சென்னையில் பெய்த திடீர் மழை.. பூந்தமல்லியில் தியேட்டர் மேற்கூரை சேதம்! அலறி அடித்து ஓடிய ரசிகர்கள்
சென்னை: ஆவடி, பூந்தமல்லி பகுதிகளில் இன்று மாலை திடீரென சூறாவளி காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழை கொட்டியது. இதனால் பூந்தமல்லியில் உள்ள திரையரங்கு மேற்கூரை சரிந்து விழுந்தது. இதனால் உள்ளே படம் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் அவரச அவசரமாக வெளியேற்றப்பட்டனர். இதனால் ரசிகர்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் கோடைக்காலம் சீசன் நடந்து வருகிறது. உச்சபட்ச வெயில் நிலவும் காலமாக இன்று அக்னி நட்சத்திரம் தொடங்கியது. இதனால் வெயில் உக்கிரம் காட்டும் வகையில் கொளுத்தும். குறிப்பாக பகல் 12 மணியில் இருந்து மதியம் 3 மணி வரை பொதுவாக வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.

திடீரென கொட்டிய மழை
இந்த நிலையில் அக்னி நட்சத்திரத்தின் முதல் நாளே தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை கொட்டத் தொடங்கியது. காலையில் இருந்து பிற்பகல் 3 மணி வரை வெயில் வாட்டி வதைத்த நிலையில் திடீரென மாலை 3.30 மணிக்கு பிறகு கிளைமேட் மாறியது. குறிப்பாக தலைநகர் சென்னையில் மேகமூட்டம் கூடியது.
பலத்த சூறைக்காற்றும் வீசியது. சென்னையில் பல்வேறு இடங்களில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை கொட்டியது. ஆவடி, பூந்தமல்லி, போரூர் உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்தது. திடீர் சூறைக்காற்றால் ஒருசில இடங்களில் மரக்கிளைகள் நொறிந்து விழுந்தன. மின்கம்பங்கள் சரிந்து விழுந்தன. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை கருதி பல இடங்களில் மின் வெட்டு செய்யப்பட்டது.
சரிந்து விழுந்த தியேட்டர் மேற்கூரை
ஒருசில இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்தது. திடீர் என பெய்த மழையால் வெளியில் சென்றிருந்தவர்கள் மழையில் நனையும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் சென்னை பூந்தமல்லியில் உள்ள ஒரு திரையரங்கில் மழையின் காரணமாக மேற்கூரை சரிந்து விழுந்தது. இதனால் தியேட்டருக்குள் அமர்ந்து படம் பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அவர்கள் பதறி அடித்துக்கொண்டு அவசர அவசரமாக வெளியேறினர்.
பூந்தமல்லியில் தனியார் மல்டிபிளக்ஸ் திரையரங்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அருகில் கல்லூரிகள் அதிகம் இருப்பதனாலும், தொழிற்சாலைகள் அதிகம் இருப்பதனாலும் எப்போதும் அரங்கம் நிறைந்த காட்சிகளாகவே இந்த திரையரங்கம் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த திரையரங்கில் மொத்தம் 5 ஸ்கிரீன்கள் உள்ளன. இந்த திரையரங்கம் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பே கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
அவசர அவசரமாக ஓடிய ரசிகர்கள்
தியேட்டரின் முன்பகுதியில் பிளக்ஸ் போர்டுகள் வைக்கும் இடம் உள்ளது. புதுப்படம் திரைக்கு வரும் போது கொண்டாட்டங்கள் இந்த தியேட்டரில் நடைபெறும். இந்த நிலையில் தான் இன்று பெய்த திடீர் சூறைக்காற்றுடன் கூடிய மழைக்கு தாக்குப்பிடிக்காமல் அந்த திரையரங்கின் முன்பகுதி சரிந்து விழுந்துள்ளது. யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டுவிட்டனர்.
தற்போது அந்த தியேட்டர் அருகில் யாரும் செல்லாதவாறு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அருகில் உள்ள காவல் நிலைய போலீசாரும் அங்கு வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தியேட்டர்களில் படம் பார்த்துக்கொண்டு இருக்கும்போது திடீரென தியேட்டரின் மேற்கூரை சரிந்து விழுந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications