தூத்துக்குடி மாவட்டத்தில் 25செ.மீ கொட்டிய மழை..பள்ளி விடுமுறை அறிவிப்பில் மாவட்ட நிர்வாகம் மெத்தனம்!
சென்னை: சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக வடகிழக்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. அதிலும் சென்னையிலும், கன்னியாகுமரி மாவட்டத்திலும் பலத்த மழை கொட்டியது.
இதனால் சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டன. நாகர்கோவில், அதன் சுற்றுப்புற பல்வேறு பகுதிகளிலும் மழை வெள்ளத்தால் சாலை போக்குவரத்து, ரயில் போக்குவரத்து முடங்கியது.

திருச்செந்தூரில் கனமழை
டெல்டா மாவட்டங்கள், கொங்கு மண்டலம் என பல இடங்களிலும் நல்ல மழை கொட்டியது. தற்போது மதுரை, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை வெளுத்து கட்டியது. மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டி, திருச்செந்தூர், ஆறுமுகநேரி, நாசரேத் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பல மணி நேரம் கனமழை கொட்டி தீர்த்தது.

முருகன் கோவிலுக்குள் வெள்ளம்
அதிலும் ஆன்மிக நகரமான திருச்செந்தூரில் கனமழை கொட்டி தீர்த்துள்ளது. திருச்செந்தூர் முருகன் கோவில் உள்ளே வெள்ளநீர் புகுந்தது. உள் மண்டபத்தில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியது. தூத்துக்குடி நகரில் பலத்த மழையால் பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தூத்துக்குடி ரயில் நிலையத்தில் மழைநீர் தேங்கி தண்டவளங்களை மூழ்கடித்தது. இதனால் சென்னை செல்லும் முததுநகர் எக்ஸ்பிரஸ், தூத்துக்குடி-மைசூரு எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன.

25 செ.மீ மழை பெய்துள்ளது
மாவட்டத்தின் கழுகுமலை, கயத்தாறு, கடம்பூர் உள்ளிட்ட பகுதியிலும் காலை முதல் கனமழை கொட்டியது. பல இடங்களில் குளங்கள் நிரம்பி வழிகின்றன. தூத்துக்குடி மாவட்டத்தில் 25 செ.மீ மழை பெய்துள்ளது. தூத்துக்குடியில் 14 செ.மீ மழை பெய்துள்ளது. காயல்பட்டினத்தில் கடந்த 10 மணி நேரத்தில் 25 செ.மீ மழை பதிவாகியுள்ளது. திருச்செந்தூரில் மட்டும் 20 செ.மீ மழை பெய்துள்ளது. எட்டயபுரத்தில் 19 செ.மீ, குலசேகரப்பட்டினம், ஸ்ரீவைகுண்டத்தில் 14 செ.மீ, சாத்தன்குளத்தில் 11 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மாவட்ட நிர்வாகம் மெத்தனம்
கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டம் உள்பட 9 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் இன்று பலத்த மழை கொட்டியபோதும் தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று காலை விடுமுறை விடப்படவில்லை. அவசரம், அவசரமாக மதியத்துக்கு மேல் மட்டுமே விடுமுறை விடப்பட்டது. இதனால் மாணவ, மாணவிகள் முழங்கால் அளவுக்கு தண்ணீரில் நடந்து வீட்டுக்கு திரும்பினர்கள். பெற்றோர்களும் மாணவ-மாணவிகளை மிகுந்த சிரமத்துடன் வந்து அழைத்து சென்றனர். இரவில் இருந்தே மழை பெய்தபோதும் மாவட்ட நிர்வாகம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடாதது ஏன்? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.












Click it and Unblock the Notifications