புழல் சிறையில் நடந்தது என்ன? 3 ஆப்பிரிக்கர்களை மருத்துவமனையில் அனுமதிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: புழல் சிறையில் வார்டன்களால் தாக்கப்பட்டதால் காயமடைந்ததாக கூறப்படும் நைஜீரியா நாட்டை சேர்ந்த மூன்று கைதிகளை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
ஆப்பிரிக்காவின் நைஜீரியா நாட்டை சேர்ந்த போதை மருந்து கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் அகஸ்ட்டீன், எட்வின் மற்றும் இம்மானுவேல். இந்த மூன்று பேரும் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில், இவர்களது தரப்பு வழக்கறிஞர் சங்கரசுப்பு கடந்த 30 ஆம் தேதி புழல் சிறையில் அகஸ்ட்டீனை சந்தித்து இருக்கிறார். அப்போது, புழல் சிறை வார்டன்கள் தங்கள் மூன்று பேரையும் தாக்கியதாகவும், தங்களுக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படுவதாகவும் அகஸ்ட்டீன் வழக்கறிஞர் சங்கரசுப்புவிடம் கூறி உள்ளார்.
இதனை அடுத்து, வழக்கறிஞர் சங்கரசுப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு ஒன்றை மனு தாக்கல் செய்தார். அந்த மனு நீதிபதிகள் எம்.சுந்தர், ஆர்.சக்திவேல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில், தமிழ்நாடு அரசு தரப்பில் வழக்கறிஞர் ராஜ் திலக் ஆஜராகி வாதிட்டார்.
அப்போது பேசிய அவர் கடந்த 21 ஆம் தேதி சிறையில் அதிகாரிகள் சோதனை நடத்திய போது அகஸ்ட்டீன் உள்ளிட்ட 3 பேரிடம் இருந்தும் செல்ஃபோன் உள்ளிட்ட சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக கூறினார். இதனை அடுத்து, மூவரின் உடல் நிலை குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் இரண்டு வழக்கறிஞர்களை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமித்து உத்தரவு பிறப்பித்தனர்.
அதே போல், கைதிகளால் தாக்கப்பட்டதாக கூறப்படும் துணை வார்டன் சாந்தகுமார் உடல் நிலை என்ன என்பது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டனர். அந்த அறிக்கையின் அடிப்படையில் 3 பேருக்கும் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், அதை விரைந்து தாக்கல் செய்ய உத்தரவிட்டு இந்த வழக்கின் விசாரணையை திங்கள் கிழமை அன்று ஒத்தி வைத்தனர்.












Click it and Unblock the Notifications