு பதவி
மேலும் திமுகவில் இருந்து மூத்த தலைவர் சுப்புலட்சுமி ஜெகதீசன் சமீபத்தில் விலகினார். இதனால் அவர் வகித்து வந்த திமுக துணை பொதுச்செயலாளர் பதவிக்கு கனிமொழி எம்பிக்கு வழங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகின. அதன்படி பொதுக்குழுவில் கனிமொழி எம்பி திமுக துணை பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டார்.

தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம்
இதுபற்றி தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனத்தோடு, கனிமொழி எம்பிக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தார். இதுபற்றி தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில், ‛‛ஒரு பெண், பதவிக்கு வருவது சிரமம். திமுக துணை பொதுச்செயலாளரான கனிமொழிக்கு எனது வாழ்த்துக்கள். தலைவர் அண்ணன், துணை பொதுச்செயலாளர் தங்கை என வாரிசு அரசியலை நோக்கி திமுக செல்வதாக மக்கள் நினைக்கின்றனர்'' என விமர்சனம் செய்திருந்தார்.

ராஜீவ் காந்தி விமர்சனம்
இந்நிலையில் தான் திமுகவின் தலைமை கழக செய்தி தொடர்பு இணைச் செயலாளர் ராஜீவ் காந்தி, ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛வாரிசு அரசியலை நோக்கி திமுக என தமிழிசை கூறுகிறார். ஆளுநர் பதவியில் இருப்பவர் இப்படி பேசலாமா?. 1951 மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் எந்த பிரிவு வாரிசு அரசியல் கூடாது என்று சொல்லி உள்ளது? ஆனால் அரசியலமைப்பு சட்டம் சரத்து 163 ஆளுநர் அரசியல் பேசக்கூடாது என சொல்லி உள்ளது. மீறாதீர்'' என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications