மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் ஹேப்பி! வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு ₹1000 டிசம்பரில் வருது
சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்த 28 லட்சம் பேரில், தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, அவர்களுக்கு வரும் டிசம்பரில் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த வாரம் சட்டப்பேரவையில் அதிரடியாக அறிவித்திருந்தார். இந்நிலையில், உரிமைத் தொகை குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. இது பெண்களுக்கு மகிழ்ச்சியை தந்து வருகிறது.
மகளிர் உரிமைத் தொகை கோரி, புதிதாக விண்ணப்பித்துள்ளவர்களில், வருமான வரி செலுத்தும் குடும்பத்தினரை தவிர்த்து, மற்றவர்களுக்கு உரிமைத் தொகை வழங்க நிதித்துறை ஒப்புதல் வழங்கி உள்ளது.

மகளிருக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை, தமிழக அரசு கடந்த 2023 செம்டம்பரில் துவக்கியது.. இந்த திட்டத்தில் பயன்பெற, தகுதியான நபர்களை தேர்வு செய்ய 9 வகையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால், 1.15 கோடி மகளிர் மட்டும், இத்திட்டத்தின் கீழ் பயன்பெற்று வருகின்றனர்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை
அதாவது பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கும் மற்றும் சொந்த வீடு, கார் உள்ளிட்டவை இல்லாத குடும்பத் தலைவிகளுக்கு மட்டுமே தற்போது கலைஞர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது..
எனினும், மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்கள், தமிழக அரசின் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.. அனைத்து பெண்களுக்கும் ஆயிரம் ரூபாய் என்று சொல்லிவிட்டு, பிறகு தகுதி வாய்ந்த பெண்களுக்கு மட்டும் உரிமைத்தொகை வழங்குவது எந்த விதத்தில் நியாயம்? அனைவருக்குமே ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
மற்றொருபக்கம் தகுதி வாய்ந்த பெண்கள் ஏராளமானோர் விண்ணப்பித்திருக்கும் நிலையில், அவர்களுக்கும் உரிமைத்தொகை கிடைக்காமலேயே உள்ளதாக சலசலப்புகள் எழுந்தவண்ணம் உள்ளன.
அதிருப்தி ஓட்டுகள்
அந்தவகையில் அதிருப்திக்குள்ளாகி உரிமைத்தொகை கிடைக்காதவர்களின் குடும்ப ஓட்டுகள், எதிர்க்கட்சிகளுக்கு செல்லும் நிலைமை உள்ளது. இதை தடுக்கவே, மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகள் எண்ணிக்கையை அதிகரிக்க, அரசு முடிவெடுத்துள்ளது.
அதனால்தான், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களை தமிழ்நாட்டில் கடந்த ஜூலை 15ம் தேதி தொடங்கப்பட்டது.. 45 நாட்களுக்கு 10 ஆயிரம் சிறப்பு முகாம்களை தமிழக அரசு நடத்த துவங்கி வெற்றிகரமாக நடத்தியது.
ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை,சமூக நலத்துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, சிறுபான்மையினர் துறை, வருவாய்த்துறை என 40-க்கும் மேற்பட்ட அரசு துறைகளின் சேவைகளை மக்கள் அரசு அலுவலகங்களுக்கு செல்லாமல் இந்த முகாம்கள் வாயிலாகவே பெற்றுக்கொள்ள வசதி செய்யப்பட்டது. இதில் பிரதானமாக மகளிர் உரிமைத்தொகைக்கான விண்ணப்பங்களும் பெறப்பட்டன.
ரூ.1000 பெறும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிதாக சேர எண்ணுபவர்கள் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் வாயிலாக மட்டுமே விண்ணப்பம் செய்ய வேண்டும் என்றும், உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெறாதவர்கள், ஏற்கெனவே விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்களும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் விண்ணப்பிக்கலாம் என்றும் தமிழக அரசு தெரிவித்திருந்தது.
டிசம்பருக்குள் உரிமைத்தொகை
அத்துடன் அதிகபட்சமாக 45 நாட்களுக்குள் இந்த விண்ணப்பங்கள் மீதான முடிவு தெரிந்துவிடும் என தமிழக அரசு உறுதியளிக்கவும், பல்வேறு மாவட்டங்களிலும் தினமும் ஆயிரக்கணக்கான பெண்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்தனர்.
அந்தவகையில், உங்களுடன் ஸ்டாலின் முகாம்' வாயிலாக, மகளிர் உரிமைத் தொகை வழங்கக் கோரி, புதிதாக 28 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் தகுதியானவர்களுக்கு, டிசம்பர் மாதம் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி சட்டசபையில் அறிவித்தார்..
வருமான வரி தவிர்த்து
மேலும், தகுதியான பயனாளிகளை இறுதி செய்யும் பணிகளில், வருவாய் துறையினர் கவனம் செலுத்தி வருகிறார்கள்.. இந்நிலையில், வருமான வரி செலுத்தும் குடும்பத்தினரை தவிர்த்து, மற்ற குடும்பங்களை சேர்ந்த பெண்களுக்கு, மகளிர் உரிமைத் தொகை வழங்க, தமிழக நிதித்துறை ஒப்புதல் வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது..
அதுமட்டுமல்ல, புதிய பயனாளிகளுக்கு, டிசம்பரில் மகளிர் உரிமைத் தொகை விடுவிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் தேர்தல் வரஉள்ள நிலையில், விடுபட்டவர்களுக்கும் உரிமைத்தொகை கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.












Click it and Unblock the Notifications