ரெட் அலர்ட்.. களத்தில் குதித்தார் ஸ்டாலின்.. 6 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படை விரைந்தது
சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட் கொடுத்துள்ளார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மழை பாதிப்புகளை கட்டுப்படுத்த போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறிய ஸ்டாலின், கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து 6 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் விரைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய இலங்கை கடலோரப் பகுதிகளில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, நேற்று புயலாக வலுவடைந்தது. இந்த டிட்வா புயல் தற்போது சென்னைக்கு 530 கிமீ தூரத்தில் நிலை கொண்டுள்ளது. இது வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது.

இதன் காரணமாக இன்று முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு 3 நாட்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, அரியலூர், மயிலாடுதுறை, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, பெரம்பலூர், கடலூர், தஞ்சாவூர், நாகை, புதுக்கோட்டை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மழை அவசர கால கட்டுப்பாட்டு அறையில் இருந்து 14 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து கேட்டறிந்தார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்து முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், தெற்கு மற்றும் டெல்டா பகுதிகள் கனமழை பெய்யும் என்று ரெட் அலர்ட் கொடுத்துள்ளார்கள்.
இதனால் அந்த மாவட்ட ஆட்சியர்களுடன் வீடியோ மூலமாக தொடர்பு கொண்டு ஆலோசித்துள்ளோம். ஏற்கனவே கனமழை முன்னெச்சரிக்கை தொடர்பாக நேற்று உயர் அதிகாரிகளை அழைத்து பல்வேறு அறிவுறுத்தல்கள் கொடுத்துள்ளோம். அதேபோல் ஒவ்வொரு மாவட்டத்திற்கு கண்காணிப்பு அதிகாரியையும் அனுப்பி வைத்துள்ளோம்.
ஏற்கனவே எந்தெந்த இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளதோ, அங்கெல்லாம் உஷாராக இருக்க அறிவுறுத்தியுள்ளோம். மின் கம்பிகள் எங்கு அறுந்துள்ளதோ, அதனை கண்காணிக்க கூறியுள்ளோம். தேசிய பேரிடர் மீட்பு படைகள் 6 மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சென்னையிலும் அதிக மழை பெய்யும் என்று சொல்லி இருக்கிறார்கள்.
அனைத்து இடங்களிலும் முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேவையான உணவு கொடுப்பதற்கு பணிகள் செய்யப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை அப்புறப்படுத்தவும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதேபோல் எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்திற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications