பிராமண எதிர்ப்பு காலாவதியாகிவிட்டதா? - தவெக பொருளாளர் சொல்வது சரியா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் பொருளாளர் பி.வெங்கட்ராமன் ஆங்கில பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில், 'பிராமண எதிர்ப்பு சித்தாந்தம் என்பது காலாவதியாகிவிட்டது' என்று தெரிவித்துள்ளார்.

தவெக தங்களின் கொள்கைத் தலைவர்களில் பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோரை முன்வைத்து வருகிறது. அதில், பெரியார் முன்வைத்த நாத்திகவாதத்தை மட்டும் விலகிவிட்டு, மீதமுள்ளவற்றை தங்களின் கட்சிக் கொள்கையாக எடுத்துக் கொள்ளும் எனக் கட்சியின் நிறுவனர் விஜய்யே பேசியிருந்தார்.

Vijay

அப்போது தவெகவின் கொள்கையை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், "ஒன்று கருவாட்டுக் குழம்பு எனச் சொல்ல வேண்டும். இல்லை சாம்பார் எனச் சொல்ல வேண்டும். அது என்ன கருவாட்டுச் சாம்பார்?' என்று அடிப்படை கோட்பாட்டையே கேள்வி கேட்டிருந்தார். ஆனாலும் தவெக கட்சியின் கொள்கைகளில் பல முரண்கள் இருக்கவே செய்கின்றன. அதைப் பலரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

இப்போது தேர்தல் காலத்தை ஒட்டி தவெக பொருளாளர் வெங்கட்ராமன், "பிராமண எதிர்ப்பு என்பது காலாவதியான சித்தாந்தம். பிராமண ஆதிக்கம் என்பது ஒவ்வொரு மாநிலத்திலும் வேறு வேறு வகுப்பினர் ஆதிக்கமாகவே உள்ளது. எனவே அந்தக் கொள்கை இன்றைக்குத் தேவையற்றது" என்று தெரிவித்துள்ளார்.

இது கட்சியின் குரலாக அவர் முன்வைத்ததால் மேலும் குழப்பம் உண்டாகியுள்ளது. பெரியார் இடமிருந்து அறிஞர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கியபோது அவர் பிராமண எதிர்ப்பையும் கடவுள் எதிர்ப்பையும் எடுத்துக்கொள்ளவில்லை. கடவுள் மறுப்பைக் கைவிட்டு ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று தனது திமுகவின் கோட்பாடாக முன்வைத்தார். அப்போது அதைக் கடுமையாக பெரியார் எதிர்த்தார்.

"அது என்ன ஒருவனே தேவன்? நீங்கள் ஒருவன் தான் தேவன் என்று சொல்கிறீர்கள். வேறு சிலர் பலரைக் கடவுள் என்கிறார்கள். இன்னும் சிலர் ஆயிரக் கணக்கான தெய்வங்களைச் சொல்கிறார்கள். நீங்கள் சொல்வது அவர்கள் சொல்வது ஒரே மாதிரிதானே உள்ளது" எனக் கேள்வி கேட்டார்.
அதேபோல் பெரியாரின் மைய அரசியலே பிராமண எதிர்ப்புதான். அதையே அறிஞர் அண்ணா தன் கட்சியில் பின்பற்றவில்லை.

அவர் ஆட்சிக்கு வந்து வெளிநாடு சென்று திரும்பிய போது, பிராமண எதிர்ப்பு பற்றிய கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், "நாங்கள் பிராமணர்களுக்கு எதிரி இல்லை. பிராமணியத்திற்குத்தான் எதிரி' என்றார். ராஜாஜி இந்த வேறுபாட்டை உணர்ந்தே திமுகவை ஆதரித்தவர், "பிராமணர்கள் பூணூலைத் தூக்கிப் பிடித்தபடி திமுகவுக்கு வாக்களிக்கலாம்" என்றார். ஆச்சாரியாரை மிகக் கடுமையாக எதிர்த்த கட்சி திமுக.

அறிஞர் அண்ணா 1952ல் ராஜாஜியின் புதிய கல்விக் கொள்கையைக் குலக் கல்வித் திட்டம் என்றும் மறைமுகமாக வர்ணாஸ்ரமத்தை நுழைக்கும் முயற்சி என்று எதிர்த்தார். திமுக அதற்கான போராட்டங்களை முன்னெடுத்தது. பெரியார் கடவுள் சிலையான பிள்ளையாரை உடைக்கும் போராட்டத்தை நடத்தினார். அதேபோல் புராணங்களில் உள்ள கடவுள் பாத்திரங்களை எதிர்த்து ஊர்வலம் நடத்தினார். அப்போது கடவுள் மறுப்பு பற்றி அண்ணாவிடம் கேட்கப்பட்டது.

அதற்கு அவர், "நான் பிள்ளையாரையும் உடைக்கமாட்டேன். பிள்ளையாருக்குத் தேங்காயும் உடைக்கமாட்டேன்" என்று சொன்னது இன்றுவரை அவரது கட்சிக்காரர்கள் மத்தியில் மிகப்பெரிய வாசகமாக முன்வைக்கப்படுகிறது. இட ஒதுக்கீடே சாதிய படிநிலையில்தான் வழங்கப்பட்டுள்ளது. பிராமண ஆதிக்கம் என்பது நீதித்துறை உள்ளிட்ட மிகப்பெரிய பதவிகளில் இன்னும் ஆதிக்கம் செலுத்துவதாகவே உள்ளது எனத் தொடர்ந்து விசிகவில் உள்ள ஆளுர் ஷாநவாஸ் பேசிவருகிறார்.

அவர் சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் கூட சில புள்ளிவிவரங்களை அளித்தார். அதை மறுக்க முடியுமா என வாதிட்டார். தவெக வெங்கட்ராமன் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். எனவே அங்கு அச்சமூகத்தினரின் வாக்குகளைப் பெற வேண்டி புதிய ஒரு கருத்தை அவர் முன்வைக்கிறாரா? என்ற சந்தேகம் எழுகிறது.

அவர் அளித்துள்ள பேட்டியில் இனி சாதி அடிப்படையிலான தேர்தல் களம் இருக்காது என்றும் அதன் வரைபடம் மாறிவிட்டது என்றும் பேசியுள்ளார். "என் தொகுதியில் 1.94 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அதில் 40 ஆயிரம் பேர் மட்டுமே பிராமணர்கள். மாநிலம் முழுவதும் இதே நிலைதான் உள்ளது" ஆகவே ஆதிக்கம் இல்லை என்கிறார் இவர்.

பிராமண எதிர்ப்பு என்பதிலிருந்து திமுக அண்ணா காலத்தில் மிதமான போக்கைக் கையாண்டது. அதில் விதிவிலக்காக மு.கருணாநிதி இருந்தார். அவர் பிராமணர்களையும் இந்து கடவுள்களையும் நேரடியாக விமர்சித்தார். 'ராமன் எந்தக் கல்லூரியில் பொறியியல் படித்தார்" என்று சேது சமுத்திர திட்டச் சர்ச்சையின் போது அவர் எழுப்பிய கேள்வியால் நாட்டில் பல மதவாதிகள் அவரது தலைக்கு விலை பேசினர்.

எம்ஜிஆர் ஆரம்பத்திலிருந்தே பொருளாதார ரீதியான ஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் பேசிவந்தார். அவரது ஆட்சிக்காலத்தில் சட்ட மாற்றம் செய்ய அவர் எடுத்த முயற்சிகள் சில பக்க விளைவுகளை உண்டாகின. திமுகவில் இருவரை ஸ்டாலின் நேரடியாகப் பிராமண எதிர்ப்பைப் பேசியதில்லை. அவர் கடவுள் விவகாரத்திலும் கூட, ஆட்சிக் காலத்தில் அதிக குடமுழுக்குகள் நடத்தினார்.

திராவிட இயக்கத்தின் தொடர்ச்சியாகக் கருதப்படும் அதிமுகவின் தலைமைப் பதவிக்கே ஒரு பிராமண சமுகத்தைச் சேர்ந்த ஜெயலலிதா வந்தார். அவரை தமிழ்நாடு ஏற்றுக்கொண்டது வரலாறு. அவர் சட்டமன்றத்திலேயே 'நான் ஒரு பாப்பாத்தி' என்று கர்ஜித்தும் காட்டினார். ஸ்ரீரங்கத்தில் போட்டியிட்ட போது அவர், தனது பூர்வீகமும் மூதாதையர் வாழ்ந்த பூமியும் ஸ்ரீரங்கம்தான் என்றார். அதையும் மக்கள் ஏற்கவே செய்தனர்.

இங்கே பிராமண ஆதிக்கம் என்பதற்கும் பிராமணர்கள் என்பதற்கு வேறுவேறு பொருள் சொல்லப்படுகிறது. அதைவைத்தே சீமான், "பிராமணக் கடப்பாரையைக் கொண்டே இவர்களை ஒழிக்கப் போகிறேன்" என்று பேசி இருந்தார். இந்த விசயத்தில் தவெகவும் நாதகவும் ஒரே குரலில் ஒலிப்பதாகவே தோன்றுகிறது.

-கடற்கரய்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+