ராணுவ போட்டி தேர்வில் ப்ளூடூத் மூலம் காப்பி.. ஆள்மாறாட்டம் செய்த வடமாநில இளைஞர்கள்.. 29 பேர் கைது!
சென்னை: சென்னையில் நடைபெற்ற ராணுவத் தேர்வில் ப்ளூடூத் மூலம் காப்பியடித்ததோடு, ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட 29 வடமாநில இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
சென்னை நந்தம்பாக்கம் எம்.எச். சாலையில் செயல்பட்டு வரும் ராணுவப் பள்ளியில் பாதுகாப்புத் துறையில் கீழ்நிலை பணிக்கான குரூப் - சி தேர்வு நடைபெற்றது.
இந்த தேர்வில் மொத்தமாக 1,728 நபர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். அதேபோல் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களும் தேர்வு எழுதினர்.

தேர்வில் ஆள்மாறாட்டம்
இந்த நிலையில் பாதுகாப்புத் துறை தேர்வில் கலந்து கொண்ட ஹரியானாவைச் சேர்ந்த 29 பேர் சிறிய அளவிலான ப்ளூடூத் கருவியின் உதவியுடன் தேர்வு மையத்துக்கு வெளியே இருக்கும் நபர்களின் உதவியுடன் விடைகளை எழுதியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் மாணவர்களில் சிலர் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.

29 பேர் கைது
இதனைத்தொடர்ந்து ராணுவ மருத்துவமனை அதிகாரிகள் சார்பில் 10 ராணுவத்தினர் நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. இந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், ஹரியானாவைச் சேர்ந்த மாணவர்கள் பயன்படுத்திய ப்ளூடூத் கருவிகளை பறிமுதல் செய்து, 29 பேரை கைது செய்தனர்.

ப்ளூடூத் கருவி
அந்த ப்ளூடூத் கருவி காதின் உள்ளே வைக்கப்பட்டால் தெரியாத அளவில் சிறிய வடிவத்தில் இருப்பதாகவும், அது சிறிய ஆண்டெனாவின் உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் காவல் துறையினர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ஜாமீனில் விடுவிப்பு
தொடர்ந்து ஹரியானாவைச் சேர்ந்த 29 பேர் மீது தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதனால் அவர்கள் அனைவரும் மீண்டும் பாதுகாப்புத் துறை சார்பாக நடத்தும் தேர்வுகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பின்னர் கைது செய்யப்பட்ட 29 பேரும் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

காப்பியடித்ததால் பரபரப்பு
பாதுகாப்புத் துறை சார்பாக நடத்தப்பட்ட தேர்வில் வடமாநில இளைஞர்கள் ப்ளூடூத் மூலம் காப்பியடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மைக் காலமாக தொழிற்நுட்ப உதவியுடன் மத்திய அரசுப் பணிகளுக்கான தேர்வுகளில் வடமாநில இளைஞர்கள் காப்பியடித்து சிக்கும் சம்பவம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications