மாண்டஸ் கரையை கடந்தும் நீடிக்கும் கனமழை..எந்தெந்த மாவட்ட மக்கள் கவனம் - சென்னைவாசிகளும் உஷார்
சென்னை: தமிழகத்தில் இன்றைய தினம் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வடகிழக்குப் பருவமழை தமிழகத்தில் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. மாண்டஸ் புயல் கடந்த வெள்ளிக்கிழமை கரையை கடந்த பின்னரும் மழை நீடிக்கிறது. சென்னையில் அதிகாலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. வட உள் தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் அதிகாலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. காலையில் விட்டு, விட்டு சாரல் மழை பெய்து வந்த நிலையில், காலை 10 மணி முதல் தொடர்மழை பெய்து வருகிறது. குறிப்பாக மயிலாப்பூர், பட்டினப்பாக்கம், திருவல்லிக்கேணி, அண்ணாசாலை உள்ளிட்ட சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டம் சின்னகல்லார் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் தலா 9 செ.மீ மழையும், பட்டுக்கோட்டையில் 8 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது. சென்னையில் சராசரியாக நேற்று 13 செ.மீ மழை பதிவாகி உள்ளது. இந்நிலையில் இன்று தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

26 மாவட்டங்களில் கனமழை
வடக்கு கேரளா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக,இன்றைய தினம் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

4 நாட்களுக்கு மழை நீடிக்கும்
நாளை முதல் 16ஆம் தேதி வரைக்கும் தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் இடி மின்னல்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை
12.12.2022 முதல் 13.12.2022 வரை லட்சதீவு பகுதிகள், கேரள - கர்நாடக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 14ஆம் தேதியன்று லட்சதீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 15 மற்றும் 16ஆம் தேதிகளில்
தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.












Click it and Unblock the Notifications