ரூ. 4 கோடி வழக்கில் கேசவ விநாயகத்துக்கு சிக்கல்.. விசாரணைக்கு தடை விதிக்க முடியாது.. ஐகோர்ட் அதிரடி!
சென்னை: ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் பாஜக மாநில அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகத்தை விசாரிக்க தடை விதிக்க முடியாது என சென்னை ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது.
லோக்சபா தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை 5 கட்ட தேர்தல்கள் முடிவடைந்துள்ளன. நாளை 6ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் முடிவடைந்தது. தேர்தலுக்கு முன்பாக சென்னையில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் 4 கோடி ரூபாய் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் வாக்காளர்களுக்கு வினியோகிப்பதற்காக பணம் கொண்டு செல்லப்படுவதாக வந்த தகவலை அடுத்து, தேர்தல் பறக்கும் படையினர் தாம்பரம் ரயில் நிலையத்தில் சோதனை நடத்தினர்.
அப்போது ரூ.4 கோடி பணம் சிக்கியது. இந்தப் பணம் பாஜகவின் திருநெல்வேலி மக்களவை தொகுதி வேட்பாளர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏவுக்கு சொந்தமானது என புகார் எழுந்தது. காரணம், அந்த பணத்தை கொண்டு சென்றவர்கள் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஹோட்டலில் பணியாற்றுபவர்கள்.
இதுகுறித்து தாம்பரம் போலீசார் பதிவு செய்த வழக்கு, சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது. இது தொடர்பாக சென்னை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை பாஜக பிரமுகர் கோவர்தன் உள்பட 15க்கும் மேற்பட்டவர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 4 கோடி பறிமுதல் தொடர்பாக பல இடங்களில் போலீசார் சோதனையும் மேற்கொண்டுள்ளனர். குறிப்பாக பாஜக நிர்வாகி கோவர்தன் வீடு, ஹோட்டலில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
விரைவில் பாஜக எம்.எல்.ஏவும், நெல்லை லோக்சபா தொகுதி வேட்பாளருமான நயினார் நாகேந்திரனிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொள்ள வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. இந்நிலையில் தான் வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் தமிழக பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் 2 பேருக்கு சம்மன் அனுப்பினர்.
பாஜக மாநில அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம், பாஜக மாநில பொருளாளர் எஸ்ஆர் சேகருக்கு சிபிசிஐடி சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது. அந்த சம்மனில் ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
ரூ.4 கோடி நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது என தகவல்கள் வந்த நிலையில் கேசவ விநாயகம், எஸ்ஆர் சேகர் உள்ளிட்டோர் விசாரணைக்கு அழைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. பாஜக மாநில பொருளாளர் எஸ்ஆர் சேகர் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணையை மேற்கொண்டனர். அதேசமயம், பாஜக மாநில அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் இன்னும் ஆஜராகவில்லை.
இந்த நிலையில், ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று பாஜக மாநில அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
சென்னை ஐகோர்ட்டில் கேசவ விநாயகம் தாக்கல் செய்துள்ள மனுவில், தமிழ்நாட்டில் பா.ஜ.கவுக்கும், எங்களது பெயருக்கும் களங்கும் விளைவிக்கும் வகையில், இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. எந்தக் காரணமும் இல்லாமல் அனுப்பப்பட்ட சம்மனை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியுள்ளார்.
மேலும், பறிமுதல் செய்யப்பட்ட ரூபாய் 4 கோடி பணத்துக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. அரசியல் உள்நோக்கத்தோடு நடத்தப்படும் இந்த வழக்கின் புலன் விசாரணை சட்ட விரோதமானது என்பதால், இந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
இந்த மனு நீதிபதி சி.சரவணன் முன்பு இன்று விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் கேசவ விநாயகம் சார்பில் வழக்கறிஞர் ஆஜராகி வாதிட்டார். அப்போது, சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மூன்று பேருக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லாத நிலையில் தனக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக கூறினார்.
சிபிசிஐடி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கேசவ விநாயகத்திற்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்படாத நிலையில் இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அவர் மனு தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்தார்.
அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இடைக்கால நிவாரணமாக இந்த விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என உத்தரவிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் மூன்றாம் தேதிக்கு தள்ளிவைத்தார்.












Click it and Unblock the Notifications