ஜனநாயகன் விவகாரத்தில் பாஜக தலையீடா? ”விஜய் வெளியவே வந்திருக்க மாட்டார்..” ஹெச் ராஜா
சென்னை: "நாங்க நெருக்கடி கொடுக்க நினைத்திருந்தால் செப்டம்பர் 27 ஆம் தேதியே கொடுத்திருப்போம்.. விஜய் வெளியவே வந்திருக்க முடியாது" என பாஜக தலைவர் ஹெச் ராஜா கூறியுள்ளார். ஜனநாயகன் திரைப்பட சென்சார் சான்று விவகாரத்தில் பாஜக நெருக்கடி கொடுக்கிறதா? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ஹெச் ராஜா இவ்வாறு பதில் அளித்துள்ளார்.
மேலும் கூறிய அவர், "மனிதாபிமானத்தோடு பாஜக அரசு செயல்படுகிறது என்றும், நாங்க எப்பவுமே ஒருத்தருடைய பலவீனத்தை கையில் எடுத்து நெருக்கடி கொடுப்பது இல்லை" என்றும் ஹெச் ராஜா கூறியுள்ளார்.

ஜனநாயகன் ரிலீஸ் ஒத்திவைப்பு
நடிகர் விஜய், இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஜனநாயகன். இந்த படத்தை கேவிஎன் புரொடெக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. நடிகை பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல், பிரகாஷ் ராஜ், நரேன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்த படமானது நாளை ரிலீஸ் ஆகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது. ஆனால் படத்திற்கு சென்சார் சான்று வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக படத்தின் ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. சென்சார் சான்று வழங்க கோரி படக்குழு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த மனு மீது நாளை காலை 10.30 மணிக்கு நீதிபதி தீர்ப்பளிக்க உள்ளார்.
விஜய்க்கு ஆதரவாக வந்த காங்கிரஸ்
அப்போதே படம் படத்திற்கு சென்சார் சான்று கிடைக்குமா? இல்லையா? என்பது தெரியவரும். முதலில் ஜனநாயகன் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் தணிக்கை குழு உறுப்பினர்கள் ஒருவர் புகார் தெரிவித்ததன் காரணமாக சான்று வழங்கப்படவில்லை.
எனவே விஜய்யின் ஜனநாயகன் படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் சிலர் வேண்டுமென்றே தாமதம் செய்வதாக விஜய்யின் தவெக தொண்டர்கள் குற்றம்சாட்டினர். மேலும் இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியும் விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்தது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியும், பிரதமர் மோடி விஜய்யை நடிகராக மட்டும் இன்றி அரசியல்வாதியாகவும் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று கூறியது.
ஹெச் ராஜா கருத்து
இதேபோல் நடிகர், நடிகைகள் பலரும் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர் ஹெச் ராஜாவிடம், ஜனநாயகன் திரைப்பட விவகாரத்தில் பாஜக தலையீடு இருக்கிறதா? என கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-
விஜய்க்கு நாங்கள் நெருக்கடி கொடுக்க நினைத்திருந்தால் கடந்த செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதியே கொடுத்து இருப்போம். ஆனால் இதில் பாஜக மனிதாபிமானத்தோடு செயல்பட்டது. பாஜக நெருக்கடி கொடுத்தது என்று சொன்னால் இப்போது விஜய்யால் வெளியவே வந்திருக்க முடியாது..
விஜய் வெளியவே வந்திருக்க முடியாது
நாங்கள் எப்போது ஒருவரது பலவீனத்தை கையில் எடுத்து நெருக்கடி கொடுப்பது கிடையாது. இவ்வாறு அவர் கூறினார். விஜய்யின் கரூர் வேலுசாமிபுரத்தில் நடந்த பிரசாரம் கூட்டமானது கடந்த செப்டம்பர்ம் 27 ஆம் தேதி நடந்தது. இந்த கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியாகினர். இந்த சம்பவத்தை நினைவுப்படுத்தும் வகையில் ஹெச் ராஜாவின் கருத்து அமைந்திருந்தது.
விஜய்க்கு நெருக்கடி கொடுக்கிறதா பாஜக?
இதேபோல் அதிமுக பாஜக கூட்டணி அமைந்து பல மாதங்கள் ஆகிய சூழலிலும் தேமுதிக, டிடிவி, ஓபிஎஸ் ஆகியோர் இன்னமும் என்.டி.ஏவில் இணையாததற்கு ஒரு காரணமாக விஜய் இருந்து வருகிறார். அதேபோன்று விஜய்யால் என்.டி.ஏ கூட்டணிக்கும் இந்த தேர்தல் சற்று கடினமாகவே இருக்கும் என்பதால், விஜய்யை தன் பக்கம் இழுப்பதற்காக இப்படி சில விஷயங்களை மறைமுகமாக செய்வதாக அரசியல் நோக்கர்கள் கூறி வருகிறார்கள். அதற்கு மற்றொரு விஷயமாக கரூர் வழக்கில் விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பியதையும் குறிப்பிட்டு கூறி வருகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.


Click it and Unblock the Notifications
