நிற்காத ரெட் ஜீப்.. மழைக்கு இடையிலும் 3வது நாளாக களத்திற்கு சென்ற முதல்வர் ஸ்டாலின்.. நிவாரண பணி
சென்னை: தொடர் மழைக்கு இடையிலும் முதல்வர் ஸ்டாலின் சென்னையில் தொடர்ந்து களத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தீவிரமாக மழை பெய்து வருகிறது. இதுபோக தென் கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலையும் உருவாகி உள்ளது.
இந்த தாழ்வு நிலை அடுத்த 36 மணி நேரங்களில் தாழ்வு மண்டலமாக உருவெடுக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனால் தமிழ்நாட்டிற்கு நாளையும், நாளை மறுநாளும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மழை
இதனால் தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. டெல்டா மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் அதி தீவிர கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. சென்னை மற்றும் வட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.

சென்னை
சென்னையில் கடந்த சனிக்கிழமை பெய்த மழையில் இருந்தே சாலைகளில் வெள்ளம் தேங்கி உள்ளது. கடந்த சனிக்கிழமை சென்னையில் 207 மிமீ மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் ஏற்பட்டது. அதன்பின்பும் மழை விட்டு விட்டு பெய்து வருவதால் வெள்ளம் பல இடங்களில் இன்னும் வடியவில்லை. இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.

தாழ்வான பகுதி
சென்னையில் நந்தம்பாக்கம், சிந்தாதிரிப்பேட்டை, எழும்பூர், கோயம்பேடு, வடபழனி பகுதிகளில் லேசான மழையும், கோடம்பாக்கம், தி.நகர், நசரத்பேட்டை,மாங்காடு, மீனம்பாக்கம், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், சோழவரம், தாம்பரம், குரோம்பேட்டை, வேளச்சேரி, எழும்பூர், அண்ணா சாலை, வடபழனி, சைதாப்பேட்டை, தி நகர், கோயம்பேடு, அடையாறு, அண்ணா நகர் ஆகிய பகுதிகளில் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டு நீர் தேங்கி உள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பலர் முகாம்களுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

முதல்வர் ஆய்வு
இந்த நிலையில் தொடர்ந்து மூன்றாவது நாளாக முதல்வர் ஸ்டாலின் சென்னையில் ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறார். களத்தில் தொடர்ந்து நின்று அமைச்சர்கள், அதிகாரிகளுடன் பணியாற்றி வருகிறது. ஞாயிற்றுக்கிழமை எழும்பூர், பாடி உள்ளிட்ட வடசென்னையில் 11 இடங்களில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். நேற்று முதல்வர் ஸ்டாலின் ஆய்வு பணிகளை செய்தார்.

நேற்று ஆய்வு
நேற்று துறைமுகம், ஆர்.கே நகர், ராயபுரம், பெரம்பூர் ஆகிய தொகுதிகளில் 12க்கும் மேற்பட்ட இடங்களில் ஆய்வு பணிகளை மேற்கொண்டு மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். இதையடுத்து இன்றும் சென்னையில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களை முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்து, உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கினார்

இன்று
கொளத்தூர், வில்லிவாக்கம், மதுரவாயல், விருகம்பாக்கம் ஆகிய தொகுதிகளில் நேரில் ஆய்வு மேற்கொண்டு, உணவு மற்றும் நிவாரண உதவிகள் வழங்கினார். .ரமணா நகர், உணவு வழங்குதல், சுப்பிரமணிய தோட்டம், கே.சி. கார்டன் 2-வது தெரு, மக்காரம் தோட்டம், கண்ணகி நகர், கொரட்டூர் ஏரி ஆகிய பகுதிகளில் மக்களுக்கு உணவு வழங்கினார். தயார் செய்யப்பட்டு சூடாக இருந்த உணவுகளை முதல்வர் மக்களுக்கு வழங்கினார்.

பார்வையிட்டார்
கோபாலபுரம் ஆரம்ப பள்ளி, செம்பியம் வியாபாரிகள் சங்கம், நால்வர் கல்யாண மண்டபம், 70 அடி சாலை (சிவ இளங்கோ சாலை) பேப்பர் மில்ஸ் சாலை சந்திப்பு, ஜி.கே.எம். காலனி 24ஏ தெரு, அக்பர் ஸ்கொயர், டெம்பிள் ஸ்கூல் ரோடு, தாதன் குப்பம் குளம், டி.ஆர்.ஜே. ஹைவேஸ் பாயிண்ட், வீனஸ் நகர் 1வது தெரு, ரெட்டேரி தெற்கு பக்கம், ரெட்டேரி ஏரி மற்றும் தணிகாசலம் கால்வாய் ரெட்டேரி வடக்கு பக்கம், கொளத்தூர், விருகம்பாக்கம் கேனால் (வடிகால்), குலசேகரபுரம், விருகம்பாக்கம், 129 குலசேகரபுரம், விருகம்பாக்கம் சஞ்ஜய் காந்தி நகர், மதுரவாயல், நெற்குன்றம்-மேட்டுக்குப்பம் , மதுரவாயல், போரூர் ஆகிய பகுதிகளில் மருத்துவ முகாம், மழை நீர் வெளியேற்ற ஏற்பாடுகளை பார்வையிட்டார்.

கான்வாய்
பொதுவாக முதல்வர் ஹெலிகாப்டரில் களத்திற்கு செல்வதும், தண்ணீர் வடிந்த பின் கான்வாய் மூலம் களத்திற்கு செல்வதும் வழக்கம். ஆனால் முதல்வர் ஸ்டாலின் ஆப் ரோட் வாகனமான சிவப்பு நிற ஜீப் ஒன்றில் மோசமாக பாதிக்கப்பட்ட இடங்களுக்கும் சென்று பார்வையிட்டு வருகிறது. கடந்த 3 மணி நேரமாக தினமும் 9 மணி நேரம் சராசரியாக முதல்வர் களத்தில் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

அதிகாரிகளுக்கு உத்தரவு
மேலும் மழை வரும் என்று கணிக்கப்பட்டுள்ளதால் சென்னையில் நிலைமை மோசமாகும் வாய்ப்புகள் உள்ளன. செம்பரம்பாக்கம், பூண்டி ஏரிகளில் இருந்து உபரி நீர் ஏற்கனவே வெளியிடப்பட்டு வருகிறது. இதனால் பெரிய அளவில் வெள்ளம் ஏற்பட வாய்ப்புகள் இல்லை என்றாலும் சாலைகளில் தண்ணீர் தேங்கும் வாய்ப்புகள் உள்ளன. இந்த நிலையில்தான் அதிகாரிகள் துரிதமாக செயல்பட வேண்டும், தாழ்வான பகுதிகளில் வேகமாக நீரை வெளியேற்ற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

சென்னை
அமைச்சர்கள் சேகர் பாபு, கே என் நேரு, சென்னை மாநகராட்சி ஆணையர், டிஜிபி சைலேந்திர பாபு, தலைமை செயலாளர் இறையன்பு ஆகியோர் முதல்வர் ஸ்டாலினுடன் ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். சென்னையில் நிவாரண பணிகள், வெள்ள தடுப்பு பணிகளை மேற்கொள்ள 15 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மண்டலத்திற்கு 15 அதிகாரிகள் என்று ஒவ்வொரு மண்டலத்திற்கும் சிறப்பு குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications