ராமர் கோயில் குடமுழுக்கு! பாஜக புகாருக்கு குட்டு வைத்த நீதிபதி.. உதவிய தமிழக அரசின் செம பாயிண்ட்!
சென்னை: ராமர் கோவில் குடமுழுக்கு நிகழ்ச்சியை யொட்டி இன்று கோயில்களில் சிறப்பு பூஜைகள், பஜனைகள் நடத்த தடை விதிக்கவில்லை என தமிழக அரசு வாதத்தை நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் ஏற்றார்.
அயோத்தியில், ராமர் கோவில் குடமுழுக்கு நிகழ்ச்சியை முன்னிட்டு, சென்னை பட்டாபிராமில் உள்ள தனியார் மண்டபத்தில் பஜனைகள், அன்னதானம் நடத்த அனுமதி மறுத்த காவல் துறையினரின் உத்தரவை எதிர்த்து விவேகானந்தா இந்து இயக்கம் சார்பில் அதன் தலைவர் கணபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், அயோத்தி செல்ல இயலாத பக்தர்களுக்காக பஜனை, அன்னதான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த நிலையில் அனுமதி பெறவில்லை எனக் கூறி, நிகழ்ச்சியை நடத்தக் கூடாது என அறிவுறுத்தியதாக தெரிவித்துள்ளார்.
உடனடியாக அனுமதி கோரி விண்ணப்பித்த போது, ஏழு நாட்களுக்கு முன் விண்ணப்பிக்கவில்லை என்றும், திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படக் கூடும் எனவும் கூறி அனுமதி மறுத்து நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் மண்டபத்தில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் எந்த மதத்தை பற்றியும் விவாதிக்கவில்லை என்றும், மற்ற மதத்தினர் வசிக்கும் பகுதி என்பதால் இந்த நிகழ்ச்சியை தடுக்க முடியாது என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவை அவசர வழக்காக நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் இன்று காலை விசாரித்தார். அப்போது மனுதாரருக்கு அனுமதி வழங்கப்பட்டு விட்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதி, ராமர் கோயில் குடமுழுக்கை ஒட்டி பஜனை, சிறப்பு பூஜை நடத்துவோர் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.
சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் வகையில் பஜனைகள், அன்னதானம் நடத்துவோர் செயல்படக் கூடாது. பக்தி என்பது அமைதி, மகிழ்ச்சிக்காக மட்டுமே, சமூகத்தில் உள்ள சமநிலையை சீர்குலைப்பதற்காக அல்ல என்பதை அனைவரும் உணர வேண்டும். கோயில்களில் இன்று சிறப்பு பூஜைகள், பஜனைகள் நடத்த தடை விதிக்கவில்லை என்ற தமிழ்நாடு அரசு வாதத்தை நீதிபதி ஏற்றார்.












Click it and Unblock the Notifications