சர்க்கரை அட்டைதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்? இனி ரேஷனில் இதுவும் அரை லிட்டர் தரப்போறாங்களா? ஜரூர் பணி
சென்னை: தமிழக மக்களின் நன்மைக்காகவும், விவசாயிகளின் வாழ்வாதாரம் செழிக்கவும் தமிழக அரசு ரேஷன் கடைகளில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
தமிழகத்திலுள்ள தென்னைமர விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்றவும், உள்ளூர் வணிகத்தை ஊக்குவிக்கவும், பாமாயில் இறக்குமதி ஒப்பந்த புள்ளியை ரத்து செய்துவிட்டு, தேங்காய் எண்ணெய் கொள்முதலுக்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றும், ரேஷன் கடைகளிலும் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்ய வேண்டும் என்றும் தேங்காய் விவசாயிகள் வேண்டுகோளை விடுத்து வருகிறார்கள்.

அதேபோல, கேரளா, கர்நாடகா, தமிழக தென்னை விவசாயிகள் மத்திய அரசிடம் கொள்முதல் செய்த கொப்பரையை வெளி மார்க்கெட்டில் விற்க கூடாது என்றும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
அறிக்கைகள்: இந்த கோரிக்கையை முன்னிறுத்தியே தமிழக அரசியல் கட்சி தலைவர்களும், அரசுக்கு அறிக்கைகள் மூலம் கேட்டு வருகிறார்கள்.. உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், கடலை எண்ணெய்யை மக்களுக்கு வழங்கினால் நம் நாட்டை சேர்ந்த சிறு, குறு எண்ணெய் உற்பத்தியாளர்கள் பயன்பெறுவார்கள் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
இதையடுத்து, தமிழக அரசு இதற்கான முன்னெடுப்புகளை தொடங்கியிருக்கிறது.. 2 நாட்களுக்கு முன்பு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா செய்தியாளர்களிடம் பேசும்போது, "வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயிலுக்கு சந்தையில் நல்ல விலை கிடைக்கிறது. இருந்தாலும், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தேங்காய் எண்ணெய் மற்றும் கடலை எண்ணெய்யை நியாயவிலை கடைகளில் விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றார்.
தமிழக அரசு: இந்நிலையில் இன்னொரு முக்கியமான தகவல் வெளியாகியிருக்கிறது. ரேஷனில் பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணெய் வழங்கலாமா என்பது குறித்து ரேஷன் கார்டுதாரர்களிடம் கருத்து கேட்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாம்.
அதாவது, ஒரு லிட்டர் பாமாயிலுக்கு பதில் அரை லிட்டர் தேங்காய் எண்ணெய் ரேஷன் கார்டுகளுக்கு வழங்கலாமா என கார்டுதாரர்களிடம் கருத்து கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் அரசு இறுதி முடிவு எடுக்கும் என தெரிகிறது.
விரைவில் அமல்: சிவில் சப்ளை அதிகாரிகள் சொல்லும்போது, கருத்துகேட்பு அடிப்படையில் இத் திட்டத்தை முதற்கட்டமாக சோதனை ஓட்டமாக சில மாவட்டங்களில் அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதனுடைய வரவேற்பினை பொறுத்து, அனைத்து மாவட்டங்களுக்கும் படிப்படியாக விரிவுபடுத்தப்படும். இதற்கான நடவடிக்கைகள் வேளாண் வணிக துறை ஈடுபடுத்தப்படும் என்றனர்..












Click it and Unblock the Notifications