கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி!
கோவை: கோவையின் பல்வேறு பகுதிகளில் இன்று (மார்ச் 16) ஆலங்கட்டி மழை பெய்ததால் குழந்தைகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர். ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப் பகுதியில் இன்று மாலை சுமார் அரை மணி நேரம் ஆலங்கட்டி மழை பெய்தது.
தமிழ்நாட்டில் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் கோவையில் கடந்த சில நாட்களாகவே அதிக அளவிலான வெயில் வாட்டி வருகிறது. இரவு நேரங்களில் சற்று இதமான சூழல் இருந்தாலும் காலை, மதியம் ஆகிய நேரங்களில் கோவையில் அதிக வெப்பநிலை நிலவி வருகிறது.

இந்நிலையில் இன்று (மார்ச் 16) மாலை பல்வேறு பகுதிகளில் மழைப்பொழிவு காணப்பட்டது. சூலூர், கருமத்தம்பட்டி, அன்னூர் ஆகிய பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் கனமழை பெய்து வெப்பத்தை தணித்தது. அதேசமயம் கோவை மாநகரிலும் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது.
குறிப்பாக சரவணம்பட்டி, காளப்பட்டி, சின்னவேடம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது. ஆலங்கட்டி மழை பெய்ததால் குழந்தைகளும் பொதுமக்களும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். கோவை மாநகரில் ஆலங்கட்டி மழை பெய்து பல மாதங்கள் ஆன நிலையில் இன்று திடீரென பெய்த ஆலங்கட்டி மழை அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
குழந்தைகள் பலரும் ஆலங்கட்டிகளை கையில் எடுத்து விளையாடி மகிழ்ந்தனர்.
கோவையில் திடீரென பெய்த ஆலங்கட்டி மழை மற்றும் கனமழையினால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.
ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப் பகுதியில் கொட்டவாடி, தாளவாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று மாலை 5 மணி அளவில் சுமார் அரை மணி நேரம் ஐஸ்கட்டி மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.












Click it and Unblock the Notifications