பிறை 10.. முஹர்ரம் மாதத்தில் இத்தனை சிறப்புக்களா? ஆஹா.. இஸ்லாமியர்களுக்கு பெயிராவின் மொகரம் வாழ்த்து
சென்னை: மொகரம் வாழ்த்துக்களை பெயிரா தெரிவித்துள்ளது.. அத்துடன், முஹர்ரம் மாதத்தின் சிறப்புகளை லிஸ்ட் போட்டு சொல்லி இந்த வாழ்த்துகளை பெயிரா கூறியிருப்பது, பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தலைவர் ஆ.ஹென்றி வெளியிட்டிருக்கும் அந்த வாழ்த்து அறிக்கை இதுதான்:

"முஹர்ரம் மாதம் இஸ்லாமியர்களின் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது. முஹர்ரம் மாதத்தின் 10ஆம் நாள் ஆஷுரா தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த மாதத்தில் பிறை 9 மற்றும் பிறை 10 ஆம் நாளில் நோன்பு வைப்பது சிறப்பானதாக கருதப்படுகிறது.
இந்தப் புனித மாதத்தில் சண்டைகள், போர்கள் புரிவதற்கும் தடை செய்யப்பட்டுள்ளது. முஹர்ரம் பத்தாம் நாளான ஆஷுரா, இந்நாளை சன்னி பிரிவினர் மகிழ்ச்சியான நாளாக நோன்பு வைத்து கொண்டாடுகின்றனர்
என்ன காரணம்: காரணம், நான்தான் கடவுள், என்னைத்தான் அனைவரும் வணங்க வேண்டும் என்று தன்னை தானே கடவுளாக அறிவித்து கொண்டு எகிப்து நாட்டை ஆட்சி செய்த மிகக் கொடூர அரசனான ஃபிர்அவ்ன் பனூ இஸ்ரவேலர்களை கொல்வதற்காக, தன் பெரும் படையுடன் புறப்பட்டபோது, மூஸாநபி(அலை) அவர்கள் பனூ இஸ்ரவேல் மக்களை காப்பதற்காக தன்னுடன் அழைத்துக் கொண்டு செல்லும் வழியில் கடலை கடக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
அந்த சமயத்தில் மூஸா நபி(அலை) அவர்கள் இறைவனைப் பிரார்த்தித்தார்கள் அப்பொழுது இறைவன் ஆணையின் படி தன் கைத்தடியை கடலில் ஓங்கி அடித்தார்கள். கடல் இரண்டாகப் பிளந்து இரு பக்கமும் மலைபோல் தண்ணீர் நிற்க, இடையில் பாதை இருந்தது. அந்தப் பாதையில் மூசா நபி அவர்களும் மற்றும் பனூஇஸ்ரவேல் மக்களும் பாதுகாப்பாக கடந்து சென்றனர்.
ஆதாரம்: அவர்களை கொல்வதற்காக பின் தொடர்ந்து வந்த எகிப்து அரசன் ஃபிர்அவ்ன் மற்றும் அவனது பெரும்படையினரும் அந்த பாதையை கடக்கும் போது இறைவன் பிளந்து இருந்த கடலை இணைக்க செய்தான்.அதில் ஃபிர்அவ்ன் மற்றும் அவனது பெரும் படையினரும் கடலில் மூழ்கி இறந்து போனார்கள். இந்த நிகழ்விற்கு ஆதாரமாக ஃபிர்அவ்ன் மன்னனின் உடலை அழியாமல் இறைவன் பாதுகாத்தான். கடலில் இருந்து கண்டெடுக்கப்பட்ட ஃபிர்அவ்ன் உடல் இன்றும் எகிப்து மியூசியத்தில் உள்ளது.
இந்த நிகழ்வை நினைவு கூறும் விதமாகவும் மற்றும் வெற்றி நாளாகவும் இஸ்லாமியர்களும் மற்றும் யூதர்களும் நோன்பு வைப்பது வழக்கம் ஆகும்.
ஆனால் ஷியா பிரிவினர் இந்நாளை துக்க நாளாக அனுசரிப்பார்கள். காரணம் கர்பலா போரில் முகமது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பேரன் உசைன் இப்னு அலி அவர்கள் சூழ்ச்சியால் கொல்லப்பட்டார்கள். இதன் காரணமாக தங்களை தாங்களே அடித்துக் காயப்படுத்திக் கொண்டு இந்த ஆஷுரா தினத்தை துக்கத்தினமாக கடைப்பிடிக்கின்றனர்.
மன்னிக்கப்படும்: முஹர்ரம் மாதம் பிறை 9 மற்றும் 10ஆம் நாள்களில் நோன்பு வைப்பதன் மூலம் நாம் கடந்த ஒரு வருடம் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது" என்று பெயிரா தலைவர் ஹென்றி தன்னுடைய வாழ்த்து செய்தியில் தெரிவித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications