உள் தமிழகத்தில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கனமழை பெய்யும்.. சென்னை வானிலை மையம் தகவல்!
Recommended Video
சென்னை: உள் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் தலைக்காட்ட முடியாத அளவுக்கு வெயில் சுட்டெரித்து வருகிறது. கூடவே அனல்காற்றும் வீசுவதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதி அடைந்துள்ளனர்.
ஃபனி புயலுக்கு பிறகு சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டுவந்தது. மேகமூட்டமாக இருந்தபோதும் புழுக்கம் குறையாமல் இருந்துவந்தது.

கொளுத்தும் வெயில்
இந்நிலையில் இன்று வெயில் கொளுத்தி வருகிறது. கொளுத்தும் வெயிலால் சாலைகளில் மக்களின் கூட்டம் வழக்கத்தை விட மிகக்குறைவாகவே உள்ளது.

100 டிகிரி பாரன்ஹீட்
இதனிடையே சென்னையில் வெப்பம் இன்று அதிகரிக்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் சுட்டெரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

கனமழை கொட்டும்
திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் இன்று வெப்பம் அதிகமாக பதிவாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதேநேரத்தில் வெப்பச்சலனம் காரணமாக சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல் உள்ளிட்ட 14 உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலத்த காற்று
உள் மாவட்டங்களில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திற்கு காற்று வீசக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விருதுநகர் மாவட்டம் பிளவக்கல்லில் 4 சென்டிமீட்டரும், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஆகிய இடங்களில் தலா 3 சென்டி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications