அதிமுக மாஜி வளர்மதிக்கு ‘குடைச்சல்’.. தோண்டப்படும் சொத்துக்குவிப்பு வழக்கு.. சிக்கலான சூ-மோட்டோ!
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அவர் கடந்த 2012ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்ட நிலையில், அந்த வழக்கை தாமாக முன்வந்து மீண்டும் விசாரணைக்கு எடுத்துள்ளார் சென்னை ஐகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.
அதிமுக முன்னணி நிர்வாகியான பா.வளர்மதி, அதிமுக ஆட்சிகாலத்தில் இரு முறை அமைச்சராகப் பதவி வகித்துள்ளார். முதன்முதலில் 1984ஆம் ஆண்டு மயிலாப்பூர் தொகுதியில் நின்று எம்.எல்.ஏவான வளர்மதி, 2001, 2011 ஆகிய தேர்தல்களில் வென்று பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலன் மற்றும் சமூக நலத்துறை ஆகிய துறைகளின் அமைச்சராகச் செயல்பட்டுள்ளார்.

2001 - 2006 வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்த பா.வளர்மதி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக சொத்துக்குவிப்பு வழக்கு தொடரப்பட்டது. வளர்மதி, தனது கணவர் எம்.வி.பாலசுப்ரமணியன் மற்றும் அவரது மகன்கள் பி.முத்தமிழன், மூவேந்தன் ஆகியோர் பெயரில் சொத்துக்கள் வாங்கியதாக வழக்கு தொடரப்பட்டது.
2001 மற்றும் 2006 காலகட்டத்தில், அமைச்சராகப் பதவி வகித்தபோது, 1.70 கோடி ரூபாய் அளவுக்கு வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. பின்னர், 2011ல் அதிமுக ஆட்சி அமைந்தபிறகு, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையின் காரணமாக தொடரப்பட்ட இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என மனு தாக்கல் செய்தார் வளர்மதி.
இதனை ஏற்று, இந்த வழக்கிலிருந்து வளர்மதி உள்ளிட்டோரை விடுவித்து ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம், 2012ஆம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் வகையில், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்திருக்கிறார், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ். இந்த வழக்கு நாளை (செப்டம்பர் 8) விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டுள்ளது.
ஏற்கெனவே அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மீது தாமாக முன் வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்த அனைத்து வழக்குகளும் ஆய்வு செய்யப்படும் எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அமைச்சர் பெரியசாமி, முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆகியோர் மீதான வழக்குகளை மறு விசாரணைக்கு எடுத்துள்ளது பரபரப்பை எகிற வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications