விஜய்யின் விஜயம்.. "திராவிடம்" இல்லாததே பெரிய மாறுதல்.. அப்ப பாஜக? சென்னை நீலாங்கரையில் சீமான் நறுக்
சென்னை: விஜய்யின் அரசியல் வருகை குறித்து, நாம் தமிழர் கட்சி சீமான் கருத்து கூறியிருக்கிறார். அத்துடன், மண்ணை ஆள்வதற்கு முன்னால் தமிழக மக்களின் மனங்களை விஜய் வெல்ல வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.
சமீபகாலமாகவே விஜய்யின் அரசியல் பெரிதும் பேசப்பட்ட வந்த நிலையில், லியோ படத்தின் வெற்றி விழாவில், இதற்கான அச்சாரம் போடப்பட்டதாக கருதப்பட்டது.

அந்த விழாவில் விஜய் பேசிய பேச்சிலிருந்து, வழக்கத்துக்கு மாறான அரசியல் வாடை தெறித்து விழுந்தது.. நடிகர்கள் இயல்பாக செய்யும், நலப்பணிகள், நலத்திட்ட உதவிகள் என்று மட்டுமே அதை எடுத்துக் கொண்ட கடந்துவிட முடியவில்லை.
தமிழ்தேசியம்: சமூகத்தில் சமநிலை வேண்டும் என்று உரக்க குரலெழுப்பிய அம்பேத்கரும், பெரியாரும், காமராஜரும் மாறி மாறி விஜய்யின் பேச்சில் நினைவுகூரப்பட்டனர். அத்துடன், தேமுதிக தலைவர் விஜயகாந்த் பாணியும் அவரிடம் தென்பட்டதை உணர முடிந்தது.
அதாவது, பெரியாரை முன்னிலைப்படுத்தியிருந்த விஜய், மறைந்த முதல்வர்கள் அண்ணாவின் பெயரையோ, கலைஞர் பெயரையோ சொல்லவில்லை.. மாறாக, பெரியார், அம்பேத்கர், காமராஜர் பெயரை மட்டுமே முன்னிலைப்படுத்தியதால், இந்துத்துவாவுக்கு எதிரான அரசியலை கையில் எடுக்க போகிறாரா? என்ற சந்தேகத்தையும் அதிகப்படுத்தியிருந்தார் விஜய்.
அதேசமயம், தமிழ்த் தேசிய சிந்தனைகளிலும் அவரது ஈடுபாடு இருப்பதாக தெரியவில்லை. அப்படியானால், விளிம்பு நிலை மக்களுக்கான அரசியலை மட்டுமே விஜய் முன்னெடுக்கக்கூடும் என்றும் அனுமானங்கள் வட்டமடித்தன. சுருக்கமாக சொல்லப்போனால், அது மாதிரியும் இல்லாமல், இது மாதிரியும் இல்லாமல், புது மாதிரியான அரசியலாக இருக்கும் என்றே கணிக்கப்பட்டது.
சீமான் : எப்போதுமே விஜய்க்கான ஆதரவை தொடர்ந்து தந்து வருபவர் சீமான்.. அந்தவகையில், லியோ பட விழாவின்போதும், விஜய்யின் அரசியல் வருகை குறித்து, செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
அதற்கு சீமான், "தம்பி விஜய்யின் கனவு வெல்வதற்கு வாழ்த்துவோம். எம்ஜிஆரே கட்சித் தொடங்க பயந்தார். திமுகவில் இருந்து விலகிவிட்டு என்ன செய்வதென்று அவருக்கு தெரியல.. அதுக்கப்பறம் சரி, நடத்திதான் பார்ப்போமே என்று கட்சி தொடங்கிவிட்டார். உடனே எம்ஜிஆரை பார்த்து என்டிஆர் ஆரம்பித்தார். ஆனால் சிரஞ்சீவி, பவன் கல்யாணால் அது முடியவில்லை. விஜயகாந்த் வலிமையாகத்தான் இருந்தார். ஆனால் தனித்து நிற்காமல் ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்துவிட்டார்.
விஜய்: ஆக, நின்று சண்டை செய்ய வேண்டும். அப்போதுதான் வெற்றியை நெருங்க முடியும். ஒரே நாளில் எதையும் சாதிக்க முடியாது. கட்சி தொடங்கிய உடனே வெற்றி பெற்றால் அது பெரும் புரட்சி தான். ஆனால், அப்படியான நிலை இப்போது உள்ளதா? என்று யோசிக்க வேண்டும். தம்பி விஜய்யின் கனவு வெல்ல நான் வாழ்த்துகிறேன். என் அன்பிற்குரிய தம்பி என்பதால் ஒரு அளவுக்கு மேல் என்னால் பேச முடியாது" என்றார் சீமான்.
வாழ்த்து: அப்படியானால், பாஜகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை விஜய் எடுத்தால் ஆதரவு தருவீர்களா? என்று செய்தியாளர்கள் கேட்டார்கள்.. "விஜய் நிலைப்பாட்டை எடுக்கும்போது இதை பேச வேண்டும். அவர் என்ன கொள்கையை எடுத்து வைக்கிறார்? அதை பற்றி எதுவுமே தெரியாமல் எப்படி கருத்து சொல்வது?
பாஜகவை ஆதரிக்கும் முடிவை விஜய் எடுக்கமாட்டார்.. விஜய் நீங்கள் நினைப்பது போல் இல்லை, அவர் வரும்போது சரியான முடிவை எடுப்பார்" என்று கூறியிருந்தார் விஜய். இன்றைய தினம் விஜய் கட்சியை அறிவித்திருக்கும் நிலையில், மீண்டும் சீமானிடம் கருத்து கேட்கப்பட்டது. செய்தியாளர்களை நீலாங்கரையில் சந்தித்து சீமான் கூறியதாவது:
திராவிடம்: "விஜய்யின் அரசியல் வருகையால் நாம் தமிழருக்கு எந்த பாதிப்பும் இல்லை.. தமிழக வெற்றி கழகம்.. கட்சி பெயர் நன்றாக இருக்கிறது. வரவேற்கிறேன். கட்சி பெயரில் திராவிடம் என்று இல்லாததே பெரிய மாறுதல் தான். அவருக்கான வாக்காளர்கள் அவருக்கு. எனக்கான வாக்காளர்கள் எனக்கு. விஜய் கடினமாக உழைக்க வேண்டும். மண்ணை ஆள்வதற்கு முன்னால் தமிழக மக்களின் மனங்களை விஜய் வெல்ல வேண்டும்" என்று தெரிவித்துள்ளார் சீமான்.
சீமான் அன்று பேட்டியளித்தபோது, "பாஜகவை ஆதரிக்கும் முடிவை விஜய் எடுக்க மாட்டார்" என்று உறுதியாக சொல்லியிருந்தார்.. இன்று பேட்டியளித்தபோது, "திராவிடம் என்று இல்லாததே பெரிய மாறுதல் தான்" என்று கூறியிருக்கிறார்.. அப்படின்னா???












Click it and Unblock the Notifications