மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு.. விண்ணப்பம் செய்து உள்ளீர்களா? தொடங்கியது நேரடி கள ஆய்வு?
சென்னை: கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தில் விண்ணப்பம் செய்த அனைவருக்கும் பணம் வழங்கப்படும் என அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. இதற்கான களப்பணி தற்போது நடந்து வருகிறது.
அதாவது கலைஞர் உரிமை தொகை திட்டத்தில் முதல் முறை பயனாளிகள் சேர்க்கப்பட்ட போதும், பின்னர் விரிவாக்கப்பட்ட போதும் பயனாளிகளை ஆய்வு செய்ய களப்பணி நடத்தப்பட்டது. அதேபோல் இந்த முறையும் நடத்தப்படும். அதாவது பயனாளிகள் கொடுத்த விவரங்கள், விலாசம் சரியா, பயனாளி இருப்பது உண்மையா, வங்கி விவரங்கள் உண்மையா என்ற ஆய்வுகள் எல்லாம் நடத்தப்படும். அதன்பின்பே முடிவு அறிவிக்கப்படும்.
தீபாவளிக்கு முன்பாக கலைஞர் மகளிர் உரிமை தொகை
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் விரிவாக்கத்திற்கான அறிவிப்பு தீபாவளிக்கு முன்பாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஒரு மாத காலமாக தீவிரமாகப் பரிசீலிக்கப்பட்டு வரும் விண்ணப்பங்களுக்கான முதல் பட்டியல் விரைவில் வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

"உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தின் கீழ் பெறப்பட்ட விண்ணப்பங்கள் படிப்படியாக ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. தீபாவளிப் பரிசாக அக்டோபர் 15ஆம் தேதி முதல் கட்டமாக பயனாளிகளுக்குப் பணம் அனுப்பப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவர்களுக்கு 45 நாட்களுக்குள் பதில் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, ஆகஸ்ட் 28ஆம் தேதியுடன் "உங்களுடன் ஸ்டாலின்" திட்டம் தொடங்கி 45 நாட்கள் நிறைவடைந்தது. முதல் நாளில் அல்லது முகாம் தொடங்கிய முதல் வாரத்தில் விண்ணப்பித்தவர்களுக்கு ஆகஸ்ட் 28 முதல் பதில்கள் கிடைத்திருக்க வேண்டும். எனினும், அவர்களுக்கான பதில்கள் இன்னும் அனுப்பப்படவில்லை. பெரும்பாலும் அக்டோபர் மாதம் தீபாவளிக்கு முன்பாகவே அவர்கள் பதில்களைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உங்களுடன் ஸ்டாலின்
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்கள் தங்கள் மனுவின் நிலையை https://kmut.tn.gov.in/ என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் தெரிந்துகொள்ளலாம்.
சமீபத்தில் வெளியிடப்பட்ட தகவல்களின்படி, மகளிர் உரிமைத் திட்டத்தின் பயனாளிகள் மற்றும் தகுதியற்றவர்கள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. தமிழக அரசு அறிக்கையின்படி, "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம்களில் சுமார் 25 லட்சம் மனுக்கள் பெறப்பட்டன. இவற்றில், மகளிர் உரிமைத் திட்ட நிதி உதவி கோரி 15 லட்சம் பெண்கள் விண்ணப்பித்துள்ளனர்.
பெறப்பட்ட அனைத்து மனுக்களும் முறையாகப் பதிவு செய்யப்பட்டு, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். மனுக்கள் மீதான செயல்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாகவும், அடுத்த 45 நாட்களுக்குள் இம்மனுக்களுக்குத் தீர்வு காணப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு விண்ணப்பம்
காஞ்சிபுரத்தில் ஒரு நாள் பயணமாக வந்திருந்த தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அரசு மற்றும் திமுக கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட செவிலிமேட்டில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அவர் பங்கேற்றார்.
இவ்விழாவில், 17 துறைகளைச் சேர்ந்த 4997 பயனாளிகளுக்கு ரூ.253 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை துணை முதலமைச்சர் வழங்கினார். மேலும், 3846 பயனாளிகளுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டதுடன், புதிதாகக் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்களும் திறந்து வைக்கப்பட்டன. புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல்லும் நாட்டப்பட்டது.
விழாவில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், "ஒன்றிய பாஜக அரசின் அடையாளம் அடக்குமுறை; அதிமுகவின் அடையாளம் அடிமைத்தனம்; ஆனால், திமுக அரசுதான் சமூக நீதிக்கான அரசு" என்று குறிப்பிட்டார்.
மகளிர் உரிமைத் தொகை திட்டம்
திமுக அரசின் முக்கிய திட்டங்களான மகளிர் உரிமைத் தொகை திட்டம், மகளிர்க்கு மகப்பேறு நிதி உதவி திட்டம், மற்றும் காலை உணவு திட்டம் ஆகியவற்றின் சாதனைகளையும் அவர் பட்டியலிட்டார். மகளிர் உரிமைத் தொகை திட்டத்தால் ஒரு கோடியே 15 லட்சம் பெண்கள் பயன்பெறுவதாகவும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் 1 லட்சத்து 73 ஆயிரம் பெண்கள் இத்திட்டத்தில் பயனடைந்து வருவதாகவும் தெரிவித்தார்.
"உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தில் மனு அளித்த பெண்களுக்கு முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, கலைஞர் உரிமைத் தொகை திட்டம் விரைவில் அனைவருக்கும் வழங்கப்படும் என்று உதயநிதி ஸ்டாலின் உறுதி அளித்தார். இறுதியாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று நம்பிக்கை தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications