எஸ்.ஐ தேர்வில் மூன்றாம் பாலினத்தவருக்கு இடஒதுக்கீடு.. ஐகோர்டில் வழக்கு! தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
சென்னை: காவல் உதவி ஆய்வாளர் தேர்வில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சிறப்பு இடஒதுக்கீடு வழங்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்குமாறு, தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்துக்கும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் தமிழ்நாடு காவல் துறையில் காலியாக உள்ள 615 உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்குமாறு விண்ணப்பங்களை வரவேற்று கடந்த மே 5 ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. இந்த நிலையில் கிரேஸ் பானு மற்றும் ரிஸ்வான் பாரதி ஆகியோர் மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் காவல் உதவி ஆய்வாளர் பணியில் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.

அவர்கள் தாக்கல் செய்த பொது நல மனுவில், "தமிழ்நாட்டில் காவல் துறையில் காலியாக உள்ள 615 உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்று, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மே 5ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. சீருடைப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட அந்த அறிவிப்பில், மூன்றாம் பாலினத்தவர்கள் தங்கள் பாலினத்தை ஆணாகவோ, பெண்ணாகவோ தேர்வு செய்து கொள்ளலாம்.
பெண்ணாக தேர்வு செய்தவர்களுக்கு மகளிருக்கான 30 சதவீத இட ஒதுக்கீடு பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பு சலுகை வழங்கப்பட்டுள்ள நிலையில், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு எந்த சலுகையும் வழங்கப்படவில்லை.
அதேபோல உடற் தகுதித் தேர்விலும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சலுகை வழங்கப்படவில்லை. எந்த தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட தேர்வு அறிவிப்பாணையை ரத்து செய்து, மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் சலுகைகளை வழங்கி திருத்த அறிவிப்பு வெளியிட உத்தரவிட வேண்டும். அதில் சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும்." என மனுவில் கோரிக்கை விடுத்து இருந்தனர்.
இந்த மனு தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வயது வரம்பு சலுகையும், சிறப்பு இட ஒதுக்கீடும் வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை கேட்ட நீதிபதிகள் அந்த உத்தரவுகள் அனைத்துமே பரிந்துரைகள் போன்றவை எனத் தெரிவித்தனர். இந்த மனுவுக்கு செப்டம்பர் 26 ஆம் தேதிக்குள் தமிழக அரசும், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையமும் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications