ஏன் அவசரப்படுறீங்க? ஓபிஎஸ் வழக்கறிஞரிடம் குறுக்கிட்ட நீதிபதிகள்! எதுவுமே செய்ய முடியவில்லை என பதில்
சென்னை: அதிமுக கட்சி பெயர், சின்னம், கொடிகளை பயன்படுத்த விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க அவசரம் காட்டுவது ஏன் என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
அதிமுகவில் ஒற்றை தலைமையை கொண்டு வந்த தீர்மானத்திற்கும், ஓ.பன்னீர்செல்வம் உள்பட 4 பேரை நீக்கிய தீர்மானத்துக்கும் சென்னை உயர்நீதிமன்றம் தடை விதிக்க மறுப்பு தெரிவித்த நிலையில் அதிமுக கட்சியின் பெயர், சின்னம், கொடி, லெட்டர் பேட் ஆகியவற்றை பன்னீர்செல்வம் தரப்பினர் தொடர்ந்து பயன்படுத்த தடை விதிக்கக் கோரி, அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அதிமுக பொதுச் செயலாளராக தேர்தல் ஆணையமும், உயர் நீதிமன்றமும் தன்னை அங்கீகரித்து உள்ள நிலையில், பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளர் என தொடர்ந்து கூறிவருவதாகவும், இது தொண்டர்களிடையே குழப்பத்தை விளைவிப்பதாகவும் மனுவில் குறிப்பிட்டு உள்ளார். இந்த மனு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, பன்னீர் செல்வம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்கப்பட்டது.
ஆனால், "நான்கைந்து மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், கட்சியிலிருந்து நீக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகளாக அதே பதவியை பயன்படுத்துகிறார். எங்களை கட்சியிலிருந்து நீக்கி அறிவிக்கிறார். பொதுமக்கள் மற்றும் கட்சியில் குழப்பம் ஏற்படுத்தி கொண்டிருக்கிறார்." எனவும் இ.பி.எஸ். தரப்பால் வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பொது செயலாளர் தேர்தல் செல்லும் என்கிற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவிற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு ஏதும் பிறப்பிக்கவில்லை என்பதால் ஒ.பன்னீர்செல்வம் அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். அந்த மனுவில், கட்சியில் இருந்து தன்னை நீக்கியத்ற்கு எதிரான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், கொடி, சின்னம் பயன்படுத்த தடை விதிக்க முடியாது எனக் கூறியுள்ளார். கட்சியில் இருந்து நீக்கியதை எதிர்த்த வழக்குகளில் இடைக்கால தடை விதிக்க முடியாது என்றுதான் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது எனவும், அந்த உத்தரவை எதிர்த்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வர இருப்பதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சின்னம், கொடியை பயன்படுத்த தடை விதித்து இருக்க கூடாது எனவும், இந்த உத்தரவு தனக்கு பெருத்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த மேல் முறையீட்டு வழக்கு, நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தனி நீதிபதி உத்தரவில் சான்றளிக்கப்பட்ட நகல் இல்லாமல் மனுவை பட்டியலிட நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ஓ.பி.எஸ். சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், மனுவை இன்றே விசாரிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், விரைவாக விசாரிப்பதற்கு என்ன அவசரம் என கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், இடைக்கால தடை விதிக்கப்பட்டதால் செயல்பட முடியாத நிலை உள்ளதாக கூறினார். இதனையடுத்து, நாளை முதல் வழக்காக விசாரிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications