"ஹாட்ரிக்".. பாஜக வீசிய பந்தை "சிக்ஸர்" அடித்த எடப்பாடி.. "ரன் அவுட்" ஆன ஓபிஎஸ்.. ஒரே நாளில் அதிரடி
எடப்பாடி பழனிசாமியை சமாதானப்படுத்த பாஜக மேலிடம் தொடர் முயற்சியை எடுக்கிறதாம்
சென்னை: "தமிழ்நாட்டில் மிகப்பெரிய அரசியல் எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய ஒரு கட்சி, இன்று அடமான பொருளாக மாறி இருக்கிறது. அதை பந்தாடிக் கொண்டிருக்கும் நிலை இருக்கிறது என்று நேற்றைய தினம், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி மறைமுகமாக விமர்சித்திருந்தார்.. பாஜக கட்டுப்பாட்டுக்குள் அதிமுக இருந்து வருகிறது என்ற இப்படியான எதிர்க்கட்சிகளின் தொடர் விமர்சனத்தை, நேற்று ஒரே நாளில் நொறுக்கி தள்ளியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.
அதிமுகவை ஒன்றிணைக்க தமிழக பாஜக முயற்சிப்பதாக கூறப்படுகிறது.. ஆனால், இத்தனை மாதங்களும் சூழ்நிலைகளை சமாளித்து வந்த எடப்பாடி பழனிசாமி தரப்பு, தற்போது தங்கள் நிலைப்பாட்டை வலிய பதிய செய்ய துவங்கிவிட்டது.
இத்தனை மாதமும் ஒன்றுசேர்க்க முயலாமல், இடைத்தேர்தல் நேரத்தில், பாஜக எதற்காக உள்ளே என்ட்ரி தருகிறது என்றும் அதிமுக தரப்பில் சோஷியல் மீடியாவில் கேள்விகள் எழுந்து வருகின்றன.

வார் ரூம்
"நாங்கள் நாங்கள் பலமாகத்தான் இருக்கிறோம். ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம்... அதனால் பாஜகவினர் எங்களைப்பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டாம்... முடிந்தால், காயத்ரி ரகுராம், திருச்சி சூர்யா போன்றவர்களை மறுபடியும் பாஜகவில் சேர்க்கமுடியுமா என்று பாருங்கள்.. கமலாலயத்தில் இருக்கும் அமைச்சர் எல்.முருகனின் வார் ரூமுடன் இருக்கும் மனக்கசப்புகளை மறக்க பாருங்கள். இதையெல்லாம் சரிசெய்துவிட்டு எங்களுக்கு மத்தியஸ்தம் பண்ண வரலாம் என்று பொருமலும் எழுந்து வருகிறதாம்..!!

பொருமல்கள்
ஆனால், இந்த இடைத்தேர்தல் விஷயத்தை பொறுத்தவரை, எடப்பாடியின் காய்நகர்த்தல்கள் மிக சிறப்பாக கவனிக்கப்பட்டு வருகின்றன.. ஓபிஎஸ்ஸை தன் பக்கம் வைத்துக் கொண்டு, இந்த இடைத்தேர்தல் நேரத்தில் கரெக்ட்டாக உள்ளே நுழைந்தது பாஜக... ஆனால், மேலிட பிளான்களை புரிந்து கொண்ட எடப்பாடி பழனிசாமி, வியூகங்களை அடித்து ஆட ஆரம்பித்தார்.. கொஞ்சம் விட்டுக் கொடுத்தாலும் பாஜகவின் கட்டுப்பாட்டுக்குள் போய்விடக்கூட கூடுமோ என்பதையும் அவர் உணராமல் இல்லை.. இப்படி ஒரு ரிஸ்க் எடுக்கும்போது, கட்சியை கட்டிக் காப்பதும் முடியாது என்று நினைத்து துணிந்தே களமிறங்கினார்.. அதேசமயம், டெல்லி தலைவர்களை லாவமாக எதிர்கொண்டார்.

கையை பிசைந்தது
குறிப்பாக, தமிழகத்துக்கு பிரதமர் மோடி வந்தபோது எதிர்க்கட்சி தலைவர் என்ற ரீதியில் வரவேற்ற அதே எடப்பாடி பழனிசாமி, அமித்ஷா வந்தபோது வரவேற்க செல்லவில்லை... "பிரதமர் என்ற அடிப்படையில் மோடியை வரவேற்க சென்றேன், கட்சி தலைவர்களை கட்டாயம் வரவேற்க வேண்டியதில்லை" என்று இதற்கு விளக்கத்தையும் தந்திருந்ததை பார்த்து, பாஜக மேலிடம் சற்று அதிர்ந்துதான் போனது.. எடப்பாடியை எப்படி வழிக்கு கொண்டு வருவது என்று கையை பிசைந்தபோதுதான், இடைத்தேர்தலில் எடப்பாடியும், ஓபிஎஸ்ஸும் முட்டி மோதி வரும் சான்ஸை சரியாக பயன்படுத்தி அதிமுகவுக்குள் நுழைந்தது.

சான்ஸே இல்லை
தான் சொல்வதை கேட்க ஓபிஎஸ் தயாராக இருந்ததால், அடுத்து எடப்பாடியை எதிர் கொள்வோம் என்ற ரீதியில் ஒட்டுமொத்த கவனத்தையும் எடப்பாடியை வழிக்கு கொண்டு வருவதில் திருப்பியது பாஜக.. அதாவது எப்படியும் இலை கிடைக்க போவதில்லை என்ற நிலை வந்ததும், இந்த சான்ஸை விட்டுவிடக்கூடாது என்று பாஜக கணக்கு போட்டு, எடப்பாடி பழனிசாமியை நேற்று காலை நேரில் வந்து சந்தித்தது.. இன்னொரு கட்சி விவகாரத்தில் நாங்கள் தலையிட மாட்டோம், தலையிட வேண்டிய அவசியமில்லை என்று இத்தனை மாத காலமும் தொடர்ந்து சொல்லி கொண்டிருந்த பாஜக, எடப்பாடி + ஓபிஎஸின் இணைவுக்கான முயற்சியை தாங்கள் முடிவெடுத்துள்ளதாக பகிரங்கமாகவே சொல்ல ஆரம்பித்தது.

செங்கோட்டையன்
ஆனால், முதல் நபராக முந்திக் கொண்டு வந்து இதற்கு பதிலடி தந்தார் மூத்த அமைச்சர் செங்கோட்டையன் "நாங்கள் பலமாகத்தான்" இருக்கிறோம் என்றார்.. இதற்கு அடுத்தபடியாக பின்னாடியே வந்தார் பொன்னையன்.. "உள்ளாட்சி தேர்தலிலேயே பாஜகவுடனான கூட்டணி முடிந்துவிட்டது.. பாஜக வட இந்தியாவில் கூட்டணி கட்சிகளை எவ்வாறு வீழ்த்தி ஆட்சிக்கு வந்தனர் என அனைவருக்கும் தெரியும். மக்களுக்கு நன்றாக தெரியும். அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்கிறோம் என்று பொன்னையன் சொன்னதை கேட்டு, அதிர்ந்து போனது பாஜக கூடாரம்...

தீயசக்தி
இதற்கெல்லாம் உச்சப்பச்சமாக, அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு கோவை மண்டல செயலாளருமான சிங்கை ஜி.ராமச்சந்திரன் சிடி ரவியை நேரடியாகவே சாடி ட்வீட் பதிவிட்டிருந்தார்.. "எங்கள் கட்சியில் என்ன செய்யவேண்டும் என்று சொல்ல சி.டி.ரவி யார்? ஒரு தேசியக் கட்சியிலிருந்து வருவதால் நீங்கள் எதையும் ஆணையிட முடியுமென்று அர்த்தமா? கர்நாடக பா.ஜ.க-வை எப்படி நடத்த வேண்டும் என்று நாங்கள் சொன்னால் சி.டி.ரவி ஏற்றுக்கொள்வாரா? தி.மு.க-வை தனியாக எதிர்த்து எந்த தேர்தலிலும் வெற்றிபெறாத நீங்கள், 30 வருடங்களுக்கு மேல் ஆட்சி செய்த எங்களுக்கு அறிவுரை சொல்வதா? தீயசக்தி என்றால் என்ன, 1972-ல் எம்.ஜி.ஆர் ஏன் காட்சியைத் தொடங்கினார் என்று நீங்கள் எங்களுக்குச் சொல்கிறீர்களா... உங்களின் எல்லை எதுவென்று தெரிந்துகொள்ளுங்கள்" என்று கூறியது டெல்லி வரை எதிரொலித்துவிட்டது.

சக்ஸஸ் எடப்பாடி
கொஞ்சம் விட்டுக் கொடுத்தாலும் பாஜகவின் கட்டுப்பாட்டுக்குள் செல்ல வேண்டியது வரலாம் என்ற எடப்பாடியின் முன்ஜாக்கிரதை உணர்வுதான், தற்போது, ஓபிஎஸ்ஸை வைத்து, பாஜகவை இந்த அளவுக்கு எதிர்க்க துணிந்த காரணம் என்கிறார்கள்.. அந்தவகையில், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக பாஜகவின் கட்டுப்பாட்டில் போய்விட்டது என்ற விமர்சனங்களை இடைத்தேர்தல் வியூகம் மூலம் நேற்று ஒரே நாளில், 3 தலைவர்களை வைத்து, தவிடுபொடியாக்கியுள்ளார் எடப்பாடி கே.பழனிசாமி...!!












Click it and Unblock the Notifications