வாழ்க்கையையே மாற்றும் வழிகாட்டி மதிப்பு.. அரசு இலவசமாக தந்த இடத்தில் வசிப்பவர்கள் அறிய வேண்டியவை
சென்னை: அரசு வழங்கிய இடத்தில் குடியிருப்பவர்கள், நிலத்தை விற்க வழிகாட்டி மதிப்பு நிர்ணயம் செய்ய வேண்டும்.. அப்படி வழிகாட்டி மதிப்பு நிர்ணயம் செய்யாவிட்டால், அந்த இடத்தை யாருக்குமே விற்க முடியாது. இந்த விவகாரத்தில் அரசு துறை அதிகாரிகளை எப்படி அணுகுவது. அரசு வழங்கிய இடத்திற்கு வழிகாட்டி மதிப்பை நிர்ணயம் செய்ததற்கான வழிமுறைகள் என்ன என்பதை இந்த பதிவில் நாம் பார்ப்போம். ஏனெனில் இன்றைய சூழலில் வழிகாட்டி மதிப்பு இருந்தால் தான் எந்த இடத்தையும் விற்கவே முடியும்.
தமிழ்நாட்டில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை பல ஊர்களில் மக்கள் அரசு வழங்கிய இடங்களில பல ஆண்டுகளாக வசித்து வருகிறார்கள். அவர்கள் அரசு சார்பில் வழங்கிய பட்டாவில் வீடு கட்டி குடியிருந்து வருவார்கள். ஆனால் எங்கள் இடத்தை விற்பனை செய்வதற்கு பத்திரப்பதிவு அலுவலகத்தில் மறுத்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கு காரணம் என்னவென்று பார்த்தால், அவர்களின் பகுதிக்கு வழிகாட்டி மதிப்பு நிர்ணயம் செய்யப்படவில்லை என்பது தான். அரசு வழங்கிய பகுதியில் உள்ள வீடுகள், இடங்களை விற்பனை செய்ய முடியாது என்பதே நிலைமையாக உள்ளது. அதற்கு பத்திரப்பதிவு அலுவலகத்தில் வழிகாட்டி மதிப்பு நிர்ணயம் செய்து வழங்கினால் தான் விற்க முடியும். இப்படியான சூழலில் அரசு வழங்கிய இடத்தில் குடியிருப்பவர்கள், அந்த நிலத்தை விற்க வழிகாட்டி மதிப்பை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றால், அதற்கான வழிமுறைகள் உள்ளன.

பொதுவாக நிலத்தின் வழிகாட்டி மதிப்பை பொதுவாக சம்பந்தப்பட்ட பதிவுத் துறை தான் நிர்ணயிக்கிறது. எனவே அரசு நிலத்தில் குடியிருக்கிறீர்கள் என்றால், நீங்கள் விற்க விரும்பும் நிலம் அமைந்துள்ள பகுதியின் தற்போதைய வழிகாட்டி மதிப்பை தமிழ்நாடு அரசின் பதிவுத் துறை இணையதளத்தில் அறியலாம். ஆன்லைன் விவரங்கள் தெரியாது என்றால், உங்கள் பகுதி சார்பதிவாளர் அலுவலகத்தில் சர்வே எண், கிராமத்தின் பெயர், தெருப் பெயர் போன்ற விவரங்களைக் கொடுத்து தெரிந்து கொள்ளலாம். இது பொதுவான மதிப்பை அறியலாம்.
பொதுவாக நீங்கள் குடியிருக்கும் இடம், அரசு வழங்கிய வீட்டுமனைப் பிரிவாக (Lay out) இருந்து, அதன் வழிகாட்டி மதிப்பு இன்னும் விவசாய நிலத்திற்கான மதிப்பாகவே இருக்க வாய்ப்பு உள்ளது. அல்லது மனைக்கான நிலத்தின் மதிப்பு பூஜ்யமாக இருக்க வாய்ப்பு உள்ளது. எனவே அதை மனை நிலத்திற்கான (Housing Plot) மதிப்பாக மாற்றுவதற்கு விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு முதலில் அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும். அரசு ஒப்புதல் அளித்த உடன், நீங்கள் உங்கள் மாவட்டப் பதிவாளருக்கு (District Registrar) அல்லது துணைப் பதிவுத்துறை தலைவருக்கு மனு அளிக்கலாம்.
புதிய மனைப்பிரிவுகள் பதிவுக்கு வரும் போது, அதன் மதிப்பை நிர்ணயிக்க மாவட்டப் பதிவாளர், அரசின் ஒப்புதலுக்கு பின்னர், நேரில் ஆய்வு செய்து சந்தை மதிப்பு குறித்து விசாரணை செய்து மதிப்பு நிர்ணயம் செய்வார். அரசு நிர்ணயித்துள்ள வழிகாட்டி மதிப்பு மிகக் குறைவாக இருப்பதாக நீங்கள் கருதினால், நீங்கள் விற்க விரும்பும் உண்மையான சந்தை மதிப்புக்கு கிரயப் பத்திரத்தை பதிவு செய்யலாம். (வழிகாட்டி மதிப்பை விட குறைவாக பத்திரம் செய்ய முடியாது, ஆனால் அதிகமாக செய்யலாம்).
அதேநேரம் அரசு நிர்ணயித்த வழிகாட்டி மதிப்பு மிகவும் அதிகமாக இருக்கிறது என்று நீங்கள் கருதினால், முத்திரைத் தாள் சட்டம் 47(A)-ன் கீழ், நீங்கள் விரும்பும் மதிப்பில் முத்திரைத் தாள்களை வாங்கி, பத்திரப்பதிவு செய்யலாம். இந்த ஆவணம் சார்பதிவாளரால் 'நிலுவைப் பத்திரம்' (Pending Document) என்று முத்திரையிடப்படும். அதன் பிறகு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் மூலம் கள விசாரணை செய்யப்பட்டு, உண்மையான மதிப்பு நிர்ணயிக்கப்படும். நிர்ணயிக்கப்பட்ட மதிப்புக்கும் நீங்கள் காட்டிய மதிப்புக்கும் வித்தியாசம் இருந்தால், அதற்கான தொகையை நீங்கள் செலுத்த வேண்டும். எனவே நிலத்தை விற்கும் வகையில் வழிகாட்டி மதிப்பை நிர்ணயம் செய்ய முதலில் அரசிடம் அனுமதி பெற வேண்டும். பின்னர் சார்பதிவாளர் அலுவலகத்தை அணுகி, உங்கள் நிலத்தின் தற்போதைய வழிகாட்டி மதிப்பை நிர்ணயம் செய்ய வைக்கலாம்.












Click it and Unblock the Notifications