வெப்பச்சலனத்தால் இடி மின்னலுடன் 5 நாட்களுக்கு கனமழை அடி தூள் - வானிலை மைய சொன்ன குட் நியூஸ்
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்துள்ளன. வரும் 10ஆம் தேதியன்று வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு.
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக பெய்து வந்த தென்மேற்குப் பருவமழைக்காலம் முடிவுக்கு வரப்போகிறது. வடகிழக்குப் பருவமழைக்காலம் இன்றும் சில நாட்களில் தொடங்க உள்ளது. தமிழ்நாட்டில் பருவமழை பல மாவட்டங்களில் நீடித்து வரும் நிலையில் இன்று முதல் 11ஆம் தேதி வரைக்கும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் திருச்சியில் 9 செமீ மழை பதிவாகியுள்ளது. தேவாலா, பந்தலூரில் தலா 8 செமீ மழை பதிவாகியுள்ளது. சோலையாறு, சென்னை, திருவாடானையில் 4 செமீ மழை பதிவாகியுள்ளது. மகாபலிபுரம், பள்ளிப்பட்டு, ஓசூரில் 3 செமீ மழை பதிவாகியுள்ளது. உசிலம்பட்டி, மதுரை, தேனியில் 2 செமீ மழை பதிவாகியுள்ளது. ஆம்பூர், திருப்பூர், கிருஷ்ணகிரியில் 1 செமீ அளவிற்கு மழை பதிவாகியுள்ளது.

இந்த நிலையில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. வானிலை மைய இயக்குநர் புவியரசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று வட கடலோர மாவட்டங்கள் , கன்னியாகுமரி மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி ,கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் மற்றும் உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளைய தினம் வட மாவட்டங்கள் மற்றும் புதுவை , காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் . தென் மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.
அக்டோபர் 9ஆம் தேதியன்று வட மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழையும் பெய்ய கூடும்.
அக்டோபர் 10 மற்றும் 11 ஆம் தேதி உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும். வரும் 10ம் தேதி மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.
இன்று முதல் வருகின்ற 11ம் தேதி வரை அந்தமான் கடல் பகுதி, தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகள் ,மத்தியகிழக்கு அரபிக்கடல், கர்நாடக கடலோரப் பகுதி ஆகியவற்றில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications