வயிற்றிலே பால் வார்த்த திமுக.. பெத்த பிள்ளைகளே பணம் தர்றதில்ல, இது தாய் வீட்டு சீதனம்.. பெண்கள் குஷி
சென்னை: 1000 ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டதுமே, பெண்களின் முகத்தில் பூரிப்பும், மகிழ்ச்சியும் தென்பட்டுவருகிறது.. நெகிழ்வுடன் தமிழக முதல்வருக்கு நன்றியையும் பகிர்ந்து வருகிறார்கள்.
மகளிர் உரிமைத்தொகையை ஒருவழியாக இன்று அமல்படுத்திவிட்டது திமுக அரசு.. அன்று திமுக பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, பலரும் ஆச்சரியத்துடன் மலைத்து பார்த்த திட்டம்தான் இந்த மகளிர் உரிமைத்திட்டம்.

ஒன்றரை வருட காலத்துக்கு பிறகு, இந்த திட்டத்தை அறிவித்தாலும், எப்படி முறைப்படுத்த போகிறது அரசு? எப்படி திட்டமிடப் போகிறது? வீடு வீடாக சென்று நேரடி ஆய்வு என்பது சாத்தியமா? என்பதெல்லாம் மிகப்பெரிய குழப்பமாக இருந்தது.
சவால்கள்: ஆனால், இந்த சவால்களை, மிகச்சரியான திட்டமிடலுடன், திமுக அரசு செயல்படுத்தி விட்டது என்றே சொல்லலாம்.. இதில், அதிகாரிகள், ரேஷன் கடை ஊழியர்கள், தன்னார்வலர்கள் என ஒவ்வொருவரின் பங்கும், அர்ப்பணிப்பும் பாராட்டுக்குரியது.
இந்த திட்டம் இன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.. ஒட்டுமொத்த திமுக கூடாரமே மகிழ்ச்சியில் திளைத்து காணப்படுகிறது.. தமிழகத்தின் பல்வேறு இடங்களில், சிறிய டவுன்களில் கூட, முதல்வர் ஸ்டாலின் போட்டோவுடன் மகளிர் உதவித்தொகை கட்அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன... திமுகவின் வாக்குறுதிகள் கிட்டத்தட்ட நிறைவேற்றிவிட்டதாகவே கருதப்படுகிறது.. அத்துடன் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
அதிருப்திகள்: அதுமட்டுமல்ல, ரூ.1,000 பெற்றுக்கொண்டு மகிழ்ச்சியோடு செல்லும் பயனாளிகளைப் பார்த்து, பணம் கிடைக்கப் பெறாதவர்கள் அதிருப்தியடையாத விதமாக, திட்டத்தின் தொடக்க விழா நடக்கும் இடத்திலேயே அரசு அதிகாரிகள் முகாம் அமைக்க முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார் என்பது ஆறுதலான விஷயமாகவும் அமைந்து வருகிறது.
1000 ரூபாய் பணம் கிடைத்த பெண்கள் தங்களது மகிழ்ச்சியை தொடர்ந்து பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.. இந்த பேச்சுதான் இணையதளம் பூராவும் பரவி கொண்டிருக்கிறது..
ஆயிரம் ரூபாய்: ஆயிரம் ரூபாய் கிடைத்ததில் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி.. ஏற்கனவே, பெண்களுக்காக இலவச பயணம், புதுமைப் பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வரும்போது, இந்த 1000 ரூபாய் அடுத்த அதிரடியாக உள்ளது. இந்த காலத்தில், பெற்ற பிள்ளைகளே, ஆயிரம் ரூபாய் கொடுப்பது சாத்தியமில்லை.. ஆனால், முதல்வர் தந்துள்ளது, எங்களுக்கு தாய் வீட்டு சீர் போல இருக்கிறது.. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை இந்த ஆட்சியால் பயன் அடைந்து வருகிறார்கள்.
இந்த பணத்தை செல்வ மகள் திட்டத்திற்கு நான் பயன்படுத்துவேன். நான் இதை செலவு செய்ய மாட்டேன்.. மாத மாதம் மளிகை பொருட்கள், ஆஸ்பத்திரி செலவுக்கு எங்களுக்கு இது உபயோகமாக இருக்கும்.. என்னால் வேலைக்கு போக முடியாத சூழலில் இந்த பணம் உதவும்" என்று ஒவ்வொரு பெண்களும் மகிழ்ச்சியையும், நன்றியையும் பகிர்ந்து வருகிறார்கள்.
மகிழ்ச்சி: பல வீடுகளில், மனைவிகளிடம் சம்பள பணத்தை கணவன்மார்கள் தருவதில்லை.. அப்படியிருக்கும்போது, இந்த 1000 ரூபாய் பணம் தங்களுக்கு பேருதவியாக இருக்கும் என்று நெகிழ்ந்து கூறுகிறார்கள், பணப் பலனடைந்த பெண்கள்..!!!












Click it and Unblock the Notifications