யார் 2 அமைச்சர்கள்?.. ஸ்டாலின் பங்கேற்கும் திமுகவின் "முப்பெரும் விழா".. விழாக்கோலத்தில் விருதுநகர்
திமுகவின் முப்பெரும் விழா நாளை மாலை விருதுநகரில் கொண்டாடப்பட உள்ளது
சென்னை: திமுக முப்பெரும் விழா இன்று மாலை நடக்க உள்ளது.. திமுக முப்பெரும் விழாவிற்காக விருதுநகர் - சாத்தூர் ரோட்டில் பட்டம்புதூர் அண்ணாநகரில், மூத்த தலைவர் துரைமுருகன் தலைமையில் நடக்க உள்ள இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார்.
இன்று பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு மதுரை நெல்பேட்டையில் உள்ள அண்ணா சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் முதல்வர், பள்ளி மாணவர்களுக்காக காலை உணவு திட்டத்தையும் துவங்கி வைக்கிறார்.
இன்று மாலை முப்பெரும்விழா நடக்க உள்ளது.. செப்டம்பர் 15 -ந்தேதி அண்ணாவின் பிறந்தநாள், பெரியார் பிறந்த நாள், திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றிய நாள் ஆகியவை முப்பெரும் விழாவாக கொண்டாடப்படுகிறது.

விருதுநகர்
அதனைத்தொடர்ந்து ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்து மாணவர்களுக்கு உணவு பரிமாறும் முதல்வர், பள்ளி மாணவர்களுடன் காலை உணவு சாப்பிடுகிறார்.... இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு ஸ்டாலின், விருதுநகர் புறப்பட்டு செல்கிறார். காலை 10.30 மணியளவில் விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் ரூ. 70.57 கோடி செலவில் கட்டப்பட உள்ள புதிய கலெக்டர் அலுவலக கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். பிறகு, விருதுநகரில் உள்ள தனியார் விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வு எடுக்கிறார்.

முப்பெரும் விழா
விருதுநகரில் திமுக முப்பெரும் விழா இன்று நடக்கிறது.. திமுக முப்பெரும் விழாவிற்காக விருதுநகர் - சாத்தூர் ரோட்டில் பட்டம்புதூர் அண்ணாநகரில் 2000 ஏக்கர் நிலப்பரப்பில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள கலைஞர் திடலில் இன்று மாலை 4 மணியளவில் இந்த முப்பெரும் விழா நடக்க உள்ளது. முப்பெரும் விழா நடக்கும் திடலில் நுழைவு பகுதியில் மலைமுகடு போன்று பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. அதில் பெரியார், அண்ணா, கருணாநிதி உருவ படங்கள் இடம் பெற்றுள்ளன.

வண்ண வண்ண லைட்டுகள்
மேலும் பந்தலில் நுழைவு வாயில் மாளிகை போன்று அமைக்கப்பட்டிருக்கிறது... மேலும் வண்ண வண்ண மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன... இந்த விழாவில் 60 ஆயிரம் பேர் உட்காரும் வகையில் இடவசதி அமைக்கப்பட்டுள்ளது.. அத்துடன், விழாவை 1 லட்சம் பேர் கண்டுகளிக்கு வகையிலும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன..... இவ்விழாவுக்கு திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமை தாங்குகிறார். விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வரவேற்று பேச உள்ளார்..

சம்பூர்ணம்
திமுக முதன்மை செயலாளர் கேஎன் நேரு, துணை பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, பொன்முடி, சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் வாழ்த்தி பேச போகிறார்கள்..இந்த விழாவில் பெரியார், அண்ணா, கலைஞர், பாவேந்தர் பாரதிதாசன் மற்றும் பேராசிரியர் விருதுகள் வழங்கப்படுகிறது. பெரியார் விருது சம்பூர்ணம் சாமிநாதனுக்கும், அண்ணா விருது கோவை மோகனுக்கும், கலைஞர் விருது தி.மு.க.வின் பொருளாளர் டி.ஆர்.பாலு எம்பிக்கும், பாவேந்தர் பாரதிதாசன் விருது புதுச்சேரி திருநாவுக்கரசுக்கும், பேராசிரியர் விருது குன்னூர் சீனிவாசனுக்கும் வழங்கப்படுகிறது.

பொற்கிழி
அவர்களுக்கான விருது, பொற்கிழி மற்றும் பாராட்டு சான்றிதழை முதல்வர் ஸ்டாலின் வழங்கி சிறப்புரையாற்றுகிறார். இதைதவிர, அனைத்து நகர, பகுதி, பேரூர் கழக நிர்வாகிகளில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கும் பணமுடிப்பு, சான்றிதழையும் ஸ்டாலின் வழங்குகிறார். இந்த முப்பெரும் விழாவில், தொண்டர்கள் கலைஞர் எழுதிய 4,041 கடிதங்கள், 21 ஆயிரத்து 510 பக்கங்கள் கொண்ட 54 புத்தகங்கள் அடங்கிய தொகுப்பையும் முதல்வர் வெளியிடுகிறார்..

திராவிட மாடல்
இந்த விழாவில் முதல்வரின் எண்ணம் கொண்ட 148 பக்க திராவிட மாடல் புத்தகம் வெளியிடப்படுகிறது.. இந்த புத்தகத்தை துரைமுருகன் வெளியிட, டி.ஆர்.பாலு பெற்றுக்கொள்கிறார். முப்பெரும் விழா முடிவில் விருதுநகர் வடக்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் தங்கம் தென்னரசு நன்றி கூறுகிறார். முதல்வர் ஸ்டாலின் வருகையை முன்னிட்டு மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.. இந்த முப்பெரும் விழாவுக்காக, அனைத்து முயற்சிகளையும், ஏற்பாடுகளையும் செய்து வருவது, அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன் மற்று தங்கம் தென்னரசு ஆவர்.. இதனால் விருதுநகரே களை கட்டி வருகிறது.












Click it and Unblock the Notifications