விநாயகர் சதுர்த்திக்கு சிலை வைக்க போறீங்களா.. உயர்நீதிமன்றம் கொடுத்த முக்கிய உத்தரவு!
சென்னை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பிளாஸ்ட்ர் ஆஃப் பாரிஸ் சிலைகளை வைக்க காவல்துறை அனுமதிக்க கூடாது என்று தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், மக்கக்கூடிய வகையிலான சிலைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்டம், ஆர்கே பேட்டை கிராமத்தில் விநாயகர் சிலை வைக்க அனுமதி வழங்கும்படி, காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி, ஆர்கே பேட்டை சேர்ந்த சுரேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன்பு விசாரணை வந்த போது, அரசு குற்றவியல் வழக்கறிஞர் யு. உதயகுமார் ஆஜராகி, மூன்று அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஒரே இடத்தில் அனுமதி கேட்பதால் அங்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும், வேறு இடத்தில் சிலை வைக்க அனுமதி கேட்டால் பரிசீலிக்கப்படும் என தெரிவித்தார்.
அனுமதி கேட்கும் போது பிளாஸ்ட்ர் ஆஃப் பாரிஸ் சிலைகளுக்கு அனுமதி கேட்க முடியாது என்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் அமைக்கப்பட உள்ள சிலைகளுக்கு மட்டுமே அனுமதிக்க முடியும் எனவும் சுட்டிக்காட்டினார்.
ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு, பிளாஸ்ட்ர் ஆஃப் பாரிஸ் சிலைகளை வைக்க அனுமதிக்க கூடாது என்று உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் சிலைகளை வைக்க அனுமதிக்க கூடாது என்றும், சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் மக்கக்கூடிய வகையிலான சிலைகளுக்கு மட்டும் அனுமதி வழங்க வேண்டும் எனவும் காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications