"ஜிஎஸ்டி சிவராத்திரி!" வரிகள் குறைந்தாலும் பொருட்களின் விலை குறையாதாம்! சு.வெங்கடேசன் சொன்ன பாயிண்டு
சென்னை: ஜிஎஸ்டி வரி குறைப்பு நாளை முதல் அமலுக்கு வரும் சூழலில் பிரதமர் மோடி இது தொடர்பாக இன்று நாட்டு மக்களிடையே உரையாற்றினார். இதற்கிடையே பிரதமர் மோடியை மிகக் கடுமையாக விமர்சித்துள்ள மதுரை எம்பி சு வெங்கடேசன், 8 ஆண்டுகளாக ஜி.எஸ்.டி வரி கொடுமையால் மக்களின் தூக்கத்தைக் கெடுத்து சிவராத்திரி ஆக்கியதற்கு யார் பொறுப்பு என கேள்வி எழுப்பியுள்ளார்
ஜிஎஸ்டி கவுன்சில் ஜிஎஸ்டி வரி அமைப்பில் பல்வேறு சீர்திருத்தங்களை முன்மொழிந்திருந்தது. இவை அனைத்தும் நாளை செப்டம்பர் 22ம் தேதி அமலுக்கு வருகிறது. இதன் மூலம் பல்வேறு பொருட்களின் விலையும் கணிசமாகக் குறைகிறது. இதை முன்னிட்டு ஜிஎஸ்டி வரி குறைப்பு தொடர்பாகப் பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களிடையே உரையாற்றினார்.

சு வெங்கடேசன்
இதை மதுரை சிபிஎம் எம்பி சு வெங்கடேசன் கடுமையாக விமர்சித்துள்ளார். ஜிஎஸ்டி என்ற பெயரில் இத்தனை ஆண்டுகள் மக்களிடம் கொள்ளை அடித்து விட்டு இப்போது ஏன் ஆரவாரம் எனக் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "நவராத்திரி துவக்க நாளில் ஜி.எஸ்.டி சலுகை அமலாகிறது என மகிழ்ச்சியை பகிர்ந்த பிரதமர் அவர்களே, 8 ஆண்டுகளாக ஜி.எஸ்.டி வரி கொடுமையால் மக்களின் தூக்கத்தை கெடுத்து சிவராத்திரி ஆக்கியதற்கு யார் பொறுப்பு?
புரியாத இந்தியில் பேச்சு
ஊடகங்களை எப்போதுமே சந்திக்க மறுக்கிற பிரதமர் தொலைக் காட்சியில் வழக்கம் போல ஒருவழி உரை... ஜி.எஸ்.டி வரிக் குறைப்பால் பெண்கள் விவசாயிகள் நடுத்தர வர்க்கத்தினர் பயன் பெறுவார்கள்... ஒவ்வொரு குடும்பமும் மகிழ்ச்சி அடையும்... எனப் பிரதமர் நமக்குப் புரியாத இந்தியில்..!" என்று கடுமையாக சாடியுள்ளார்.
பிரதமர் மோடி இன்று மாலை 5 மணிக்கு நாட்டு மக்களிடையே ஜிஎஸ்டி தொடர்பாக உரையாற்றினார். ஜிஎஸ்டி வரி குறைப்பு மூலம் மக்களின் பணம் சேமிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார். மேலும், ஏற்கனவே வருமான வரி குறைக்கப்பட்ட நிலையில், இப்போது ஜிஎஸ்டி வரியும் குறைக்கப்படுவதாகவும் இதுவே பொதுமக்களுக்கு இரட்டை தீபாவளி பரிசு என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
மன்னிப்பு கேட்பீர்களா
இதை சாடியுள்ள சு வெங்கடேசன் மேலும், "இருக்கட்டும் பிரதமரே.. இத்தனை ஆண்டுகளாக யார் விவசாயிகளை, பெண்களை, நடுத்தர வர்க்கத்தை வறுத்து எடுத்தது? யார் குடும்பங்களின் மகிழ்ச்சியை குலைத்தது? நவராத்திரி துவக்க நாளில் ஜி.எஸ்.டி சலுகை அமலாகிறதாம். 8 ஆண்டுகளாக நீங்களே வறுத்து நீங்களே குலைத்து தூக்கத்தை கெடுத்து எத்தனை இரவுகளை சிவராத்திரிக்கள் ஆக்கினீர்கள். அதற்கெல்லாம் மக்களிடம் மன்னிப்பு கேட்பீர்களா?
விலை குறையுமா?
இப்பவும் வசூல் செய்கிற மொத்த ஜி.எஸ்.டி-இல் நீங்கள் கொடுத்திருக்கிற சலுகை எத்தனை சதவீதம்? இத்தனை ஆண்டுகள் மக்களிடம் "கொள்ளை" அடித்து விட்டு இப்போது தரும் அற்ப சலுகைக்கு இவ்வளவு ஆரவாரமா? இந்த சலுகை மக்களுக்கு போய்ச் சேருமா? அதற்கு என்ன உத்தரவாதம்? உங்க கார்ப்பரேட் நண்பர்கள் விடுவார்களா? உங்கள் கைகளில் கார்ப்பரேட் வரி விதிப்பு அதிகாரம் உள்ளதே. கார்ப்பரேட் வரிகளை உயர்த்தி மாநில அரசுகளுக்கு இழப்பீடு தருவீர்களா? மாநில அரசுகள் நிறைவேற்றி வரும் மக்கள் நலத் திட்டங்களுக்கு நிதிபாதிப்பு வராமல் உறுதி செய்வீர்களா?" என்று கடுமையாகச் சாடியுள்ளார்.












Click it and Unblock the Notifications