வங்கக்கடலில் காற்றழுத்தம் தீவிரம் - அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை - 5 நாட்களுக்கு கனமழை
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக இன்று 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னை: வட அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் எனவும் வரும் 17,18ஆம் தேதிகளில் சென்னையில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Recommended Video
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. சென்னை, திருவள்ளூர், கன்னியாகுமரி, செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களை மழை வெள்ளம் சூறையாடியது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த தொடர்மழையால் எங்கும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

இந்த நிலையில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையத் தென்மண்டலத் தலைவர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாலச்சந்திரன், இன்றைய தினம் வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக இன்று கன்னியாகுமரி , நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். ஈரோடு, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு, கோயமுத்தூர் ,சேலம், தர்மபுரி, கடலூர், அரியலூர், பெரம்பலூர்,மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றார்.
சென்னையில் வரும் 17,18ஆம் தேதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அந்தமானில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக 18 ஆம் தேதி மாற வாய்ப்புள்ளது. நாளைய தினம் அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு உள்ளது.
இன்று முதல் 5 நாட்களுக்கு அந்தமான் கடலோரம், மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையத்தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications