நீட் தேர்வால் மாணவர் தற்கொலை- வருத்தம் தெரிவித்த கையோடு காதல் தோல்வி மரணங்களுடன் ஒப்பிட்ட ஹெச்.ராஜா!
சென்னை: நீட் தேர்வால் சேலம் அருகே மாணவர் தனுஷ் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கி இருக்கிறது. இந்த நிலையில் சேலம் மாணவர் தனுஷின் மரணத்துக்கு வருத்தம் தெரிவித்ததுடன் காதல் தோல்வி மரணங்களுடன் நீட் தேர்வு தற்கொலைகளை ஒப்பிடும் வகையில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா அதிர்ச்சி அளிக்கும் பேட்டி அளித்துள்ளார்.
Recommended Video
மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு இன்று நாடு முழுவதும் நடத்தப்பட்டது. கொரோனா கால கட்டுப்பாடுகளுடன் நீட் தேர்வு நடத்தப்பட்டது.
நீட் தேர்வால் பொருளாதாரத்தில் பின்தங்கிய, மாநில பாடத்திட்டங்களில் படிக்கக் கூடிய மாணவர்களின் மருத்துவ படிப்பு நிறைவேறாமலேயே போகிறது. நீட் தேர்வால் மருத்துவ படிப்பு கனவை தொலைத்த அரியலூர் அனிதாவில் தொடங்கிய மரணங்கள் சேலம் தனுஷ் வரை நீடிக்கிறது.

நீட் நிலைமை இதுதான்
பல லட்சம் ரூபாய் செலவு செய்து கோச்சிங் சென்டர்களில் படிக்க வசதி உள்ளவர்களால்தான் நீட் தேர்வை எதிர்கொண்டு வெல்ல முடிகிறது. அதுவும் கூட ஒரே அட்டம்ப்ட் முயற்சி கூட குதிரை கொம்பாக இருக்கிறது. குறைந்தபட்சம் 2 முறையாவது நீட் தேர்வை எதிர்கொண்ட மாணவர்களால்தான் மதிப்பெண்கள் பெற முடிகிறது.

சட்டசபையில் நாளை மசோதா தாக்கல்
இதனால் மன உளைச்சலுக்கு உள்ளாகும் சேலம் தனுஷ் போன்ற மாணவர்கள் உயிரை மாய்த்து கொள்கின்றனர். இதனால்தான் நீட் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும் என்கிற தமிழகத்தில் வலிமையாக ஒலிக்கிறது. தமிழக சட்டசபையில் நீட் தேர்வுக்கு எதிரான மசோதா நாளை தாக்கல் செய்யப்படுகிறது. அகில இந்திய அளவில் இந்த பிரச்சனையை முன்னெடுத்துச் செல்லப் போவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மாணவர் தற்கொலை வருத்தத்துக்குரியது-ஹெச்.ராஜா
இதேபோல் தமிழகத்தில் ஆளும் திமுக அரசு நீட் தேர்வுக்கு ஏன் இன்னமும் விலக்கு பெறவில்லை என அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கேள்வி எழுப்பி உள்ளன. இது தொடர்பாக புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த ஹெச்.ராஜாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இது தொடர்பாக ஹெச்.ராஜா கூறியதாவது: நீட் தேர்வு விவகாரத்தில் ஒரு மாணவர் உயிரிழந்துள்ளார். எந்த ஒரு உயிரிழப்புமே வருத்தத்துக்குரியதுதானே..

காதல் தோல்வியால் மரணங்கள்
காதல் தோல்வியால் எத்தனை பேர் இறந்து போகிறார்கள்? குடும்பத்துடன் எத்தனை பேர் இறந்து போகின்றனர்? அப்படி எனில் தமிழகத்தில் காதலை தடை செய்வோம் என பேசுவீர்களா? இதற்காக தீர்மானம் கொண்டுவர வேண்டும் என கேட்பீர்களா? வாட்ஸ் இஸ் திஸ்? மாணவர்கள் தேர்வுகளை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.

நீட் தேர்வை தடுக்கவே முடியாது
ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசியல்வாதிகள் மாணவர்களை தொங்கலில் வைக்காதீர்கள். அவர்கள் தலைக்கு மேலே கத்தியை தொங்கவிடாதீர்கள். நீட் தேர்வை யாரும் எதுவும் செய்ய முடியாது. நீட் தேர்வு நடப்பதை எந்த ஒரு சக்தியாலும் தடுக்கவே முடியாது. நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயாராக வேண்டும் என பேசுகிறவர்தான் கல்வி அமைச்சர் பொறுப்புக்குத் தகுதியானவர். முதல்வர் பதவிக்குத் தகுதியானவர். நீட் தேர்வுக்கு தயாராவதற்காக மட்டுமே ஜெயலலிதா விலக்கு கேட்டிருந்தார். நீட் தேர்வையே ரத்து செய்ய வேண்டும் என மறைந்த ஜெயலலிதா அம்மையார் கேட்கவில்லை. நீட் தேர்வு தயாரிப்புக்கு பல ஆண்டுகள் கொடுத்தாகிவிட்டது. நீட் தேர்வுக்கு தயாராகவில்லை எனில் அரசாங்கத்தின் கல்வித்துறையின் தவறு. இவ்வாறு ஹெச்.ராஜா கூறினார்.












Click it and Unblock the Notifications