'சென்னையில் 720'.. தமிழகம் முழுக்க 2800 பார்கள்.. போட்டி போட்ட அரசியல்வாதிகளுக்கு திடீர் ட்விஸ்ட்
சென்னை: தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்பட பல்வேறு மாவட்டங்களில் ஏலம் விடப்படாத 2800 மதுக்கடைகளை ஏலம் எடுக்க அரசியல்வாதிகள், தொழில் அதிபர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. உயர்நீதிமன்ற உத்தரவு காரணமாக அக்டோபர் 31 தேதி வரை டெண்டர் விடுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் டாஸ்மாக் பார் டெண்டர் எடுப்பது தான் மிகப்பெரிய அரசியல்.. உள்ளூர் வார்டு கவுன்சிலர் தொடங்கி, கட்சிகளில் உள்ள வட்ட செயலாளர்கள் முதல் ஒன்றிய செயலாளர்கள் வரை பலரும் முட்டி மோதுவது இந்த டெண்டருக்குத்தான்.. இதேபோல் பெரிய தலைகள் அதாவது ஊரில் செல்வாக்கான தொழில் அதிபர்கள் பலரும் டாஸ்மாக் பார் டெண்டர் எடுக்க கடுமையாக முட்டி மோதுவார்கள்.

ஏனெனில் இந்த பார் டெண்டர் தங்க முத்து போடும் வாத்து என்பதால் போட்டி கடுமையாக இருக்கும். பொதுவாக தமிழ்நாடு முழுவதும் மொத்தமாகவே டாஸ்மாக் பார் டெண்டர்கள் விடப்படும். சில சிக்கல்கள் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பார்கள் நடத்த 2 ஆண்டுகளுக்கு மேலாக ஏலம் விடப்படவில்லை. இரண்டு ஆண்டுகளாக பார் இல்லாமல் தான் டாஸ்மாக்குகள் சென்னையில் செயல்பட்டு வருகின்றன.
சென்னை என்றால் வெறும் சென்னை மட்டுமல்ல.. சென்னை மாநகரம் முழுவதும் அதாவது சென்னை, செங்கல்பட்டு மாவட்டத்தின் சென்னையை ஒட்டிய பகுதிகள் , காஞ்சிபுரம் மாவட்டத்தின் சென்னையை ஒட்டிய பகுதிகள், திருவள்ளுர் மாவட்டத்தின் சென்னையை ஒட்டிய பகுதிகளில் உள்ள 720 டாஸ்மாக் கடைகளில் எங்குமே 'சட்டப்பூர்வமாக' பார் கடந்த இரண்டு வருடங்களாக இல்லை. ஏனெனில் உயர்நீதிமன்றத்தில் தடை உள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள 2,800 கடைகளுக்கான பார்களை டெண்டர் விட கடந்த அக்டோபர் 7-ந்தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பு எப்படி என்றால், இந்த மாவட்டங்கள் மட்டுமின்றி இதுவரை தமிழகத்தில் ஏலம் விடாமல் உள்ள டாஸ்மாக் கடைகளும் ஏலம் விடப்படும் என்று அரசு அறிவித்தது. இதன்படியே இ.டெண்டர் விடப்பட்டது. இதற்கு இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் 2 மணி வரை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் தொழில் அதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் பலர் பார்களை ஏலம் எடுப்பதற்கு விண்ணப்பித்தனர். சென்னையில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பார்களை எடுக்க கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் மதுபான பார்கள் டெண்டர் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து டெண்டரை இன்று இறுதி செய்து அறிவிக்கக்கூடாது என்று தொடரப்பட்ட வழக்கில் 31-ந் தேதி வரை பார் டெண்டர் குறித்த அறிவிப்பை வெளியிடக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன் காரணமாக அக்டோபர் 27ம் தேதியான இன்று டாஸ்மாக் பார் டெண்டர் இறுதி செய்யப்படவில்லை. டாஸ்மாக் நிர்வாகம் 31ம் தேதி உயர்நீதிமன்றத்தில் அளிக்கும் பதிலுக்கு பின்னரே டெண்டர் இறுதி செய்யும் பணி நடைபெறும் என்று கூறப்படுகிறது.இதனிடையே அரசியல் தலையீடு இல்லாமல் டாஸ்மாக் பார் டெண்டர் நடைபெற வேண்டும் என்று பார் உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications