செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லலாம்.. ஐகோர்ட் நிபந்தனையுடன் அனுமதி!
சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் நிபந்தனைகளுடன் அமெரிக்கா செல்ல அனுமதி அளித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார், சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 13 பேரில் ஒருவர். இந்த வழக்கு சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. அமலாக்கத்துறை இவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கில் அமலாக்கத்துறை சுமார் 5000 பக்கங்கள் கொண்ட ஆவணங்களை தாக்கல் செய்துள்ளது.

அசோக் குமார் அமலாக்கத்துறையின் சம்மன்களுக்கு ஆஜராகவில்லை. அதன் பிறகு அவர் தீவிரமாக தேடப்பட்டு வந்த நிலையில் தலைமறைவானார். 2 ஆண்டு தலைமறைவு வாழ்க்கைக்குப் பிறகு கடந்த ஏப்ரல் மாதம் அவர் கோர்ட்டில் ஆஜர் ஆனார். அதன் பின்னர், அவர் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றார்.
செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார், இதய சிகிச்சை மேற்கொள்ள அமெரிக்கா செல்ல அனுமதி கோரி சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த மனுவை தள்ளுபடி செய்து முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, அசோக்குமாா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ஜான் சத்யன், மருத்துவரின் பரிந்துரைக் கடிதத்தை தாக்கல் செய்தார். இதையடுத்து அசோக்குமார் அமெரிக்கா செல்ல அனுமதித்தால் என்னென்ன நிபந்தனைகளை விதிக்கலாம் என அமலாக்கத்துறை பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில், இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆஜரான அமலாக்கத்துறை வழக்கறிஞர், நிபந்தனைகள் அடங்கிய பட்டியலை தாக்கல் செய்தார். மனுதாரா் மனைவியின் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
அப்போது அசோக் குமாா் தரப்பில் வரும் செப்டம்பர் 4-ஆம் தேதி அமெரிக்காவில் சிகிச்சைக்கு அனுமதிக்க வேண்டும். மனுதாரர் உடன் அவரது மனைவியும் செல்ல உள்ளார். மேலும் அசோக்குமாரின் மகள் இங்கு இருக்கப் போகிறார். அவருடைய பாஸ்போர்ட்டை ஒப்படைக்கத் தயார் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், விசாரணை நீதிமன்றத்தில் ஐந்து லட்சம் ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும் எனவும், மகளின் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு அசோக்குமார் அமெரிக்கா செல்ல அனுமதி அளித்தனர்.












Click it and Unblock the Notifications