கிராம நத்தத்தில் நிலம்.. தோராய பட்டா, தூய பட்டாவின் தேவை.. நிலம் வாங்குபவர் தெரிந்து கொள்ள வேண்டியது
சென்னை: நில உடமை பதிவேடு அல்லது நில உடமை ஆவணமே பட்டா எனப்படும்.. இப்படிப்பட்ட பட்டா இல்லாமல் போனால் ஏற்படும் சிக்கல்கள் என்னென்ன? நிபந்தனை பட்டா என்றால் என்ன டி.கே.டி பட்டா என்றால் என்ன? தோராய பட்டா, பீமா பட்டாவுக்கும் உள்ள வித்தியாசம் என்னென்ன? இவைகளை பற்றியெல்லாம் நிலம் வாங்குபவர்கள் தெரிந்து கொள்வது அவசியம்.. அவைகளை பற்றி சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
யார் பெயரில் சொத்து உள்ளதோ, அதன் நில உரிமையாளரின் பெயர், அவரது அப்பா பெயர், நிலம் அமைந்திருக்கும் மாநிலம், மாவட்டம், வட்டம், கிராமம், நிலத்தின் சர்வே எண், நிலத்தின் வகை, வரித்தொகை, விஸ்தீரணம் உள்ளிட்ட விவரங்கள் உள்ளதுதான் பட்டா ஆவணம்.

பட்டா ஆவணம் இல்லாமல் போனால், எந்த பரிவர்த்தனையையும் சட்டப்பூர்வமாக பதிவு செய்ய முடியாது. வங்கியில் அவசரத்துக்கு கடன் பெற முடியாது.. அரசு வழங்கும் நிலம் தொடர்பான திட்டங்களில் பயன்களை பெற முடியாது. நிலத்தின் மீது வேறு ஒருவரின் உரிமைகோரலை சட்டப்படி எதிர்க்கவும் பட்டா அவசியமாகும். பட்டாக்களில் பல வகை உள்ளது.. இதில் ஒருசிலவற்றை பார்ப்போம்.
கண்டிஷன் பட்டா
ஒரு அரசு அல்லது தனி நபர் அல்லது சமூக ரீதியான குழுக்களுக்கு இலவச பட்டா தரும்போது, குறிப்பிட்ட கால வரையறைக்குள் வைத்துதான், பட்டாவில் நிபந்தனை விதித்து தரப்படும்.. அந்தக் காலவரையறை முடியும் வரை உங்களின் பட்டா இடத்தை அல்லது வீட்டை விற்க முடியாது. இதற்கு பெயர்தான் கண்டிஷன் பட்டாவாகும். அதாவது நிபந்தனை பட்டா என்பார்கள்.
டிகேடி பட்டா
நிலமில்லா மலைவாழ் மக்களுக்கு, அரசால் வழங்கப்படும் பட்டாவுக்க டிகேடி பட்டா என்பார்கள்.. ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பிரதேசங்களில் இந்த டி.கே.டி பட்டாக்கள் அதிகம். எனவே இதுபோன்ற மலைப்பிரதேசங்களில் நிலம் வாங்கும்போது கவனமாக வாங்க வேண்டும். டி.கே.டி பட்டா விளைநிலங்களை வைத்துள்ளவர்கள் அதை வணிகரீதியாக பயன்படுத்தினால், அந்த இடம் பறிமுதல் செய்யப்படும்.
தோராய பட்டா
அரசு ஒரு குறிப்பிட்ட இடத்தில் நத்தம் அளவை செய்து வைத்திருக்கும்.. கூடுதலாக ஏக்கர் கணக்கிலும் நத்தம் புறம்போக்குகளாக அரசாங்கம் அமைத்திருக்கும். இதில் நிலமில்லதவர்களுக்கும், அனுபவ முறையில் அங்கு ஏற்கனவே வசித்து வரும் மக்களுக்கும், அதே இடத்தில் பட்டா ஒதுக்கி வழங்கப்படும். இதற்குதான் தோராய பட்டா என்பார்கள்.
தமிழ்நாடு முழுவதும் தோராய பட்டா வைத்திருப்பவர்களுக்கு தூய பட்டா வழங்கப்படுமென சிறப்புமிகு அறிவிப்பினை தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்டிருந்தது நினைவிருக்கலாம்.
தற்காலிக பட்டா
சாலை, குளம் போன்ற பகுதிகளை உரிய முறையில் ஆவணப்படுத்தி, நத்தம் நிலவரி திட்டத்தினை செயல்படுத்த அந்த நிலத்தில் குடியிருப்பவர்களுக்கு அரசு பட்டா வழங்குவதன் மூலம் நிலம் வரி விதிப்புக்குள் கொண்டு வரப்படுகிறது.
இதுபோன்ற பட்டாவிலுள்ள பெயர்கள், அளவுகளில் திருத்தங்கள் கண்டறியப்பட்டு, அவை தெரிவிக்கப்படும் நிலையில் தக்க திருத்தங்கள் மேற்கொள்ளப்படலாம் என்ற அடிப்படையில்தான் இதற்கு தோராய பட்டா என்று பெயரிடப்பட்டுள்ளது. எனவேதான், இது தற்காலிக பட்டாவாகவே கருதப்படுகிறது.
தூய பட்டா
தோராய பட்டாவில் பிழைகள் தென்பட்டு, அவைகளை 45 தினங்களுக்குள் தாசில்தார் அலுவலகம் சென்று மாற்றி கொள்ள வேண்டும். நிலத்தின் அளவு, வரைபடம் போன்றவை சரியாக இருந்தால், அதற்கு வழங்கப்படும் பட்டாவின் பெயர்தான், "தூய பட்டா" என்பார்கள்.. சிறு பிழைகூட இல்லாமல் துல்லியமான நில அளவை செய்யப்பட்ட பட்டாவே தூய பட்டா ஆகும்.












Click it and Unblock the Notifications